இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று சிலம்பம். காலத்தின் ஓட்டத்தில் சிலம்பத்தை நாம் மறந்து போயிருந்தாலும் இன்று இருக்கும் இளைஞர்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்தும் இன்று சிலம்பத்திற்கும் கொடுக்கப்படுகிறது. அதனாலேயே சிலம்பம் கற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் சிலம்பம் சுற்றுவதில், அதனை முழுமூச்சாக கற்றுக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சிலம்பத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், சிலம்பம் கற்றுக்கொள்வதால் என்னென்ன பயன்கள், மற்ற விளையாட்டு போட்டிகளை போன்று சிலம்பத்தில் இருப்பவர்களுக்கு அரசு வேலை கொடுக்கப்படுகிறதா போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசி இருக்கிறார் சிலம்பம் மாஸ்டர் பொற்செல்வன். அந்த நேர்காணலை பார்ப்போம்.

சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் யாரிடம் இருந்து வந்தது?

பெரம்பூரை சேர்ந்த கமலக்கண்ணன்தான் என்னுடைய சிலம்பம் மாஸ்டர். அவரிடம் சிறு வயதில் இருந்தே நான் சிலம்பம் கற்றுக்கொண்டேன். இடையிடையே சில தனிப்பட்ட காரணங்களால் சிலம்பம் கற்றுக்கொள்வதில் தடைகளும் வந்திருக்கிறது. ஆனாலும், என்னுடைய மாஸ்டர் கொடுத்த ஊக்கம்தான் என்னை இவ்வளவு தூரம் அழைத்துவந்து இருக்கிறது. இன்று நான் அவருடைய நியாபகமாக தனியாக சிலம்ப பள்ளி ஆரம்பித்து வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறேன். என்னிடம் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தேசிய மற்றும் நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் வென்று வந்திருக்கிறார்கள்.


நேபாளில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள்

உங்களுடைய முழு நேர பணியே சிலம்பம் கற்றுக்கொடுப்பது தானா?

என்னுடைய பயிற்சி பள்ளி இல்லாமல், வெளியிலும் சில பள்ளிகளுக்கு சென்று சிலம்பம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். சிலம்பம் நம்முடைய பாரம்பரிய கலை. அதை வெறும் வார்த்தைகளுக்காக சொல்லாமல், நாம்தான் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட வேண்டும். அதன் அடிப்படையில் இதனை முழுநேர பணியாகவே செய்து கொண்டிருக்கிறேன்.

சிலம்ப கலையில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்? அதிலும் உங்கள் வகுப்பில் பெண் பிள்ளைகள் அதிகமாகவே காணப்படுகிறார்கள்… அது எப்படி?

ஆண்கள் பெண்கள் என்று பிரித்து பார்ப்பதில் எனக்கு பெரிதாக உடன்பாடு இல்லை. எல்லோருமே இங்கு சமம்தான். ஆண்கள் என்ன வேகத்தில் சிலம்பம் சுற்றுகிறார்களோ, அவர்களுக்கு நிகரான அதே வேகத்தில் பெண்களும் சுற்றுவார்கள். அதை சாத்தியப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள். அண்மையில் ஊட்டியில் நடைபெற்ற திறந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கூட 10 பெண்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்று வந்து இருக்கிறார்கள்.

நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு சிலம்பம் மட்டும்தான் சொல்லித்தருகிறீர்களா? சிலம்பம் தவிர்த்து மற்ற கலைகளிலும் உங்கள் மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா?

நான் என்னுடைய மாணவர்களுக்கு சிலம்பம் மட்டும் சொல்லி தருவது இல்லை. சிலம்பத்திலேயே மற்ற கத்தி, வேல், சுருள், வாள் என மார்ஷியல் ஆட்ஸ்களையும் சொல்லி கொடுக்கிறேன்.


ஆண்களுக்கு நிகரான வேகத்தில் சிலம்பம் சுற்றும் பெண்கள்

சிலம்பம் கற்றுக்கொள்வதன் மூலம் அரசு வேலைகளுக்கும் முயற்சிக்க முடியுமா?

மற்ற விளையாட்டுகளை போன்றே சிலம்பமும் அரசாங்க வேலைப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது விளையாட்டு கோட்டா என்று சொல்லப்படும் பிரிவுக்கு கீழ் உள்ளது. பள்ளிகள் அளவில் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், இங்கு வெற்றிபெற்றவர்கள், கல்லூரிகளிலும் அந்த சிலம்ப விளையாட்டை தொடரலாம். சென்னை பல்கலைக்கழகமும் சிலம்ப போட்டிகளை நடத்த முன்வந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அது நிஜமாகவே நடந்துவிட்டால் சிலம்பம் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

மற்ற விளையாட்டுகளுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் சிலம்பத்திற்கும் கொடுக்கப்படுகிறதா?

நிச்சயமாக கொடுக்கப்படுகிறது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தமிழக முதலமைச்சர் கூட சிலம்பம் பயிற்சிக்காக ஆறு சதவிகிதம் ஒதுக்கி தந்து இருக்கிறார். அதை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி கொடுத்தால் கூட மேலும் உதவியாக இருக்கும். இப்போதைய சூழலில் சிலம்பம்தான் ட்ரெண்டிங் நம்பர் ஒன்னில் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் சிலம்பம் கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிலம்பம் கற்றுக்கொள்ள வரும் மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளராக நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்னவாக இருக்கும்?

இன்றைக்கு இருக்கும் குழந்தைகள் தங்களது பெரும்பாலான நேரங்களை ஃபோனிலேயே கழிக்கின்றனர். அதற்கு பதிலாக பெற்றோர்கள் அவர்களை சிலம்பம் போன்ற கலைகளில் சேர்த்துவிடலாம். சிலம்பம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை. எவ்வளவோ விளையாட்டுகள் இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு எதுவென்று கண்டறிந்து அதில் சேர்த்துவிடுவது நல்லது. என்னை நம்பி வரும் மாணவர்களுக்கு நான் முழு கவனத்துடன் சிலம்பம் சொல்லிக்கொடுக்கிறேன்.


தமிழக அரசின் முதலமைச்சர் கோப்பையிலும் இடம்பெற்றுள்ள சிலம்பம்

மற்ற விளையாட்டுகளுக்கு இருப்பது போன்று சிலம்பத்திற்கும் வயது வரம்பு ஏதும் இருக்கிறதா?

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத்தான் சிலம்பம் சொல்லிக் கொடுப்போம். ஆனால், என்னிடம் சாய் ஹிருத்திக் என்ற 4-வயது மாணவன் இருக்கிறான். அவன் ஊட்டியில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது பரிசை பெற்றிருக்கிறான். இன்றைய காலகட்டங்களில் நம்முடைய மைண்ட் அதாவது மூளையின் செயல்பாடுகள் நன்றாக இருந்தால் எப்படிப்பட்ட வயதிலும் சாதிக்க முடியும். இருப்பினும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் நீடித்து இந்த துறையில் இயங்க வசதியாக இருக்கும்.

சிலம்பம் கற்றுக்கொள்ள சின்ன குழந்தைகளும் எப்படி ஆர்வமாக வருகிறார்கள்?

நாம் சிலம்ப பயிற்சிகளை சொல்லி கொடுக்கும் விதத்தில் சொல்லி கொடுத்தால் தானாக ஆர்வம் ஆகிவிடுவார்கள். சொல்லிக்கொடுக்கும் பொழுது நாமும் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறிவிட வேண்டும். அவர்களுக்கு எப்படி சொல்லி கொடுத்தால் பிடிக்குமோ அதை தெரிந்து கொண்டு பயிற்சி கொடுக்க வேண்டும். குறிப்பாக சிலம்பத்தில் குச்சியை தவிர கத்தி, வாள், வேல் போன்றவையும் இருக்கிறது. இதை இப்படி கற்றுக்கொள்ளலாம் என்று ஆர்வத்தை தூண்டிவிட்டாலே போதும் நிற்காமல் தொடர்ச்சியாக வந்து கற்றுக்கொள்வார்கள்.

சிலம்பம் கற்று கொள்பவர்களின் எதிர்காலம் இந்த துறையில் எப்படி இருக்கும்?

தனியார் அமைப்புகள் என்று இல்லாமல், இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிறைய அசோசியேஷன் அதாவது அரசு சார்ந்து இயங்கும் சங்கங்கள் இருக்கின்றன. இவை அரசாங்க உத்தரவுகள்படி மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதோடு, முதலமைச்சர் கோப்பை என்ற ஒன்றையும் இந்த சிலம்பத்தில் கொண்டுவந்து இருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளால் அவர்களின் எதிர்காலம் அடுத்த கட்டத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன.


பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சிலம்ப பயிற்சி உதவியாக இருக்கும் - பயிற்சியாளர்

சிலம்பத்தை பெண்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதனால் நினைக்கிறீர்கள்?

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை. நடக்காத நிகழ்வுகளே இல்லை. இருப்பினும் பெண்களுக்கான பாதுகாப்பு கலைகள் என்பது மிகவும் குறைவாகவே சொல்லி கொடுக்கப்படுகிறது. அதிலும் சிலம்பம் கற்றுக்கொள்ளும் பெண்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். சிலம்பத்தில் நிறைய தற்காப்பு கலைகள் இருக்கின்றன. அவற்றை பெண்கள் முழுமையாக கற்றுக்கொண்டால் தங்களை தாக்க வருபவர்களை எளிதாக கையாள முடியும் என்பதோடு தனக்கு வரும் பிரச்சினைகளில் இருந்து தங்களை தாங்களே முழுமையாக பாதுகாத்துக்கொள்ள உதவியாக இருக்கும். அதனால்தான் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து சிலம்ப பயிற்சிகளை சொல்லி கொடுக்கிறேன்.

சிலம்பத்தை போன்றே அதன்கீழ் வரும் வேல், வாள், சுருள் போன்ற விளையாட்டுகளும் டோர்னமெண்ட்டுகளில் இருக்கிறதா?

ஆம், இருக்கிறது. அசோசியேஷன் மேட்ச்களில் சிலம்பத்தை மூன்று பிரிவுகளாக வைத்துள்ளனர். பொதுவான விளையாட்டுகளாக வேல், வாள், சுருள், கத்தி இப்படி ஏதாவது மூன்றை ரிஜிஸ்டர் செய்து மூன்று நிமிடம்வரை தொடர்ந்து செய்து காண்பிக்க வேண்டும். இது இல்லாமல் ஸ்பேரிங் அதாவது தொடுமுறை போட்டி என்று சொல்லக்கூடிய சண்டை போட்டிகள் முதலமைச்சர் கோப்பையின் கீழ் நடத்தப்படுகின்றன.

நீங்கள் போட்டிகளில் கலந்துகொண்டதற்கும், இப்போது உங்கள் மாணவர்கள் கலந்துகொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

நாங்கள் கலந்துகொண்ட தருணங்களில் சாஃப்ட்னெஸ் என்பது இருந்தது. இப்போது கொஞ்சம் கடுமையாகவே போட்டிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் நாம் எதிரில் இருப்பவர்களை அடிக்கும் பொழுது அவர்களுக்கு கொஞ்சம் இரத்தம் வந்தாலும், அடித்தவரை நடுவராக இருப்பவர் போட்டியை விட்டு வெளியேற்றிவிடுவார்.

Updated On 11 Nov 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story