இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கொழுக்கட்டை என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விநாயகர்தான். ஏனென்றால் அவருக்கு பிடித்தமான உணவுகளில் முதன்மையாக இருப்பது மோதகம் என்று சொல்லக்கூடிய கொழுக்கட்டைதான். அப்படி அவருக்காக படைக்கப்படும் கொழுக்கட்டையே இன்று பூரண கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, நீர் கொழுக்கட்டை என்று அவரவர் விருப்பத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகைகளில் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கொழுக்கட்டைகளில் ஒன்றான நீர் கொழுக்கட்டை பற்றிதான். இதனை நீர் உருண்டை என்றும் கூறுவதுண்டு. வயிற்று புண்களை மிக எளிதாக சரி செய்யக்கூடிய இந்த நீர் கொழுக்கட்டையை குறைவான பொருட்களை கொண்டு வீட்டில் மிக எளிமையாக செய்வது எப்படி என்பதை செய்து காட்டுகிறார் சமயல் கலைஞர் திருமதி. சாரதா சந்திரசேகர்.


நீர் கொழுக்கட்டை செய்முறை

பச்சரிசியை நன்கு கழுவி காயவைத்து, பிறகு மிக்சியில் குருணை பதத்திற்கு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கப் பாசிப் பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து கடாயில் ஒரு பாத்திரத்தை வைக்கவும்.

அந்த பாத்திரத்தில் ஒரு கப் பாசிபருப்புக்கு ஒண்ணுக்கு ஒன்றரை என்ற அளவில் ஆறு கப் தண்ணீரை ஊற்றி அதில் வேக வைத்த பாசிப்பருப்பையும் போட்டு நன்கு கிளறி கொதிக்க விடவும்.


பாசிப்பருப்பு, பச்சரிசி குருணை இரண்டையும் வேக வைக்கும் தருணம்

கொதிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொத்தி வந்த பிறகு பொடித்து வைத்துள்ள பச்சரிசி குருணையை அதில் போட்டு கெட்டிப்படும் அளவுக்கு கிளற வேண்டும்.

நன்கு கெட்டி பதம் வந்த பிறகு துருவி வைத்துள்ள ஒரு கப் தேங்காயை மேற்கொண்டு அதில் சேர்த்து கிளறவும்.

இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆறவிடவும்.

இதற்கு பிறகு வேறொரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு சூடாக்கவும்.


கொதிக்கும் தண்ணீரில் வேக வைத்த மாவை உருண்டைகளாக உருட்டி போட்டு எடுத்தல்

தண்ணீர் சூடாகி கொதி வரும் நேரத்தில் வேகவைத்து ஆறவைக்கப்பட்டுள்ள மாவை உருண்டைகளாக உருட்டி அதில் போட்டு, மூடி வைத்து ஒரு பத்து நிமிடத்திற்கு வேகவிடவும்.

உருண்டைகள் அனைத்தும் வெந்து மேலே வந்த பிறகு எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து இப்போது எல்லோருக்கும் பரிமாறலாம்.

இந்த நீர் உருண்டையை மிளகாய் பச்சடி, மோர், ஊறுகாய், குழம்பு எதனுடன் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.

நீர் கொழுக்கட்டையின் பயன்கள்


தயார் நிலையில் நீர் கொழுக்கட்டை

பாரம்பரியம் மிக்க உணவான இந்த நீர் கொழுக்கட்டை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த ஒரு உணவுப்பொருளாகும்.

எண்ணெயில் பொறித்து எடுக்காமல் இரண்டு முறை நீரில் வேகவைத்து எடுத்து உண்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த உருண்டையில் பாசிப்பருப்பு, தேங்காய் இருப்பதால் தொண்டை புண், வயிற்று புண் போன்றவற்றை சரி செய்யும்.

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்து கொள்பவர்கள் தங்கள் வயிற்று புண்களை போக்க இந்த உணவை காலை அல்லது மாலை ஏதோவொரு வேளையில் உணவாக எடுத்துக்கொள்வது நல்லது.

Updated On 14 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story