இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கனமான, தட்டையான ப்ரெட்டின்மீது சீஸ், சாஸ், காய்கறிகள், இறைச்சி மற்றும் பலவகையான டாப்பிங்ஸ்களை ஜனரஞ்சகமாகத் தூவி, பிடித்த ஃப்ளேவர்களில் பிடித்த வடிவங்களில் கொஞ்ச நேரத்திலேயே செய்து சாப்பிடக்கூடிய உணவு. அதேசமயம் நீண்டநேரம் பசிக்கவும் செய்யாது. இப்படி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உலகளவில் பலரின் விருப்ப உணவுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது பீட்சா. ஆனால் ஃபாஸ்ட் புட்ஸ்களை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவர்களின் லிஸ்ட்டில் கட்டாயம் பீட்சா இடம்பெற்றிருக்கும். ஆரம்பத்தில் ஆரோக்கியமான உணவுகளின் லிஸ்ட்டில் இருந்த பீட்சா, பின்னாளில் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவாக மாறியது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? சரி, பீட்சா எங்கு முதன்முதலில் உருவாக்கப்பட்டது? எந்த பகுதியிலிருக்கும் மக்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையை கொடுக்கும் விதமாகவே ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதி தேசிய பீட்சா தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு சாதாரண உணவு உலகளவில் பிடித்த உணவாக மாறியது எப்படி? பீட்சா பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க!

பீட்சா வரலாறு!

பீட்சா உருவான கதையை திரும்பி பார்த்தோமானால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்நோக்கி செல்லவேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை தென்னிந்தியா மற்றும் வட இந்தியா என இரண்டு பிராந்தியங்களாக பிரிக்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல் நமது உணவுப்பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் எப்படி அரிசி சாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதுபோல் வட இந்தியாவில் சப்பாத்தி முக்கிய உணவாக பார்க்கப்படுகிறது. அதுபோல், கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் எகிப்தியர்களுக்கு பழங்காலம் முதலே பிரதான உணவாக கருதப்படுவது திக்கான ஃப்ளாட் ப்ரெட்கள்தான். மேற்கத்திய நாடுகளில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்குமென்பதாலும், அதனால் அடிக்கடி உணவுக்காக வெளியே செல்லமுடியாது என்பதாலும் அவர்கள் திக்கான பெரிய ப்ரெட்களை இறைச்சி வகைகளுடன் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அப்படி பெரிய ஃப்ளாட் ப்ரெட்களில் இருந்து தொடங்கியதுதான் இந்த பீட்சா கதை. இத்தாலி நாட்டின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் பரபரப்பான நகரங்களில் ஒன்று நேபிள்ஸ். இங்கு கடற்கரைக்கு வந்துபோகிறவர்கள் சாப்பிடுவதற்கு சுலபமாக, அதேசமயம் நீண்டநேரம் உணவுக்காக காத்திருக்காத வகையில் எளிதில் செய்யக்கூடிய உணவாக ஃப்ளாட் ப்ரெட்களின்மீது தக்காளி, சீஸ், பூண்டு மற்றும் மீன் ஆகியவற்றை எண்ணெயுடன் சேர்த்து பரப்பி அதை அப்படியே வேகவைத்து விற்றனர். இதன் விலை மலிவாக இருப்பதாலும் சீக்கிரத்தில் கிடைக்கக்கூடிய உணவாக இருப்பதாலும் நிறையபேர் இதை விரும்பி உண்ன ஆரம்பித்தனர். இப்படி 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கியது பீட்சாவுக்கான அடித்தளம். ஆனால் அதற்கு முன்பிருந்தே, அதாவது 10ஆம் நூற்றாண்டிலிருந்தே இதன் முன்னோடி உணவுகள் அங்கு விரும்பி சாப்பிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, 1800ஆம் ஆண்டு இத்தாலிய ராணி மார்கெரிட்டா மற்றும் மன்னர் உம்பர்டோ ஆகியோர் தங்களுடைய நாட்டை சுற்றிபார்க்க சென்றபோது அங்குள்ள கிராமங்களில் தயாரிக்கப்படும் பீட்சாவை சாப்பிட்டு பார்த்த ராணி, தன்னுடைய அரண்மனையிலும் அதனை செய்துகொடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம். குறிப்பாக ராணிக்காக, சீஸ் மற்றும் தக்காளி சாஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட பீட்சாவானது பின்னாளில் அனைவராலுமே விரும்பி உண்ணப்பட்டது.


இத்தாலியின் நேபிள்ஸ் கடற்கரையில் பிரசித்தமாக இருந்த சுவையூட்டப்பட்ட தட்டை ப்ரெட்கள்

இத்தாலியின் மேற்கு கடற்கரை பகுதிகளில் பிரசித்தமான உணவாக பார்க்கப்பட்ட இந்த சுவையூட்டப்பட்ட தட்டை ப்ரெட்கள் குறித்து 1940 வரை அங்குள்ளவர்களைத்தவிர பலரும் அறிந்திருக்கவில்லை. அங்குள்ள மக்கள் அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேறு நாடுகளுக்கு செல்ல செல்ல அங்கும் தங்களுக்கு பிடித்த உணவாக இந்த சுவையூட்டப்பட்ட ரொட்டியையும் அறிமுகப்படுத்தினர். இப்படி ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் மான்ஹாட்டன் பகுதியிலுள்ள கடைகளில் பீட்சா மிகவும் பிரபலமான உணவாக விற்கப்பட்டது. குறிப்பாக, ஒவ்வொரு பகுதிகளில் வசிக்கும் மக்களும் தங்களுக்கு விருப்பமான சாஸ், டாப்பிங்ஸ், காய்கறிகள் மற்றும் இறைச்சிகளை பயன்படுத்தி பீட்சா செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக, உணவுக்கு பெரிதாக செலவழிக்க முடியாத அன்றாட வேலைசெய்யும் ஏழைகளுக்கு ஏற்ற உணவாக பார்க்கப்பட்டது பீட்சா.

பீட்சா வகைகள்

ராணி மார்கெரிட்டா விரும்பி சாப்பிட்டதாலேயே மொஸரல்லா சீஸ் மற்றும் தக்காளி சாஸ் கொண்டு தயாரிக்கப்படும் பீட்சாவுக்கு அவருடைய பெயரே வைக்கப்பட்டது. அடுத்து அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் பெப்பரோனி பீட்சா. இதில் முக்கியமான டாப்பிங்காக இறைச்சித்துண்டுகள் பயன்படுத்தப்படும். மேலும் இதில் காரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இது இப்போது உலகளவில் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய வகைகளில் ஒன்றாக இருக்கிறது. இத்தாலியின் பாரம்பரிய பீட்சா வகைகளில் ஒன்று நியோபோலிடன். அதாவது விறகடுப்பில் சுட்டு எடுக்கப்படும் இந்த பீட்சாவின் சுவை மற்றவகை பீட்சாக்களிலிருந்து வேறுபட்டு, தனித்துவத்தை காட்டுகிறது. மேலும் இத்தாலியின் பாரம்பரிய முறைப்படி செய்வதுதான் நியோபோலிடன் பீட்சாவின் தனிச்சிறப்பு.


ராணி மார்கெரிட்டாவால் விரும்பி உண்ணப்பட்ட பீட்சா

இத்தாலியிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள் தங்களுடைய பாரம்பரிய சுவையை விட்டுக்கொடுக்க மறுத்தபோது, அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது சிகாகோ டீப் டிஷ் பீட்சா. அதாவது தட்டை ப்ரெட்களின் ஓரங்களை சற்று உயர்த்தி தடிமனாக்கி அதன்மீது மொஸரெல்லா சீஸை கணிசமாக தூவி, அதன்மீது இறைச்சி மற்றும் காய்கறிகளின் டாப்பிங்ஸுடன் எக்கச்சக்க தக்காளி துண்டுகளை போட்டு செய்யப்படும் வகை இது. அடுத்து குவாட்ரோ ஃபார்மேகி பீட்சா என்று சொல்லப்படுகிற, கொஞ்சம் இனிப்புசுவை கலந்த பீட்சா. அதாவது மற்ற பீட்சாக்களில் பயன்படுத்தப்படும் பொருட்களுடன் பாலாடைக்கட்டிகளை துருவியோ அல்லது சிறிதுசிறிதாக கட் செய்தோ சேர்ப்பது. குறிப்பாக, இதில் சீஸ் அதிகமாக சேர்க்கப்படும். இவை உலகளவில் பிரபலமான பீட்சா வகைகளாக பார்க்கப்பட்டாலும் இந்தியாவில் பார்பிக்யூ சிக்கன் பீட்சா, ஜொரேபியன் சிக்கன் பெப்பரோனி பீட்சா, சிக்கன் ஆல்ஃப்ரடோ பீட்சா போன்றவை பெரும்பாலானவர்களால் விரும்பி உண்ணப்படுகின்றன. இவற்றில் அதிகளவில் சீஸ், சிக்கன், காளான் மற்றும் காரசாரமான சாஸ்கள் சேர்க்கப்படுகின்றன. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் சுவைக்கு ஏற்ப பீட்சா டாப்பிங்ஸ் மற்றும் சுவையூட்டிகள் கொண்டு பீட்சாக்கள் தயாரிக்கப்படுகின்றன. இதுபோக, இப்போது நிறைய இடங்களில் கடல் உணவுகளைக்கொண்டும் பீட்சா செய்யப்படுகின்றன. மேலும் பீட்சா ப்ரெட் என்று சொல்லப்படுகிற தட்டை ப்ரெட்களின் தடிமனும் ஒவ்வொரு பீட்சாவின் சுவைக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன. பீட்சாவில் இதுபோன்ற சில வகைகள்தான் இருப்பதாக நினைத்தால் அது தவறு. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் பெனாய்ட் மற்றும் மாஸ்டெலனிக்கோ ஆகியோர், 940 வகையான பிரெஞ்ச் சீஸ் மற்றும் 61 வகை மற்ற நாடுகளின் சீஸ்களை பயன்படுத்தி 1001 பீட்சா வகைகளை தயாரித்து அசத்தியதுடன் அதற்காக கின்னஸ் சாதனையும் படைத்திருக்கின்றனர். பீட்சாவில் எத்தனை வகைகள் இருக்கும் என்று இப்போது புரிந்திருக்கும்.


கொண்டாட்டங்கள் மற்றும் பார்ட்டிகளில் விரும்பி உண்ணப்படும் உணவாக மாறிப்போன பீட்சா

தேசிய பீட்சா தினம்

விடுமுறை நாட்கள், கொண்டாட்டங்கள் மற்றும் பார்ட்டிகள் என்றால் முதலில் ஆர்டர் செய்யப்படுவது பீட்சா. குறிப்பாக, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட விரும்புகிறவர்கள் அதிகளவில் பீட்சாவை வாங்கி சாப்பிடுவதாக கூறுகின்றன புள்ளிவிவரங்கள். அதனாலேயே இந்தியாவில் 2000ஆம் ஆண்டு முதன்முதலில் பீட்சா தினம் கொண்டாடப்பட்டது. அதுமுதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று தேசிய பீட்சா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்மூலம் புதிய வகை பீட்சாக்களை அறிமுகப்படுத்தவும், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் பீட்சா செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறது.அதிகப்படியானோர் விரும்பும் உணவையும், அதன் மகிழ்ச்சியையும் பிறருடன் பகிர்வதே தேசிய பீட்சா தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும். இந்த நாளில் பெரிய பெரிய ஹோட்டல்கள் மற்றும் கல்லூரிகள் பீட்சா போட்டிகளை நடத்துகின்றன. என்னதான் பீட்சா பெரிதும் விரும்பி சாப்பிடப்படும் உணவாக இருந்தாலும் இதை அடிக்கடி சாப்பிடக்கூடாது என்பதையும் மறக்கவேண்டாம்! பீட்சா பிரியர்களே உங்களுடைய ஃபேவரிட் பீட்சா எது?

Updated On 4 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story