நீங்களும் துப்பறிவாளராகலாம்! டிடெக்ட்டிவாக நினைக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை!
திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை பார்க்கும்போது சிலருக்கு அதேபோல் தானும் சண்டைபோட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதேபோல் ஒவ்வொருவருக்கும் பாட்டு, நடனம், இசை, விளையாட்டு என ஒவ்வொன்றின்மீது நாட்டமிருக்கும். அதுபோன்ற துறைகளில் ஒன்றுதான் துப்பறிவுத்துறை. இந்த துறைகுறித்து பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காவிட்டாலும், க்ரைம் - த்ரில்லர் கதைகள் மற்றும் அதில் பிரச்சினையை சரிசெய்யும் நாயகனால் கவரப்படும் பலருக்கும் தானும் டிடெக்டிவ் ஆகவேண்டும் என்ற ஆசை அந்த சமயத்திலாவது கட்டாயம் வந்துபோகும். ஆனால் அதுவே ஒருசிலருக்கு பிடித்த துறையாகவே மாறிப்போகும். அப்படி, தான் படித்த க்ரைம் கதைகளால் ஈர்க்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்கு முன்பே துப்பறிவுத் துறையையே தனது தொழிலாக மாற்றிக்கொண்ட டிடெக்ட்டிவ் பிரசன்னா தனது அனுபவங்கள் மற்றும் சிக்கலான சவால்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
இந்த காலகட்டத்தில் பெண்கள் பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
முதலில் நாம் மாறவேண்டும். நாம் மாறாவிட்டால் எதுவும் மாறாது. உதாரணத்திற்கு, ‘மதுவை ஒழிக்கவேண்டும்’ என்று ஆங்காங்கே பரப்புரையில் ஈடுபடுவதை நாம் பார்ப்பதுண்டு. ஆனால் அப்படி சொல்லும்போதே அவர்கள் கையில் ஒரு க்ளாஸ் மது வைத்திருப்பார்கள். அதுபோல, ‘நீ வேறு ஒருவருடன் உறவில் இருக்கிறாய். உன்னுடைய குடும்பத்தை நடு ரோட்டில் விட்டுவிட்டாய்’ என்று ஒருவருக்கு அட்வைஸ் செய்துகொண்டே இருப்பார். அதே வாய்ப்பு தனக்கு கிடைக்கும்போது அவரும் அதையேதான் செய்வார். ஏனென்றால் எங்கு ஒரு தவறு, பிரச்சினை, திருட்டு என என்னவாக இருந்தாலும் பிரச்சினை நம்மிடம் இருந்தால் முதலில் நாம்தான் அதை சரிசெய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அது மாறவேண்டும், இது மாறவேண்டும், அவன் மாறவேண்டும், இவன் மாறவேண்டும் என்று கேட்டால் மாறாது. நம்மிடம் மாற்றம் வராதவரைக்கும் எதுவுமே மாறாது. அறிவுரையோ, பரிந்துரையோ எளிதில் செய்துவிடலாம். ஆனால் அந்த தவறு நம்மிடம் இருக்கிறதா என்பதை முதலில் கண்டறிந்து அதை மாற்றிக்கொள்ள வேண்டும். தான் முதலில் குடிக்காமல் இருந்து பிறகு மற்றவருக்கு சொன்னால் கட்டாயம் அவர் கேட்பார்.
பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க செய்யவேண்டியவை
நமது சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், நாம் மாறாமல், எதையும் மாற்றிக்கொள்ளாமல் மற்றவர்களை முதலில் மாறும்படி கூறுவோம். உதாரணத்திற்கு, ஏரி இருக்கும் பகுதியில் வீடு கட்டிவிட்டு வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டதாக புலம்புவார்கள். இதில் தவறு யாரிடம் இருக்கிறது? அதுபோலத்தான் டீனேஜரோ, பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் தவறை உணரவேண்டும். ஒரு பிரச்சினை என்றால் அதில் தவறு யாரிடம் என்பதை முதலில் யோசிக்கவேண்டும். அது பொறாமையோ, ஈகோவோ எதுவாக இருந்தாலும் சரி. மாற்றம் நம்மிடமிருந்துதான் வரவேண்டும். இல்லாவிட்டால் எதுவுமே மாறாது.
இப்போது டெக்னாலஜி நிறைய வளர்ந்துவிட்டது. அடுத்து AIதான் உலகையே ஆளப்போகிறது என்று சொல்கிறார்கள். துப்பறிவுத்துறையில் AI எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது?
முன்பெல்லாம் ஒருவரை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினாலோ அவரை பின்தொடர நினைத்தாலோ எல்லா இடங்களுக்குமே நாம்தான் செல்லவேண்டும். ஆனால் இப்போது AI நிறைய உதவுகிறது. முன்பெல்லாம் ஒரு புகைப்படமோ, வாய்ஸ் ரெக்கார்டோ அல்லது வீடியோவோ எதுவாக இருந்தாலும் அது உண்மையா, போலியா என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இப்போது AI-யே அவை அனைத்தையும் காட்டிக்கொடுத்துவிடுகிறது.
துப்பறிவுத்துறைக்கு AI மூலம் கிடைக்கும் நன்மைகள்
நீங்கள் துப்பறிவு துறையில் இருப்பதால் மற்றவர்களை பார்க்கும்போது அதன் தாக்கம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
நிறையவே இருக்கும். நான் சாதாரணமாக பேசினாலும் என் பிள்ளைகளிடம்கூட நான் ஒரு டிடெக்ட்டிவ் பேசுவதுபோன்றுதான் இருப்பதாக சொல்வார்கள். நம்மை மீறி அப்படி வந்துவிடுகிறது போல. என் கணவரை எங்காவது வெளியே அனுப்பி, அவர் வர லேட்டானால் இதுதானே செய்தீர்கள்? என்று கேட்டாலே அவரும் அப்படித்தான் சொல்வார். நம்மையும் அறியாமல் நாம் பேசும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு அப்படி தெரிகிறது. ஆனால் எனக்கு அப்படி தெரிந்ததில்லை.
ஒரு பெண்ணாக இந்த துறையில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? இந்த துறைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
எனக்கு உறவினர்கள், நண்பர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் க்ளயெண்ட்ஸின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 17 வருடங்களுக்கு முன்பிருந்த க்ளயெண்ட்ஸ் கூட இப்போதுவரை என்னிடம் நன்றாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு எங்களுடைய உறவு நன்றாக இருக்கிறது. என்னை அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத்தான் நினைப்பார்கள். இதுபோன்ற உறவுகளை சம்பாதித்திருப்பதுதான் என்னை பொருத்தவரை நான் சாதித்ததாக நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு பிரச்சினையை சரிசெய்யவும், தேவைகளை பூர்த்தி செய்யவும்தான் என்னை தேடிவருகிறார்கள். அவற்றை நடத்திக்கொடுப்பதால் என்னிடம் நல்ல உறவை கொண்டிருக்கிறார்கள்.
துப்பறிவுத்துறைக்கு வரவிரும்பும் பெண்கள் என்ன செய்யலாம்?
டிடெக்ட்டிவ்ஸை தேடிவருபவர்கள் மனமுடைந்துதான் வருவார்கள். பிரச்சினையை யாரிடம் கொண்டுபோவது? எங்கு சென்று சொல்வது? என்று தெரியாமல், வெளியே யாரிடமும் சொல்லமுடியாமல் எமோஷனலாக கடினமான பாதையில் செல்பவர்கள்தான் வருவார்கள். அப்போது இவர்களிடம் போனால் சரிசெய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் வருவார்கள். துப்பறிவுத்துறையில் சாதிக்க துடிக்கும் பெண்கள், முடிந்தவரை நேர்மையாகவும், உண்மையாகவும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். நம்மிடம் தேடி வருபவர்களின் பிரச்சினையை மேலும் கடினமாக்காமல் சுமுகமாக முடித்துத்தர வேண்டும். அதனால் நல்லது செய்யாவிட்டாலும் கெட்டது செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டிடெக்ட்டிவ் ஏஜென்ஸிகளில் என்னென்ன மாதிரியான கேஸ்கள் கையாளப்படுகின்றன?
ப்ரீ-மேட்ரிமோனியல், போஸ்ட் மேட்ரிமோனியல், கள்ளத் தொடர்புகள், டீனேஜர்களை கண்காணித்தல், பொதுவான கண்காணிப்புகள், Bug detectors இதுபோன்ற பல சேவைகளை செய்துவருகிறோம்.