மண் மனம் மாறாமல் செய்யப்படும் கிராமத்து சமையலுக்கு, எப்போதுமே தனி சுவை உண்டு. அந்த சுவையில் கிடைக்கும் சுகமே அலாதியான ஒன்றுதான். அதிலும் சைவ உணவுகளை விட, எந்தவித கலப்பட பொருட்களும், கலர்களும் சேர்க்காமல் செய்யப்படும் அசைவ உணவுக்களுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கும். என்னதான் நகரங்களில் வாழ்ந்தாலும், பெரும்பாலானோர் தேடுவது என்னவோ கிராமத்து சாயலும், சுவையும் கொண்ட உணவுகளைத்தான். அப்படி இன்று நமது சமையல் பகுதியில் நாம் காண இருப்பது கொங்கு மண்டல கிராமத்து பகுதிகளில் அதிகமாக சமைத்து சுவைக்கப்படும் "வரமிளகாய் கோழி வறுவல்". செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு.
வரமிளகாய் கோழி வறுவல் செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் 50ML அளவு நல்லெண்ணெயை ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும் அதில் சின்ன வெங்காயத்தை கட் செய்யாமல் முழுசாக போட்டு வதக்கவும்.
வெங்காயம் அரை பதம் அளவுக்கு வதங்கியதும் கழுவி வைக்கப்பட்டுள்ள கருவேப்பில்லை மற்றும் பொடியாக்கி வைக்கப்பட்டுள்ள 10 வரமிளகாய் மற்றும் பூண்டை சேர்த்து வதக்கவும்.
கருவேப்பில்லை, வரமிளகாய் மற்றும் பூண்டை சேர்த்து வதக்குதல்
இவை அனைத்தும் ஓரளவு வதங்கியதும் நன்கு கழுவி வைக்கப்பட்டுள்ள கோழி கறியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலாக மூடி போட்டு அரைமணி நேரம் அப்படியே வேகவிடவும்.
இப்பொழுது மூடியை திறந்து கிளறி இறக்கினால் சுவையான வரமிளகாய் கோழி வறுவல் ரெடி.
இந்த கோழி வறுவலை சாதத்திலும் போட்டு சாப்பிடலாம். தோசை, நாண், சப்பாத்தி போன்றவற்றிற்கும் சைடு டிஷ்ஷாகவும் தொட்டுக்கொள்ளலாம்.
தயார் நிலையில் உள்ள வரமிளகாய் கோழி வறுவல்
வரமிளகாய் கோழி வறுவலில் உள்ள நன்மைகள்
இந்த வகையான கோழி வறுவலில் நாம் சேர்க்கும் மசாலா பொருட்கள் குறைவு.
அதனால் வரமிளகாயுடன் கறியை நன்கு வதக்கி செய்யும் அதன் சுவை தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
மேலும் இந்த வறுவலில் நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவை சேர்க்கப்படுவதால், நம் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி ஏற்படும். அதுமட்டுமின்றி சிக்கனால் உண்டாகும் சூடும் குறையும்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த இந்த வகையான சிக்கன் உணவு, இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
மேலும் புரதச்சத்து நிறைந்த இந்த உணவானது உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது.
