மீன்கள் என்றாலே நம்முடைய உடலுக்கு அதிகம் நன்மை தரக்கூடிய ஒன்று என்றுதான் அனைவரும் கூறுகின்றனர். அதனாலேயே சிக்கன், மட்டன் போன்ற மாமிச உணவுகளை சமைத்து சாப்பிடுவதில் காட்டும் ஆர்வத்தை விட மீன்கள் போன்ற கடல்சார் உணவுகளை சமைத்து சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த வகையில், இன்று நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் கேரளா ஸ்பெஷல் உணவாக சொல்லப்படும் நெத்திலி மீன் பீரா செய்வது எப்படி என்பதை நமக்கு செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு. கைவிரல் அளவிற்கு சிறியதாகவும், சுவைமிக்கதாகவும் இருக்கக்கூடிய இந்த நெத்திலி மீன் பீராவை நீங்களும் மிக எளிமையாக வீட்டிலேயே செய்து சாப்பிடுவது எப்படி என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
"நெத்திலி மீன் பீரா" செய்முறை
அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடானதும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சீரகத்தை போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கவும்.
சின்ன வெங்காயத்தை வதக்குதல்..
வெங்காயம் பொன்னிறமாக மாற ஆரம்பிக்கும் தருணத்தில், கழுவி வைக்கப்பட்டுள்ள நெத்திலி மீனை போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மேலாக சீரக தூள் தூவி வேகவிடவும்.
மீன் ஓரளவு வெந்ததும் துருவி வைக்கப்பட்டுள்ள தேங்காயை மேலாக தூவி வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கி பொரியல் பதத்திற்கு வந்ததும் மேலாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் நெத்திலி மீன் பீரா தயார்.
நெத்திலி மீனை லேசாக தண்ணீர் தெளித்து வேகவைத்தல்
இதனை சாதத்துடன் வைத்து சாப்பிடும்பொழுது மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டில் மிக எளிதாக செய்து கொடுத்து அசத்திவிடலாம்.
நெத்திலி மீனில் உள்ள நன்மைகள்
உடல் ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் மூலக்கூறுகள் அதிகம் உள்ள மீன்களில் நெத்திலி மீனும் ஒன்று.
இதில் பாலி அன்சாச்சுரேட்டட் அமிலம் அதிகம் உள்ளதால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
மேலும் செலினியம் என்ற மூலக்கூறு நெத்திலியில் இருப்பதால் தைராய்டு சுரப்பி, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
நெத்திலி மீன் பீரா ரெடி!
உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது.
பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் தாய்ப்பால் சுரக்க இந்த மீனை அதிகம் சமைத்து கொடுப்பதுண்டு.
நெத்திலி மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பொழுது சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுவதுடன் கண் பார்வையும் கூர்மையாகும்.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த மீனை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதில் உள்ள முழு சத்துக்களும் நம் உடலுக்கு கிடைக்கும்.
