இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இப்போது அனைத்து துறைகளிலுமே பெண்கள் தங்களுடைய கால்தடத்தை பதித்துவருகின்றனர். இப்படி ஒருபுறம் பெண்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தாலும் மற்றொருபுறம் பெண்களை வேலைக்கு செல்லவிடாமல் வீட்டிற்குள்ளேயே பூட்டிவைக்கும் அவலங்களும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் இளம்வயதில் வேலைக்குச் செல்லும் பெண்களால் குழந்தைப்பேறுக்கு பிறகு தொடர்ந்து வேலைக்கு செல்லமுடிவதில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் குடும்பம், குழந்தைகளை பார்த்துக்கொண்டே சொந்தமாக பிசினஸ் ஒன்றை தொடங்கி அதிலும் வெற்றிகண்டு வருகிறார் சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் மாலதி கருணாகரன். கடந்த 7 வருடங்களாக கேட்டரிங் சர்வீஸ் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுமதி பிசினஸ் என கலக்கிவரும் இவர், தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் எப்படி அதை சவாலாக எடுத்துக்கொண்டு இப்போது முன்னேறி இருக்கிறார் என்ற அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

கேட்டரிங் தொழில் தொடங்கும் ஆர்வம் எப்படி வந்தது?

திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் ஏதேனும் ஒரு பிசினஸில் வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. பிறந்தோம், வாழ்ந்தோம் என்று இல்லாமல் கண்டிப்பாக எதையேனும் சாதிக்கவேண்டும் என்று என்னுடைய அப்பா எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். அதை என் கணவரிடம் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனால் என் கணவருக்கு அதை எப்படி கொண்டுசெல்வது என்ற பயம் இருந்தது. ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்ததால் அவரை வலுக்கட்டாயமாக இந்த பிசினஸிற்குள் கொண்டுவந்தேன். என்னுடைய மாமனார், மாமியார் அனைவருமே கிட்டத்தட்ட 50 வருடங்களாக அரசியலில் இருந்தார்கள். அதனால் என்னையும் அரசியலில் இறக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் அவை அனைத்தும் தோல்வியடைந்தது விட்டது. அந்த நேரத்தில் பெரிய முதலீடு இல்லாமல் என்ன பிசினஸ் தொடங்குவது என்று யோசித்தபோதுதான் கடைசியில் கேட்டரிங் தொழில் செய்ய முடிவு எடுத்தோம். எங்கள்மீது நாங்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கு நம்பிக்கை அதிகம் இருக்கிறது. ஆரம்பத்தில் எங்களிடம் கேட்டரிங்கிற்கு தேவையான பொருட்கள் எதுவுமே இருக்காது. கஸ்டமரிடம் அட்வான்ஸ் வாங்கி அதிலிருந்துதான் என்னென்ன வாங்க வேண்டும்? எப்படி செய்யவேண்டும் என திட்டமிடுவோம்.


சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட மாலதியின் கேட்டரிங் தொழில் (உ.ம்)

முதன்முதலாக 2018ஆம் ஆண்டு எங்களுடைய உறவினர் ஒருவர்தான் பிறந்தநாள் கேட்டரிங் ஒன்றை எங்களிடம் கொடுத்தார். முதல் ஆர்டரே பிரியாணிதான். அதை சிறப்பாக செய்ததால் அவர் மூலமாகவே அடுத்தடுத்த ஆர்டர்கள் கிடைத்தன. முதல் முயற்சியே வெற்றிபெற்றதால் என்னுடைய கணவர் ஓகே சொன்னார். ஆனால் சில மாதங்களிலேயே எங்களுடைய மூத்த மகள் மித்ரா தவறிவிட்டாள். அதனால் மிகவும் உடைந்துபோனேன். இருப்பினும் அவளுடைய பெயர் எப்போதும் பாசிட்டிவாகவே இருக்கவேண்டும் என்பதற்காக எங்களுடைய பிசினஸை அதன்பிறகு அவள்பேரில் செய்ய ஆரம்பித்தோம். நான் எப்படியாவது மன உளைச்சலிலிருந்து வெளியே வரவேண்டுமென எனது கணவர் முழு முயற்சியுடன் பிசினஸில் இறங்கினார். அப்போது வருமானம் குறித்தெல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை. பெரிய பெரிய பணக்காரர்களின் ஈவென்ட்டுகளில் உணவு மெனுக்கள் சூப்பராக இருக்கும். அதுவே ஏழைகள் என்றால் அவர்களுடைய மெனு மிகவும் எளிமையாக இருக்கும். அதனால் அவர்களுக்கும் குறைந்த பட்ஜெட்டில் ஹை-ஃபையான உணவுகளை கொடுக்க ஆரம்பித்தோம். அதன்மூலம் நிறைய ஐடி ஆட்களின் ஆர்டர்கள் கிடைத்தன. முதலில் கேட்டரிங் என ஆரம்பித்திருந்தாலும் டெகொரேஷன் போன்றவற்றை பார்த்தபோது, அதை நாமே ஏன் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக செய்யக்கூடாது? என யோசித்து பின்பு ஈவென்ட் மேனேஜ்மென்ட்டாக மாற்றிவிட்டோம். அதையும் முதலில் பிறந்தநாள், திருமணம் என ஒவ்வொன்றாக கான்செப்ட் வைத்து செய்ய ஆரம்பித்தோம்.


கொரோனாவிற்கு பிறகு வெளிநாட்டிற்கு வெங்காய ஏற்றுமதி செய்தேன் - மாலதி

இப்படி முதல் மூன்று வருடங்கள் பிசினஸ் மிகவும் நன்றாக போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் கொரோனா பிரச்சினை வந்தது. திருமணம், கேட்டரிங் என எந்த நிகழ்ச்சிகளும் இல்லை. அப்படியே பிசினஸ் முற்றிலுமாக சரிந்துவிட்டது. அந்த சமயத்தில் என்னிடம் 3-5 லட்சம்தான் சேமிப்பு பணம் கையில் இருந்தது. அதைவைத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் என்னுடைய நண்பர்கள், உணவுப்பொருட்களை ஏற்றுமதி பிசினஸ் பண்ணலாம் என்று சொன்னார்கள். முதலில் வெங்காயத்தை வெளிநாட்டிற்கு அனுப்ப ஒரு ட்ரக்கிற்கு பாதி அளவு பணம்தான் நான் கொடுத்தேன். அதன்மூலம் ரூ.20000 அளவுக்குத்தான் வருமானம் கிடைத்தது. அப்படியே படிப்படியாக வளர்ந்து 2021 இறுதியில்தான் ‘மித்ரா கிரண் குளோபல்’ என்ற பெயரில் சர்வதேச பிசினஸ் ஒன்றை தொடங்கினோம். தொடர்ந்து ‘மித்ரா கேட்டரிங்’ பிசினஸையும் செய்துவருகிறோம். இப்போது இரண்டு பிசினஸையுமே கம்பெனியாக தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறோம்.


சென்னை வெள்ளத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினோம் - மாலதி (உ.ம்)

வீடு, பிசினஸ் என இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. 2021இல் இரட்டைக்குழந்தைகளை கர்ப்பந்தரித்தேன். அதற்கு முன்பே ஒரு மகன் இருக்கிறான். குடும்பத்தை பார்க்கவேண்டும், கர்ப்பம் ஒருபுறம், பிசினஸ் மறுபுறம் என சுற்றிலும் பயமாக இருந்தது. கர்ப்பமாக இருந்ததால் கொஞ்சம் ப்ரேக் எடுக்கச்சொல்லி பெற்றோர்கள் அறிவுறுத்தினார்கள். இருப்பினும் கொரோனாவால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டதால், அதே கஷ்டம் திரும்ப ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஈவென்ட்டுகளை தொடர்ந்து பார்த்துவந்தேன். கணவர், அம்மா, தம்பி மற்றும் உறவினர் அனைவரும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். இன்றுவரை ஈவென்ட்டுகளுக்கு போனாலோ அல்லது ஏற்றுமதி பிசினஸ் சம்பந்தமாக வெளிநாடுகளுக்கு போனாலோ அம்மா வீட்டில் குழந்தைகளை விட்டுச்செல்வோம். அந்த சூழல் மிகவும் கடினமாக இருந்தாலும் இப்போது குழந்தைகளுக்கு பழகிவிட்டது.

உங்களுடைய வீட்டில் ஏற்கனவே அரசியல் பின்புலம் இருக்கிறதே! உங்களுக்கு அரசியலில் வர ஆர்வம் இருக்கிறதா?

கண்டிப்பாக. எனக்கு இன்ஸ்பிரேஷனே ஜெயலலிதா அம்மா. சிறுவயதில் அரசியல் பற்றியெல்லாம் தெரியாது. திருமணமாகி கணவர் வீட்டிற்கு வந்தபிறகுதான் மாமனார் எப்போதும் பிஸியாக இருப்பதை பார்த்திருக்கிறேன். இரவு நேரத்தில் யாராவது வந்து பிரச்சினை என்று சொன்னால்கூட அவர் உடனே அங்கு போவார். இந்த வயதிலேயும் அவர் இவ்வளவு வேலை செய்கிறாரே என்று அவரை பார்க்கும்போதெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கும்.


அரசியலில் மாலதியின் இன்ஸ்பிரேஷன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து இப்போது துணை மாவட்ட செயலாளராக உயர்ந்திருக்கிறார். அவர்தான் என்னுடைய மற்றொரு ரோல் மாடல். இப்போது அவருக்கு 76 வயது. இன்றும் யாராவது வந்து அவர்களுடைய பகுதியில் ஏதேனும் பிரச்சினை என்று சொன்னால் உடனே வந்துவிடுவார். அவரை பார்க்கும்போதெல்லாம், நம்முடைய வயதிற்கு நாம் எவ்வளவு உழைக்கவேண்டும் என்று தோன்றும். குறிப்பாக, சென்னையில் வெள்ளம் வந்தபோது எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்று எல்லாருக்குமே தெரியும். எங்களுடைய பகுதி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது. அப்போது என்னுடைய மாமனார், நான், எனது கணவர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை பாதுகாப்பாக பள்ளிகளில் தங்க வைப்பது, அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்வது போன்றவற்றை முழு மனதுடன் செய்தோம். ஆரம்பத்தில் அரசியலாக பார்த்த மக்கள் பின்பு நாங்கள் மனதாரத்தான் செய்கிறோம் என்பதை புரிந்துகொண்டனர். அந்த சமயத்தில் எப்போது வெளியே சென்றாலும் அங்குள்ள மக்கள் எங்களுக்கு வணக்கம் சொல்வார்கள். அப்போதுதான் உதவி செய்தால் அதற்கான பலனாக மரியாதை கிடைக்கும் என்பதை புரிந்துகொண்டேன். மக்கள் மத்தியில் எனக்கு ஆதரவு இருக்கிறது என்பதால் எனக்கு அரசியலுக்குள் வர ஆசை உண்டு. ஏற்கனவே பிசினஸ் பண்ணிக்கொண்டு இருப்பதால் அரசியலில் வருமானம் வரவேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செய்யவெண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

Updated On 19 Aug 2024 11:43 PM IST
ராணி

ராணி

Next Story