இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 பதவிகளுக்கான, 'குரூப்-4' தேர்வு, வரும் ஜூன் மாதம் 9-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு வெளியாகியுள்ள அறிவிப்பில் புதிதாக வன காவலர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இரவு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கி அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்வர்கள் பலரும் விண்ணப்பிக்க தொடங்கியுள்ள அதே வேளையில், இந்த தேர்வை யார் யார் எல்லாம் எழுதலாம்? அதற்கான வயது வரம்பு என்ன? சிலபஸ் எப்படி இருக்கும்? எவ்வளவு மார்க்குக்கு தேர்வு நடைபெறும்? தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்? போன்ற பல கேள்விகள் தேர்வினை எழுத தயாராகி வருபவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அவர்கள் ஒவ்வொருவரின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து விளக்குகிறார் கல்வியாளர் சிபிகுமரன்.

தற்போது வெளியாகி உள்ள TNPSC குரூப் 4 அறிவிப்பாணையில் எந்தெந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன?

பொதுவாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கு இது போன்ற அறிவிப்புகள் வெளியிடும்போது, அதற்கான அடிப்படை கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என அறிவிப்பார்கள். ஆனால் இந்த முறை, இதுவரை செய்திராத முயற்சியாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு என மூன்று பிரிவுகளாக அடிப்படை கல்வித்தகுதியை பிரித்து, அதற்கேற்றார் போன்று பணி அமர்த்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவென்றால், இதுவரை குரூப் 4 பணியிடங்களில் வனத்துறை சார்ந்த வேலைகளில் பணி அமர்த்துவதற்கான அறிவிப்புகள் வெளிவந்ததில்லை. ஆனால் இந்தமுறை வன காவலர், வனக்காப்பாளர் ஆகிய இரண்டு பணியிடங்கள் குரூப் 4 தேர்வு முறையோடு இணைக்கப்பட்டுள்ளது.


வனத்துறை தொடர்பான 2 பணியிடங்கள் 'குரூப் 4' தேர்வில் புதிதாக சேர்ப்பு

இதனால் தகுதியுடைய நபர்களை தேர்வு செய்வதில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை தேர்வருக்கு வந்துள்ளது. காரணம், முன்பு குரூப் 4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை இரண்டு பிரிவுகளாக மட்டுமே இருந்தது. ஒன்று இளநிலை உதவியாளர் என சொல்லப்படக்கூடிய 'ஜூனியர் அசிஸ்டண்ட்' மற்றொன்று தட்டச்சு செய்யும் நபர்களான 'டைப்பிஸ்ட்' , 'ஸ்டெனோ டைப்பிஸ்ட்' ஆகிய இரு பணியிடங்கள்தான். இதில் தட்டச்சு தெரிந்தவர்கள் 'டைப்பிஸ்ட்', 'ஸ்டெனோ டைப்பிஸ்ட்' வேலைக்கும், பிறர் 'ஜூனியர் அசிஸ்டண்ட்' வேலைக்கும் பணியமர்த்தப்பட்டு வந்தனர். ஆனால் இந்தமுறை அப்படி இல்லாமல் வன காவலர் மற்றும் வனங்காப்பாளர் போன்ற பணிகளுக்கு தனி தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில பணியிடங்கள் பழங்குடியின மக்களுக்காக மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, வேறு சில பணிகளுக்கோ ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற வரையறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுபோல வயது வரம்புகளிலும் பல மாற்றங்கள் வந்துள்ளதோடு, வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அறிவிக்கப்பட்டுள்ள 6,244 பணியிடங்களில், முக்கியமாக சொல்லப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான வயது வரம்பு 42 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டமும், தேர்வு முறையும் அனைவருக்குமே ஒன்றுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு எவ்வளவு?

இந்தமுறை வெளிவந்துள்ள அறிவிப்பாணையின் படி, 10ஆம் வகுப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தனை பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18, அதேபோல் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு அதிகபட்ச வயது 42. இதேவேளையில் முற்பட்ட வகுப்பினருக்கு எல்லா பணிகளுக்குமே அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணியை தவிர வேறெந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன?


தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவிகளின் கோப்புக் காட்சி

கிராம நிர்வாக அலுவலர் பணியை தவிர இளநிலை உதவியாளர் என சொல்லப்படக்கூடிய 'ஜூனியர் அசிஸ்டண்ட்' பணியிடங்கள் வெவ்வேறு துறை சார்ந்த அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ளன. அத்தகைய இளநிலை உதவியாளர் பணியில் குறிப்பிட்ட துறை சார்ந்த பணியிடங்களுக்கு மட்டும் பட்டப்படிப்பை அடிப்படை தகுதியாக நிர்ணயித்துள்ளனர். அதேபோல் சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பையும், வேறு சில துறை சார்ந்த இளநிலை உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பையும் அடிப்படை தகுதியாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2900 பணியிடங்கள் ஜூனியர் அசிஸ்டன்ட் வேலைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான அடிப்படை தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த 'ஜூனியர் அசிஸ்டண்ட்' பணிக்கு பட்டப்படிப்பு அடிப்படை தகுதியாக தேவைப்படுகிறது?

12 பணியிடங்களுக்கு பட்டப்படிப்பை அடிப்படை தகுதியாக வைத்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் என சொல்ல கூடிய Women Development Corporation-களில் தேவைப்படும் 'ஜூனியர் அசிஸ்டண்ட்' பணிகளுக்குத்தான் பட்டப்படிப்பை அடிப்படை தகுதியாக அறிவித்துள்ளனர். இதில் பெரிய வேறுபாடு கிடையாது. எந்த பட்டப்படிப்பு முடித்தவர்களும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் நாம் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோம் என்பது அளவீடு கிடையாது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று குரூப் 4 தேர்விலே எந்தளவிற்கு மதிப்பெண்கள் பெறப்போகிறோம் என்பதே அளவீடு. TNPSC தேர்வு என்று மட்டும் இல்லாமல் SSC, UPSC, RRB, வங்கி தேர்வு என அனைத்திற்குமே இதே வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது.

தற்போதைய குரூப் 4 தேர்வில் மொத்தம் எத்தனை மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு முறையுள்ளது?


வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வு

வரும் குரூப் 4 தேர்வில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வருகின்ற ஜூன் மாதம் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. இதெற்கெல்லாம் முன்னதாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது ஒவ்வொரு தேர்வரும் மிக கவனமாக இருக்க வேண்டும். காரணம் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் கல்வி தகுதி மாறுபடுகிறது. வயது வரம்பு மாறுபடுகிறது. அதேபோல், அதற்கான அடிப்படை சான்றிதழ்கள் சமர்ப்பிக்கும் போதும், நாம் விண்ணப்பிக்கும் பணியிடங்களுக்கு ஏற்ற ஆவணங்களை இணைப்பது மிக அவசியம். இவற்றை எல்லாம் கவனிக்காவிட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் கேட்டது போல பாடத்திட்டத்தை பொருத்த வரை தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது அரசு புதிய தேர்வுமுறையை வடிவமைத்துள்ளனர். அதன் படி வெறும் எழுத்து தேர்வாகவே இருக்கும் குரூப் 4 தேர்வில், 100 வினாக்கள் பொது தமிழிலும், 100 வினாக்கள் பொது அறிவு தொடர்பாகவும் கேட்கப்படுகிறது. அதில் குறிப்பாக பொது அறிவு கேள்விகளை பொறுத்தவரை 75 கேள்விகள் நடப்பு நிகழ்வுகள் தொடர்பாகவும், 25 கேள்விகள் கணக்கு சார்ந்த விஷயங்களை கையாளும் விதமான கேள்விகளாகவும் கேட்கப்படும். இவற்றில் ஒவ்வொரு கேள்விகளுக்கும் தலா ஒன்றரை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு, மொத்தம் 200 கேள்விகள் கேட்டு 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இதில் ஆங்கில வழியில் பயின்றவர்களுக்கும், பொதுத்தமிழ் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிவிலக்காக மாற்றுத்திறனாளிகள் மட்டும் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஒரு மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.

குரூப் 4 தேர்வினை எதிர்கொள்ள, எந்த பாடத்திட்டங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்க வேண்டும்?

பாடத்திட்டங்களை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையத்தளத்திலேயே, எந்தெந்த விஷயங்கள் தொடர்பான கேள்விகள் குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொது அறிவு கேள்விகளில் இந்திய வரலாறு, கலாச்சாரம், அதன் வளர்ச்சி தொடர்பான கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. மேலும் இந்திய அரசியலமைப்பு தொடர்பான கேள்விகள், இந்திய புவியியல், இந்திய பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் தொடர்பான கேள்விகள் என பல பிரிவுகளை சார்ந்த வினாக்கள் பொது அறிவு பிரிவில் கேட்கப்படுகின்றன. இதில் குறிப்பாக மற்ற தேர்வாணைய குழுக்கள் நடத்துகின்ற தேர்வில் கேட்கப்படாத கேள்விகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வில், தமிழக அரசியல், வரலாறு, இலக்கியம், புவியியல்,கலாச்சாரம், அதன் வளர்ச்சி தொடர்பான கேள்விகளும் கேட்கப்படுகின்றன. மேலும் தற்போதைய தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்கள், அதன் வழிமுறைகள் தொடர்பான வினாக்களும் இடம்பெறும். இந்த கேள்விகள் பொது தமிழ் பகுதியில் மட்டும் அல்லாமல், பொது அறிவு பிரிவுகளிலும் கேட்கப்படுகின்றன. கடந்த முறை நடந்த குரூப் 4 தேர்விலும் கூட தமிழ்நாட்டின் வரலாறு தொடர்பான கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

TNPSC குரூப் 4 தேர்வினில் வெற்றியடைய தமிழ் மொழித்தாளில் அதிக கவனம் செலுத்தினாலே போதுமா?


தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்

இல்லை இல்லை, அப்படி சொல்ல முடியாது. பொது அறிவு தொடர்பாக இருக்கும் 100 வினாக்களையும் நாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம். வேண்டும் என்றால் நமது வெற்றியை தீர்மானிப்பதில் தமிழ் முக்கிய பங்களிக்கிறது என கூறலாம். ஏனெனில் கட்-ஆஃப் மார்க் என சொல்லப்படக்கூடிய தேர்ச்சி தகுதி மதிப்பெண்ணான 170 அல்லது 175 வினாக்களுக்கு பதிலளிக்க தமிழ் மிக உறுதுணையாக இருக்கிறது. இருப்பினும், அதில் மட்டுமே கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது சாத்தியம் இல்லை. புத்தகங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படிப்பது குரூப் 4 தேர்விற்கு போதுமானதாக இருக்கும். காரணம், கிட்டத்தட்ட 85 சதவீத வினாக்கள் இதிலிருந்து தான் கேட்கப்படுகின்றன. ஆனால் இந்தமுறை சில மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் பட்டப்படிப்பு அடிப்படையிலும் சில பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் கேட்கப்படும் கேள்விகளின் தரம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இருந்தும் முன்பு பின்பற்றப்பட்ட கேள்வி வழிமுறையான கொள்குறி வகையிலேயே வினாக்கள் கேட்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த தேர்விற்கு மாணவர்கள் எப்படி தயாராவது? பாடத்திட்டங்கள் தொடர்பான புத்தகங்களை எந்த வழிமுறையில் படிக்கலாம்?

ஒவ்வொரு தேர்வருக்கும் ஒவ்வொரு விதமான பின்புலமும், படிக்கும் முறையும் இருக்கும். சிலர் தமிழ் வழி கல்வி முறையில் பயின்று வந்திருப்பார்கள். வேறு சிலர் ஆங்கில வழியில் அறிவியல் அல்லது பொறியியல் தொடர்பான விஷயங்களை கற்று தேர்ந்திருப்பார்கள். இந்த குரூப் 4 தேர்வை பொறுத்தவரை பெரும்பாலான நபர்கள் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள், கிட்டத்தட்ட 90 சதவிகித மக்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் 70 சதவீத நபர்கள் பொறியியல் படித்தவர்களாவே இருக்கிறார்கள். இவர்கள் தவிர தமிழ் வழி கல்விமுறையிலேயே படித்த கிராமபுற மாணவர்களும் விண்ணப்பிக்கிறார்கள். ஆதலால் ஒவ்வொரு தேர்வருக்கும் அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்றார் போன்ற ஒவ்வொரு துறை சார்ந்த விஷயங்களிலும் அவர்களின் ஆளுமை திறன் அதிகமாக இருக்கும். சிலர் வரலாறு, கலாச்சாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். வேறு சிலரோ பொது தமிழ் சார்ந்த கேள்விகளுக்கு சரியான விடையளிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். அதே போல் சிலர் கணிதம் சார்ந்த கேள்விகளுக்கும், புவியியல் தொடர்பான கேள்விகளுக்கும் சரியாக பதிலளிப்பார்கள். ஆதலால் படிப்பதற்கான அட்டவணையை உருவாக்கும்போது, அவர்களது விருப்பத்திற்குரிய பாடங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்ல பலனை தரும். தெரிந்த பாடம்தானே என்று அதனை தவிர்த்துவிட கூடாது. இது தவிர பிற பாடத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சரியாக திட்டமிட்டு படித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

Updated On 12 Feb 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story