இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தீபாவளிக்கு நமது வீடுகளிலேயே பலகாரம் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இனிப்பு, காரம் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்வார்கள். ஆனால் தற்போது தீபாவளிக்கு கடைகளில் பலகாரங்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. அப்படி இருக்கும் நிலையில் சிவப்பரிசி, கவுனி அரிசி, கம்பு, கேழ்வரகு போன்ற பாரம்பரிய தானியங்களை பயன்படுத்தி சுவையான மற்றும் உடல் வலிமைக்கு ஏற்ற பலகாரங்களை வீட்டிலேயே செய்வது எப்படி என சொல்லிக்கொடுத்து விளக்கம் அளிக்கிறார் சமையல் கலைஞர் சீதாராமன். அந்த வகையில் கவுனி அரிசி முறுக்கு மற்றும் ஜவ்வரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி என பார்க்கலாம்.


கருப்பு கவுனி அரிசி முறுக்கு செய்முறை :

கருப்பு கவுனி அரிசியை 2 கப் எடுத்து 6 மணி நேரத்துக்கு ஊற வைத்து, நன்கு காயவைத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு முறுக்கு மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் பச்சரிசி 1 கப் மற்றும் கருப்பு உளுந்து 1/2 கப் எடுத்து தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைத்து, இரண்டையும் உலர்த்தி தனித்தனியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


ஒரு பாத்திரத்தில் அரைத்து எடுத்த எல்லா மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துக்கொள்ள வேண்டும்.


அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், முறுக்கு மாவை எடுத்து அச்சில் வைத்து பிழிந்து எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் எடுத்தால் சூடான சுவையான கவுனி அரிசி முறுக்கு ரெடி!


கொழுக்கட்டை செய்முறை :

நைலான் ஜவ்வரிசி 200 கிராம் எடுத்து 3 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை வடித்து உப்பு சிறிதளவு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு சிறிது சிறிதாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துக்கொள்ள வேண்டும்.


ஒரு வாழை இலையில் நெய் தடவி, ஜவ்வரிசிக்கு உள்ளே பூரணம் வைத்து உருட்டிக்கொள்ள வேண்டும். எல்லா உருண்டைகளையும் செய்து முடித்த பிறகு இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் வாழை இலையை வைத்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.


இதற்கிடையில் தேங்காய் பால் எடுத்து, அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகியவற்றை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக வேக வைத்துள்ள கொழுக்கட்டையை எடுத்து தேங்காய் பால் கலவையில் 20 நிமிடங்கள் ஊற வைத்து பரிமாறலாம்.

Updated On 5 Nov 2024 12:12 AM IST
ராணி

ராணி

Next Story