இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டும், இன்றும் முழுமையான விளக்கம் கிடைக்காத பல இயற்கை நிகழ்வுகள், அறிவியல் ஆர்வலர்களையும், புதிர் ஆர்வலர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் பேய் விளக்குகள் என்று அறியப்படும் மார்ஃபா விளக்குகள் இயற்கையின் மர்மங்களில் ஒன்றாக தொடர்ந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸில் மார்ஃபா நகரத்தில் காணப்படும் இந்த மர்மமான ஒளி நிகழ்வு, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை வியப்படையவும், அச்சமடையவும் செய்கிறது. சரியாகச் சொன்னால் 140 ஆண்டுகள்! இந்த மர்மமான நிகழ்வை முதன்முதலில் யாரோ ஒருவர் கவனித்து ஆவணப்படுத்தினார். ஆனால் இன்றுவரை மர்மம் விலகாத, அமானுஷ்ய ஒளியாக ஒளிரும் விநோதமான மார்ஃபா விளக்குகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.


பந்து போல் காட்சி அளிக்கும் மார்ஃபா விளக்குகள்

மார்ஃபா விளக்குகளின் தோற்றம் மற்றும் இயல்புகள் :

பொதுவாக இந்த விளக்குகள் பந்து போன்ற வடிவத்தில் காணப்படும். சில நேரங்களில் ஒன்றாகவும், சில நேரங்களில் பல ஒளிக்கோளங்களாகவும் தெரியும். விளக்குகளின் அளவு சிறிய பந்து முதல் கார் விளக்கு அளவு வரை மாறுபடும். சில நேரங்களில் இரண்டாகப் பிரிந்து, பின் ஒன்றாக இணையும். மேகமூட்டமான இரவுகளில் கூட இந்த விளக்கு தெளிவாகத் தெரியும். இதுதான் மார்ஃபா விளக்குகளின் இயல்பான தோற்றமாகும்.

மார்ஃபா விளக்குகளும் அதன் வரலாற்று பின்னணியும்

மார்ஃபா விளக்குகள் என்பவை டெக்சாஸ் மாநிலத்தின் மார்ஃபா நகருக்கு அருகே, பிரெசிடியோ மாவட்டத்தில் தோன்றும் மர்மமான ஒளிக் கோளங்கள் ஆகும். இவை இரவு நேரங்களில் தோன்றி, பல்வேறு வண்ணங்களில் மின்னி, நகர்ந்து, மறைந்து போகும் தன்மை கொண்டவை. முன்னொரு காலத்தில் இந்தியர்கள் இந்த விளக்குகளை "கோஸ்ட் லைட்ஸ் " என்று அழைத்தனர். அதன்பிறகு 1883-ம் ஆண்டு ரோபர்ட் எல்லிசன் என்ற ரயில்வே பணியாளர் முதன்முதலில் இவற்றை ஆவணப்படுத்தி உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இரண்டாம் உலகப்போரின் போது விமானிகள் பயிற்சி மையத்தில் பணியாற்றியவர்களும் இந்த விளக்குகளைக் கண்டுள்ளனர்.

மார்ஃபா விளக்குகளின் பண்புகள்

பெரும்பாலும் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில்தான் இந்த விளக்குகள் தெரிகின்றன. இவை சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. இந்த விளக்குகள் சில நிமிடங்கள் முதல் பல மணி நேரம்வரை கண்ணுக்கு தெரியக்கூடியவை. பூமிக்கு மேலே 6 முதல் 12 அடி உயரத்தில் இந்த விளக்குகள் மிதக்கின்றன. இவை ஒரே இடத்தில் இல்லாமல் தன்னுடைய திசைகளை மாற்றி மாற்றி நகர்கின்றன.

மார்ஃபா விளக்குகளின் அறிவியல் விளக்கங்கள்

விஞ்ஞானிகள் பல்வேறு கோணங்களில் இந்த நிகழ்வுக்கான காரணங்களை ஆராய்ந்துள்ளனர். முதலில் வானிலை மண்டல விளைவுகள் வெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஒளி பிரதிபலிப்பால் இந்த விளக்குகள் மின்னுகின்றன. பிறகு காற்றழுத்த மாற்றத்தாலும் இவை நடக்கலாம் என்று கூறுகின்றனர். அதன்பிறகு இயற்கை வாயுக்களாலும் இதுபோல் நடக்கலாம் என்று கூறுகின்றனர். பூமியின் அடியில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுக்களாலும் இப்படி நடக்கலாம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மார்ஃபா விளக்குகளின் சிறப்பு அம்சங்கள்

பொதுவாக இந்த விளக்குகள் எந்த பொருளுடனும் மோதுவதில்லை. குறிப்பாக நெருங்கிச் செல்ல முயன்றால் தொலைவில் நகர்ந்து செல்கின்றன. அதுமட்டுமில்லாமல் கேமராக்களில் பதிவாகும்போது வித்தியாசமான தோற்றத்தைக் காட்டுகின்றன. இன்னும் சில நேரங்களில் ரேடார் கருவிகளில் கூட பதிவாகின்றன. இவை பொதுவாக எங்கு காணப்படுகின்றது என்றால் மார்ஃபா நகரிலிருந்து 9 மைல் கிழக்கே உள்ள U.S. Route 67 சாலையில் மற்றும் பிரெசிடியோ மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் சின்னாட்டி மலை மற்றும் மிட்செல் பீடபூமி சுற்றுப்புற இடங்களில் காணப்படுகின்றன.


காடுகளுக்கு நடுவில் தோன்றும் மார்ஃபா விளக்குகள்

மார்ஃபா விளக்குகளின் சுற்றுச்சூழல் விளைவுகள்

விளக்குகள் தோன்றும்போது விலங்குகள் எல்லாம் அமைதியாகிவிடும் என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் பறவைகள் தங்கள் பறக்கும் பாதையை மாற்றிக்கொள்ளும். இதுமட்டுமில்லாமல் சில நேரங்களில் வானொலி மற்றும் செல்ஃபோன் சிக்னல்களில் தடைகள் ஏற்படும் என்று கூட கூறுகிறார்கள். பிறகு அருகில் உள்ள காந்த கருவிகள் வித்தியாசமாக செயல்படும் என்றும் உள்ளூர் வாசிகள் கூறி வருகின்றனர்.

மார்ஃபாவில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்

முதன்முதலாய் 1973-ம் ஆண்டு டிசம்பர் 5 அன்று முதல் ஒளி தோன்றியது. இந்த நிகழ்வவை 200க்கும் மேற்பட்ட சாட்சிகள் பார்த்துள்ளனர். 3 மணி நேரம் தொடர்ந்து தெரிந்ததாக கூறுகின்றனர். இந்த நிகழ்வு பல கேமராக்களில் பதிவானது. இதுதான் இந்த விளக்கை பற்றி பத்திரிகைகளில் வெளியான முதல் பெரிய செய்தி. அதன்பிறகு 1985-ம் ஆண்டு இந்த விளக்குகள் தெரிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த முறை விஞ்ஞானிகள் குழு நேரில் இந்த சம்பவத்தை பார்த்தனர். முதல் முறையாக இம்முறை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டது. இதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. பல ஆய்வு அறிக்கை இதன்மூலம் வெளியிடப்பட்டது.


மார்ஃபா விளக்குகள் வீடியோ ஆவணப்படுத்தப்பட்டபோது

பார்வையாளர்களின் அனுபவங்கள்

பலர் இந்த விளக்குகளை நடனமாடும் விளக்குகள் என வர்ணிக்கின்றனர். இன்னும் சிலர் இவை தங்களை பின்தொடர்வதாக கூறி வதந்தியை பரப்பி வருகின்றனர். இந்த விளக்குகளின் நிறம் மற்றும் பிரகாசம் ஒவ்வொரு பார்வையாளருக்கும் வித்தியாசமாகத் தெரிகிறது. மேலும் பல பார்வையாளர்கள் விளக்குகளுடன் தொடர்பு கொள்ள முடிவதாகக் கூறி பல சுவாரஸ்யமான கதைகளை கூறுகின்றனர்.

Updated On 19 Nov 2024 3:13 AM GMT
ராணி

ராணி

Next Story