இன்றைய அவசர உலகில் பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு நேர உணவாக பிரதானமாக இருப்பது இட்லி தோசைதான். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சலிக்காத ஒரு உணவாக இருப்பது தோசைதான். இந்த உணவை ரசித்து ருசித்து உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மொறு மொறு தோசை, ஆனியன் தோசை, நெய் தோசை, ரவா தோசை, கல் தோசை, மூலிகை தோசை, பச்சை பயிறு தோசை, கோதுமை தோசை, முடக்கத்தான் தோசை, கம்பு தோசை என்று தோசைகளில் எத்தனையோ வெரைட்டிகள் இருக்கின்றன. அந்த வகையில் குளிர் காலத்திற்கு ஏற்ற மாதிரியான கொள்ளு தோசை மிக எளிமையாக செய்வது எப்படி என்பதை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திருமதி. சாரதா சந்திரசேகர்.
கொள்ளு தோசை செய்முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி, கொள்ளு இவை மூன்றையும் நன்கு கழுவிவிட்டு குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நன்கு ஊறிய பிறகு, அந்த அரிசிகளுடன் ஒரு பல் பூண்டையும் சேர்த்து அவரவர் வசதிக்கு ஏற்ற வகையில், கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ போட்டு அரைத்து, மாவை 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.
இப்போது தோசை ஊற்றும் பதத்திற்கு மாவு தயார் ஆனதும் கடாயில் தோசைக்கல்லை வைத்து சாதாரணமாக மற்ற தோசைகளை ஊற்றி எடுப்பது போன்று மாவை ஊற்றி, ஒரு ஸ்பூன் என்னை ஊற்றி நன்கு முருக வைத்து எடுத்தால் ஹெல்தியான கொள்ளு தோசை தயார்.
தோசைக்கல்லில் கொள்ளு தோசை ஊற்றும் முறை
இந்த கொள்ளு தோசையை சர்க்கரை நோயாளிகளுக்கும் கொடுக்கலாம்.
கொள்ளின் பயன்கள்
"இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு" என்ற பழமொழியை நம்மில் பலரும் கேட்டிருப்போம். அதில் உள்ள அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும் என்பது நமக்கு தெரியாது. ஆனால், உடல் எடை குறைவாக இருப்பவனுக்கு எள்ளையும், உடல் எடை அதிகமாக இருப்பவனுக்கு கொள்ளையும் சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
அப்படிப்பட்ட இந்த கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றோடு நிறைய மினரல்களும் இருக்கின்றன. இவை நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்த ஒரு உணவுப்பொருளாகும்.
அதிலும் பிரௌன் நிறத்தில் இருக்கும் கொள்ளைக் காட்டிலும், கருப்பு கொள்ளில் நார்ச்சத்துக்களும், பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.
கொள்ளு தோசை மற்றும் தக்காளி குருமா
அந்த வகையில், புரத சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த கொள்ளை நாம் தினமும் உணவோடு சேர்த்து உட்கொள்ளும்பொழுது நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை முழுமையாக நீக்க உதவுகிறது.
மேலும் பெண்கள் இந்த கொள்ளு பயிரை சூப்பாகவோ அல்லது வேகவைத்து அதன் நீரை மட்டுமோ தொடர்ந்து குடித்து வரும்போது மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, குளிர் காலங்களில் ஏற்படும் தொற்றுகளான சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்யும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். சர்க்கரை நோயை தடுப்பதுடன், ஆண்களுக்கு விந்தணுக்களையும் அதிகரிக்கச் செய்யும்.