மாலை நேரம் வந்துவிட்டாலே பெரும்பாலானவர்கள் தேடுவது வகைவகையான ஸ்நாக்ஸ் ஐட்டங்களைத்தான். அப்படி தேடும் ஸ்நாக்ஸ் வகைகளில் பிரதானமாக இருப்பது டீயுடன் கூடிய வடை, சமோசா, பஜ்ஜி போன்றவைதான். அந்த வகையில் இன்று நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் நாம் காண இருப்பது மக்கள் அனைவரும் டீயுடன் சேர்த்து விரும்பி சாப்பிடும் மொறுமொறு மசால் வடையைத்தான். மசால் வடை சுடுவது யாருக்கும் தெரியாதா என்ன என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சிலருக்கு மசால் வடை சுட தெரிந்தாலும் மொறுமொறுவென சுடுவதில் சில ட்ரிக்ஸ் இருப்பது தெரிவதில்லை. அது என்ன ட்ரிக்ஸ் என்பதை கூறி செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திருமதி. காயத்ரி சந்திரசேகர்.
மசால் வடை செய்முறை
கடலை பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு ஆகிய மூன்றையும் ஒரு மணி நேரத்துக்கு ஊற வைத்து மிக்சியில் ஒன்றுக்கு இரண்டாக கொஞ்சம் தண்ணீர் விட்டு கொரகொர பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவில் வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி அகியவற்றை பொடியாக நறுக்கி போட்டுக்கொள்ளவும். இதற்கு முன்பாகவே மிளகாய் வத்தல், பெருங்காயம், உப்பு ஆகியவற்றையும் மிக்சியில் சுத்தி எடுத்து அதனுடன் கலந்துகொள்ளவும்.
மசால் வடைக்கான மாவு பதம்
வடைக்கான மாவு தயாரானதும் அடுப்பை பற்றவைத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், வடை மாவை சிறிது சிறிதாக கையில் தட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் மொறுமொறு மசால் வடை ரெடி.
மசால் வடை சிறப்புகள்
மசாலா வடையில் உள்ள மசாலாப் பொருட்கள் மற்றும் வெங்காயம், அதற்கு தனித்துவமான சுவையைத் தரக்கூடியது.
இதனை மாலை நேரங்களில் டீயுடன் சாப்பிடலாம். காலை டிபன், சிற்றுண்டி, சாதம் ஆகியவற்றிற்கு சைடு டிஷ்ஷாகவும் வைத்து சாப்பிடலாம்.
ப்ளேடிங் செய்யப்பட்ட மொறு மொறு மசால் வடை
பள்ளிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னேக்ஸ் இது.
மசால் வடையில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
