இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஷேர் மார்க்கெட் என்று சொன்னாலே அதில் முதலீடு செய்வது குறித்தும், அதிலுள்ள லாப நஷ்டங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுவதுண்டு. பங்குச் சந்தை வர்த்தகம் குறித்தும், அதிலுள்ள நுட்பங்கள் குறித்தும் விளக்குகிறார் பங்கு வர்த்தக ஆராய்ச்சி நிபுணர் எம். அறிவழகன்.

பங்குச் சந்தை என்றால் என்ன?

இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்து தொழில் தொடங்குகிறார்கள். தொழிலுக்கு தேவையான பணத்தை முதலீடு செய்கிறார்கள். அந்தத் தொழிலில் கிடைக்கும் லாபத்தை அவரவர் முதலீட்டுக்கு ஏற்றாற்போல் பங்கிட்டுக் கொள்கிறார்கள். மிகப்பெரிய முதலீடு தேவைப்படும்போது வங்கியிலிருந்து கடன்பெறுவார்கள். அதுவே கடன் தொகையானது மிக மிகப்பெரிய அளவில் இருக்கும்போது பங்குச் சந்தையை நாடுவார்கள். பங்குச் சந்தையின் ‘செபி’ (Securities and Exchange Board of India) என்ற அமைப்பிடம் தங்கள் நிறுவனத்தின் பணி, லாபம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிக்கைகளை சமர்பித்து ஒப்புதல் பெற்று, பங்குச் சந்தையில் முதலீட்டிற்காக பதிவுசெய்வார்கள். அதவாது பங்குச் சந்தையின் NSE (National Stock Exchange) மற்றும் BSE (Bombay Stock Exchange) இரண்டு எக்ஸ்சேஞ்ச்களிலும் நிறுவனத்தை பதிவுசெய்து பிறகு முதலீடு பெறப்படும்.


பங்குச்சந்தை குறித்த புரிதல் தேவை

பங்குச் சந்தையில் எத்தனை வகைகள் உள்ளன? யாரெல்லாம் அதில் முதலீடு செய்யமுடியும்?

முதல்வகை equity investment. அதாவது பங்குகளை வாங்கி நீண்டகாலமோ அல்லது குறுகிய காலமோ வைத்திருந்து அதனை விற்பனை செய்தல். இரண்டாவது வகை Derivative investment. இதனை எதிர்கால மற்றும் விருப்பத்தேர்வு (future and options) மார்கெட் என்றும் சொல்வார்கள். இதில் மார்ஜின் தொகை என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச தொகையை செலுத்தி அதில் வர்த்தகத்தைத் தொடங்குவார்கள். உங்களிடத்திலுள்ள பணத்துக்கு ஏற்றாற்போல் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ஒரு பங்கின் இன்றைய விலை 580 ரூபாயாக இருக்கும்பட்சத்தில், உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் அதை 580-ஆல் வகுத்து அதில் எத்தனை பங்குகள் வருமோ அதை வாங்கிக்கொள்ளலாம்.

இது equity மார்க்கெட். அதுவே future மார்க்கெட்டில் permitted lot size என்று வைத்திருப்பார்கள். அதே ஸ்டேட் பேங்கில் permitted lot size ரூ. 1500 எனில், அங்கு குறுகியகால பணமாக மார்ஜின் தொகையை செலுத்தி மூன்று மாத இடைவெளிக்குள் அதனை விற்பனை செய்துவிட வேண்டும். இதில் மார்க்கெட்டின் விலை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து லாபமோ நஷ்டமோ கிடைக்கும்.


Equity investment மற்றும் Derivative investment

தினக்கூலி வாங்குபவர்கள் அல்லது குறைந்த மாத சமபளம் வாங்குபவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்து முன்னேற்றம் காணமுடியுமா?

கட்டாயமாக. பங்குச் சந்தை என்பது நீண்டகால முதலீட்டிற்கு சிறப்பான அம்சமாக இருக்கும். பொதுவாக தங்கம், வெள்ளி மற்றும் நிலம் வாங்குதல் அல்லது போஸ்ட் ஆபீஸில் டெபாசிட் செய்வது போன்றவற்றில் எப்படி முதலீடு செய்கிறார்களோ அதேபோல பங்குச் சந்தையில் நீண்டகால முதலீடு செய்வதன்மூலம் சிறந்த லாபத்தை ஈட்ட முடியும்.

பங்குச் சந்தையில் பயன்படுத்தப்படுகிற டிரேடிங் (Trading) மற்றும் டி-மேட் (demat) போன்றவற்றின் அர்த்தம் என்ன?

பங்குகளை வாங்கி அதை விற்பதைத்தான் டிரேடிங் என்கிறார்கள். இது இரண்டு வகைப்படும். முதல்வகை Intraday Trading. அன்றைய தினம் பங்கை வாங்கி அன்றைய தினமே விற்பது. மற்றொரு வகை swing trading மற்றும் positional trading.இந்த வகையை பொறுத்தவரை இன்று பங்குகளை வாங்கி, ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து விற்பனை செய்வது.

டி - மேட் என்பது வங்கியில் சேமிப்புக் கணக்கில் பணம் எப்படி இருக்கிறதோ அதேபோல் பங்குச்சந்தையில் நீங்கள் வாங்கும் டிஜிட்டல் ஷேர்களை டி- மேட் கணக்கில் வைத்திருப்பார்கள். NSDL மற்றும் CDSL என்ற இரண்டு டிஜிட்டல் லாக்கர்களின் மூலமாக, பங்குகளானது டி- மேட் கணக்கில் வைக்கப்படும். முதன்முறையாக பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு பங்குத் தரகர்கள் (stock brokers) மூலமாக டிரேடிங் மற்றும் டி-மேட் கணக்குகள் தொடங்கப்படும். முதலில் வாங்கும் பங்கானது டிரேடிங் கணக்கில் வரவு வைக்கப்படும். இதை T+1 என்கிறார்கள். அதன்பின்பு லாபம் கிடைக்கும்வரை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருந்து பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்யலாம்.


டிரேடிங் மற்றும் டி - மேட்

பங்குச் சந்தையில் பயன்படுத்தப்படுகிற stop loss என்பதன் அர்த்தம் என்ன?

மிகவும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. நஷ்டத்தை குறுகிய அளவிலேயே தடுத்துக்கொள்ள வைத்திருக்கும் பெயர்தான் stop loss. பங்குச்சந்தையில் ஈடுபட்டிருக்கும் முதலீட்டாளர்களும், டிரேடிங்கில் இருப்பவர்களும் ஒரு பங்கு ஏறி இறங்கும்போது பதட்டமாகிவிடுவார்கள். ஏனெனில் origin area என்று சொல்லக்கூடிய அளவில் கீழிருந்து மேல்நோக்கி செல்லும்போது பங்குகளை கவனிக்கமாட்டார்கள். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பங்குகள் வளர்ச்சியடைந்திருக்கும். அந்த பங்கானது கீழ்நோக்கி செல்லும்போது, ‘இதற்குமேல் நஷ்டம் வேண்டாம்’ என்று குறைந்த நஷ்டத்துடன் வெளியேறுவார்கள். இதைத்தான் stop loss என்கின்றனர்.

மார்க்கெட்டை பொறுத்தவரை இரண்டு டிரெண்டுகளை பின்பற்றுவார்கள். ஒன்று ஏற்றம் (uptrend) மற்றொன்று இறக்கம் (downtrend). uptrend மார்க்கெட்டில் ஒரு பங்கானது ஆதிப்புள்ளியிலிருந்து மேலே ஏறி, பிறகு திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் மேல்நோக்கி செல்ல ஆரம்பிக்கும். ஆனால் downtrend மார்க்கெட்டில் மேலிருந்து கீழே இறங்க ஆரம்பிக்கும்போது வெகு வேகமாக இறங்கிவிடும். அதேநேரத்தில் பங்குகள் மேல்நோக்கி செல்லும்போது வேகம் மிகவும் குறைவாக இருக்கும். பொதுவாக பங்குச் சந்தையானது மேல்நோக்கி செல்கிறதா அல்லது கீழ்நோக்கி செல்கிறதா என்பதை சுலபமாக புரிந்துகொள்ளலாம். கீழ்நோக்கி செல்லக்கூடிய நிலையில் நஷ்டத்தை குறைத்துக்கொள்வதுதான் stop loss.


Stop - Loss குறித்து தெரிந்துகொள்வது அவசியம்

எந்தவிதமான டிரேடிங் முறையை பின்பற்றினால் பங்குச் சந்தையில் வெற்றிகரமான லாபத்தை அடையமுடியும்?

பங்குச் சந்தையை பொறுத்தவரை டிரேடிங்காக இருந்தாலும் சரி, முதலீடாக இருந்தாலும் சரி பொறுமை நிச்சயம் அவசியம். ஒரு பங்கை வாங்குவதற்கு கொடுக்கும் முதலீட்டின் அளவை முதலில் நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக இந்த முதலீடு என்பது தனி நபருடைய சேமிப்பிலிருந்துதான் எடுக்கப்பட வேண்டுமே தவிர பிறரிடம் கடன் வாங்கியோ அல்லது வங்கியில் கடன் வாங்கியோ பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. ஏனெனில் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை பங்குகளின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கமானது ஒருசில காரணங்களுக்காக மாறும். ஒரு மாதத்தில் குறிப்பிட்ட தேவைகளுக்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதில் லாபத்தை எதிர்பார்ப்பது மிகவு அபாயகரமானது.

அதேபோல், பங்குகளை தேர்வு செய்யும்போது நிதானமும் பொறுமையும் தேவை. ஏனெனில் பங்கை வாங்கிய பிறகு இருக்கும் பொறுமையானது வாங்கும்போது பலருக்கும் இருப்பதில்லை. பங்கு நஷ்டத்தில் போகும்போது பொறுமையாக பார்த்துக்கொண்டிருப்பார்களே தவிர, நஷ்டத்தின் அளவை பதிவு செய்யமாட்டார்கள். ஏனெனில் ஒரு லட்சத்தை முதலீடு செய்யும்போது ஒன்று அல்லது இரண்டு சதவீத நஷ்டத்துக்குத்தான் தயாராக இருக்கவேண்டுமே தவிர, நஷ்டமானது 20% அல்லது 30% என போகும்போது குறுகிய காலத்திற்குள்ளேயே கேபிடல் என்று சொல்லக்கூடிய முதலீட்டை இழக்க நேரிடும்.


பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டியவை

அதேபோல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, பிறருடைய கருத்துக்களை கேட்காமல் சொந்த ஆராய்ச்சியின்மூலமே ஈடுபட வேண்டும். ஏனெனில் அதன் பாதிப்புகளும் விளைவுகளும் அந்த நபரையே வந்துசேரும். பங்குகளில் risk management-ஐ முறையாக கையாளும்போது நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் நிலையான வருவாய் என்பது கிடைக்கும். எப்படியாயினும் மார்க்கெட் என்பது அபாயத்திற்குட்பட்டது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

பங்குச் சந்தையில் ஈடுபடும் நபர் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் முன்பு கவனிக்கவேண்டியவை என்னென்ன?

பங்குச் சந்தையை பொறுத்தவரை தேவை (demand) மற்றும் வழங்கல் (supply) இரண்டும்தான் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த இரண்டையும் தெளிவாகப் புரிந்துகொண்டால் பங்கை வாங்கும்போதும் விற்கும்போதும் தெளிவு இருக்கும். பங்குகளுக்கு நல்ல volume இருந்தால் மட்டுமே டிரேடிங்கில் demand இருக்கும். அப்போதுதான் பங்குகள் மேல்நோக்கி செல்லும். அதற்கு சரியான buyer-இடம் இருந்து பங்கை வாங்கியிருக்க வேண்டும்.

Updated On 31 Oct 2023 12:12 AM IST
ராணி

ராணி

Next Story