பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி உள்ளிட்டவை நமக்கு நன்றாக தெரியும். அந்த பொடிகளில் சாதம் பிசைந்து சாப்பிடுவது நிறைய பேருக்கு பிடிக்கும். அதேபோன்றுதான் "கடுகு பொடி". ஆனால் "கடுகு பொடி" குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் உள்ளது. வாரம் ஒருமுறை "கடுகு பொடி" சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பதாக கூறும் சமையல் கலைஞர் சாரதா சந்திரசேகர், அதனை செய்தும் காட்டியுள்ளார்.
கடுகு பொடி செய்முறை
அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைக்கவும்.
கடாய் சூடானதும் எடுத்து வைத்துள்ள கடுகை அதில் போட்டு மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும்.
கடுகை வெகுநேரம் வறுக்காமல், அது நிறம் மாறி பட பட என்று வெடிக்க ஆரம்பிக்கும்போது எடுத்து விட வேண்டும்.
ஒருவேளை கடுகு நன்கு வறுபட்டுவிட்டால் அந்த தீய்ந்த கடுகை பொடியாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது. காரணம் அதில் கசப்பு தன்மை அதிகரிப்பதோடு, உடலுக்கும் தீங்கு ஏற்படுத்தும்.
மிதமான சூட்டில் கடுகை வறுத்து எடுத்தல்
அடுத்ததாக ஒரு பங்கு கடுகுக்கு, மூன்று பங்கு என்ற அளவில் உளுத்தம் பருப்பையும், காரத்திற்கு ஏற்ற அளவில் காய்ந்த மிளகாயையும் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூன்றும் சூடு ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்தால் கடுகு பொடி தயார்.
இந்த பொடியை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
கடுகு பொடியின் நன்மைகள்
நமது வயிற்றில் உள்ள வேண்டாத கசடுகளை நீக்கிவிடும்.
கடுகை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடல் சூடாகி கொப்பளங்கள் வர ஆரம்பிக்கும்.
அதனால் வாரத்திற்கு ஒருமுறை கடுகு பொடி சாப்பிடுவது நல்லது.
கடுகு விதைகளில் அதிக அளவு பைட்டோ நியூட்ரியண்ட்கள் உள்ளன.
சூடான சாதம் மற்றும் அரைத்து எடுக்கப்பட்ட கடுகு பொடி
மேலும், இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் சில வகையான புற்றுநோய்களுக்கு, குறிப்பாக நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை என்றும் சில ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
கடுகு விதைகளில் இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் உள்ளன.
உங்கள் உடலில் உள்ள பல உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் செயல்முறைகளின் இயல்பான செயல்பாட்டிற்கு போதுமான அளவு இந்த தாதுக்களைப் பெறுவது அவசியம் மட்டுமின்றி தாதுப் பற்றாக்குறையைத் தடுக்கவும் உதவுகிறது.
கடுகு விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு, முடக்கு வாதம், சிஸ்டமிக் லூபஸ் ஆஸ்டியோபோரோசிஸ், மனச்சோர்வு, தோல் நோய்கள், அழற்சி, குடல் நோய், ஆஸ்துமா, மாதவிடாய் வலி போன்றவற்றிற்கும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது.
கடுகுப்பொடி சாதத்தோடு அப்பளம் பிசைந்து சாப்பிடுதல்
கடுகு பொடியில் அமினோ அமிலம், சிஸ்டைன் உள்ளது. இது உடலில் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.
கோடையில் உடலில் வரும் கட்டிகளுக்கு கடுகை அரைத்துப் பூசலாம். கடுகு விதைகளில், உடலுக்கு தேவையான எண்ணெய் உள்ளது.
புளித்த ஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருந்தாகவும் கடுகு செயல்படும்.