இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய வாழ்க்கை சூழலில் ஆரோக்கியமான உணவு முறை என்பது குறைந்துகொண்டே வருகிறது. எல்லாம் பேச்சளவில் மட்டும்தானே தவிர, செயலளவில் யாரும் பின்பற்றுவதில்லை. இந்துத்துவ வழிபாட்டு முறைப்படி நமது முன்னோர்கள் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு நாளைக்கும் ஒரு நவதானியத்தை படைக்க வேண்டி வகுத்துள்ளனர். இந்த முறைகள் வழிபாட்டுக்கென்று வகுக்கப்பட்டிருந்தாலும் உண்மையிலேயே நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நவதானியங்கள் மிகவும் உகந்தவை. அந்த வகையில், நவதானிய கட்லட் செய்வது எப்படி என பார்ப்போம்.



நவதானிய கட்லட் செய்முறை

வெள்ளை, கருப்பு மூக்கடலை, ராஜ்மா, வேர்க்கடலை, சோயா, மொச்சை, வெள்ளை, கருப்பு காராமணி என ஒன்பது தானியங்களை தேவையான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை தண்ணீரில் நன்கு கழுவி, குறைந்தது ஏழு எட்டு மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.

குக்கர் சூடு ஆறியவுடன் தண்ணீரை முழுவதும் வடித்து விட்டு எடுத்துக்கொள்ளவும்.


நவதானிய கலவையை கட்லட் செய்வதற்காக தயார்படுத்தல்

பின்னர் வேகவைத்த நவதானியங்களை மிக்சியில் போட்டு அரைத்து மாவாக எடுத்துக்கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அதனை நமக்கு ஏற்ற வடிவத்தில் தட்டி, கரைத்து வைக்கப்பட்டுள்ள கோதுமையில் முக்கி, சம்பா ரவையில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.


சம்பா ரவையில் பிரட்டப்படும் கட்லட் கலவை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நவதானிய கட்லட்டை போட்டு பொரித்து எடுத்தால் ஆரோக்கியமான சுவையான கட்லட் தயார்.

இப்பொழுது குழந்தைகளுக்கு இந்த கட்லட்டை பரிமாறினாள் சிறுதானியங்களை விரும்பாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் எளிதாக கிடைக்கும்.


கடாயில் தயாராகும் சுவையான நவதானிய கட்லட்

நவதானியங்களில் உள்ள சத்துக்கள்

ஒவ்வொரு தானியத்திலுமே ஊட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நம் முன்னோர்கள் அவர்களின் உணவு பழக்கங்களில் அதிக அளவிலான தானியங்களை பயன்படுத்தியதால்தான் எந்தவித நோய்நொடியும் இன்றி நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்று நம் மாறுபட்ட உணவுமுறைகளால் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்து பல நோய்களுக்கும் ஆளாகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் உடலை வலுவானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்துக்கொள்ள நவதானியங்கள் பெரிய அளவில் உதவி செய்கின்றன.

நவதானியங்களில் கிளைசிமிக் இன்டெக்ஸ் என்று சொல்லப்படக்கூடிய மாவுச்சத்து குறைவாக உள்ளது. இவற்றை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும் பொழுது நமது இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களில் இருந்து விடுபட உதவி செய்கிறது. குழந்தைகளும் தானியங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் பொழுது அவர்களின் உடலுக்கும், மூளைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைத்துவிடுகின்றன.

Updated On 4 Nov 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story