ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம். இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இருந்தாலும், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷம். சிவனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதமாக ஆடி மாதம் நம்பப்படுகிறது. சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதம் என்பதாக ஆடி மாதம் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அம்மனை வழிபடுவது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமாக கருதப்படுவது வெள்ளி விநாயகர் விரதம். இந்த விநாயகர் விரதம் குறையாத செல்வத்தை அருளும் என்பது ஐதீகம்.

வெள்ளி விநாயகர் விரதம்

ஆடி வெள்ளியில் விரதம் இருப்பதை நிறைய பெண்கள் கடைபிடிப்பது வழக்கம். அவ்வாறு விரதம் இருக்கையில் முதலில் விநாயகரை வழிபட வேண்டும். இங்கு வெள்ளி என்பது கிழமையை குறிப்பதே தவிர, வெள்ளியால் செய்யப்பட்ட பிள்ளையாரை அல்ல. எனவே வெள்ளிக்கிழமைகளில் பெண்கள், வீட்டிலுள்ள விநாயகருக்கு காலையில் அருகம்புல்லால் பூஜை செய்வது விசேஷம். காலையில் முடியாதவர்கள் மாலை வேளையில் விநாயகருக்கு அருகம்புல்லால் பூஜை செய்து, பின் அம்பாளை வழிபடலாம்.

ஆடி வெள்ளியுடன் சேர்ந்த பிரதோஷம்

அம்பாளுக்கு உகந்த இந்த நாளில் சிவபெருமானுக்குரிய பிரதோஷ விரதமும் சேர்ந்துள்ளது. ஆடி வெள்ளியும், சுக்கிரப்பிரதோஷமும் இணைந்துள்ளது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. சிவனின் அருளையும், அம்பாளின் அருளையும் இணைந்தே பெரும் மிக முக்கிய நாளாக இன்றைய தினம் மாறியுள்ளது.

இந்நன்னாளில் வீட்டின் பூஜை அறையில் அம்மனுக்கு விளக்கேற்றி வைத்து, விளக்குக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. திருவிளக்கில் லட்சுமி, சரஸ்வதி, பராசக்தி, சிவ பெருமான், பிரம்மா, மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் ஆடி முதல் வெள்ளியில் திருவிளக்கு பூஜை செய்வதால் அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் நமக்கு கிடைத்துவிடும்.

தடைகள், எதிர்மறை ஆற்றல்கள், கனவு தொந்தரவுகள் போன்றவற்றை போக்க, ஆடி வெள்ளியில் கருமாரியம்மன் மற்றும் புற்று வழிபாடு செய்வது நல்ல பலனை கொடுக்குமாம்.

ஆடியில் முக்கியமாக செய்ய வேண்டியது

அம்மனை மனதார வேண்டிக்கொண்டு ஆடி மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, வீட்டிலேயோ அல்லது ஆலயத்திலோ நெய் விளக்கேற்றி பூஜை செய்யலாம். மேலும் ஆடி வெள்ளியில் ஒரு பெண் பிள்ளைக்கு தாம்பூலம், உணவு, ஆடை என்று நம்மால் முடிந்த பொருட்களை வெற்றிலை பாக்கு வைத்து கொடுப்பது சிறந்தது.

Updated On 19 July 2024 7:39 AM GMT
ராணி

ராணி

Next Story