இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தொழில்நுட்பங்கள் வளர வளர குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே குற்றங்கள் அதிகரிக்க காரணமா? என்றால் இல்லை. அதைவிட முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் நம்பிக்கை துரோகம் என்கிறார், துப்பறிவாளர் பிரசன்னா. சமுதாயத்தில் இன்று பல ஏமாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் கோபங்கள், அதன்மூலம் தவறுசெய்ய தூண்டும் எண்ணங்கள் போன்றவைதான் பல பிரச்சினைகள் மற்றும் உறவுகளுக்கிடையேயான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது என்கிறார் அவர். மேலும் பிரச்சினை என்றாலே துப்பறிவாளர்களை தேடிச்செல்வோரின் எண்ணிக்கை இப்போது அதிகரித்திருந்தாலும் தங்களுடைய யூகங்கள் தவறு எனும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தங்களையே மிரட்டுவதாக கூறும் அவர், தான் இதுவரை சந்தித்த முக்கியமான கேஸ்கள் குறித்து நம்முடன் பகிர்கிறார்.

10 வருடங்களுக்கு முன்புடன் ஒப்பிடுபோது குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

மிகவும் அதிகரித்திருக்கிறது. அதை விரல்விட்டெல்லாம் எண்ண முடியாது. அதிலும் குறிப்பாக, மனதை பாதிக்கும் ஒரு குற்றம் என்னவென்றால் ‘மாடர்ன் ப்ராஷ்டிடியூஷன்’. இதனால் 50 வயதுக்கும் மேலுள்ள பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யாரென்றால், பெரும்பாலும் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்கள். அவர்கள், குறைந்தது 5 பேர் ஒரு வீடு அல்லது வில்லாவை ஒரு நாளைக்கு வாடகைக்கு புக் செய்கின்றனர். அங்கு 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இருப்பர். அவர்களுடன் ஒருநாள் முழுவதும் உல்லாசமாக செலவழிக்கின்றனர். இதற்கு ஒரு ஆளுக்கு 25 ஆயிரம் முதல் கட்டணம் வாங்கப்படுகிறது. இதுபோன்ற வீடுகளின் பாதுகாப்புக்கு பவுன்சர்கள் மற்றும் நாய்கள்கூட இருக்கின்றன. இது நிறைய இடங்களில் பரவலாக நடக்கின்றது. இளம்வயதில் குடும்பத்துக்காக பாடுபட்டு, தங்கள் கணவரின் ரிட்டையர்மென்டுக்கு பிறகு ஒரு வயதில் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கும்போது இதுகுறித்து அறியும் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால் அந்த ஆண்களோ எதுகுறித்தும் கவலைப்படாமல் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை இதுபோல் வெளியே செல்கின்றனர். இளம்பெண்களின் கணவர்கள் இதுபோல் செய்யும்போது அவர்களிடமிருந்து விலகிச்செல்லும் முடிவை எடுக்கின்றனர். ஆனால் வயதானவர்களுக்கு அந்த வாய்ப்புகூட கிடைப்பதில்லை. இதுபோன்ற கேஸ்களில் அந்த பெண்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. நிறையப் பெண்கள் எதுவும் செய்யமுடியாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இருப்பினும் சில பெண்கள் கணவரின் இந்த நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.


ரிட்டையர்மென்ட் ஆன சில கணவர்களின் செயலால் பாதிக்கப்படும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

துப்பறிவாளர்களை அதிகம் தேடிவருவது ஆண்களா? பெண்களா? யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

ஆண்கள், பெண்கள் இருவருமே சரிசமமாகத்தான் வருகிறார்கள். ஆனால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ ஆண்கள்தான். ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றால் அதை உடனே யாரிடமாவது சொல்லி அழுதுவிடுகிறார்கள். ஆனால் ஆண்கள் நிறைய யோசிக்கிறார்கள். யாரிடம் சொல்வது? எங்கு கொண்டுபோவது என தயங்குகின்றனர். எந்த முயற்சி எடுத்தாலும் அது அவர்களுக்கே பிரச்சினையாக முடிவதால், அளவுக்கதிகமாக யோசிக்கின்றனர். அப்படியொரு சூழ்நிலையில் துப்பறிவாளர்களிடம் வரும்போது அவர்களால் எதையும் முழுமையாக சொல்லவும் முடியாமல், அழவும் முடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். கடைசியில் தவறு அவர்களுடைய மனைவி மீதுதான் என தெரியும்போது ஒருசிலர் அமைதியாக அதை கையாளுவார்கள், ஆனால் ஒருசிலரோ கத்தி அதை உடைத்துவிடுவார்கள், ஒருசிலர் தனது மனைவியை விட்டுபிடிக்கலாம் என்று நினைப்பார்கள், ஒருசிலர் பேசி புரியவைக்கிறார்கள். தனது துணை தவறு செய்கிறார்கள் என தெரிந்தும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கருத்தில்கொண்டு சிலர் அவர்களை ஏற்றுக்கொள்கின்றனர்.


நம்பிக்கை துரோகத்தால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்கள்

இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் இருந்திருந்தால் சமுதாயம் நன்றாக இருந்திருக்கும் என நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன?

நம்பிக்கை துரோகம். காலங்காலமாக நமக்கு விடை தெரியாமல் இருக்கும் கேள்வி எங்கு? யார் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள்? என்பதுதான். நட்பு, காதல், கணவன் - மனைவி, அண்ணன் - தம்பி எல்லா உறவுகளிலும் நம்பிக்கை துரோகங்கள் இருக்கின்றன. இதுமட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று நடக்கும் பல்வேறு குற்றங்கள் நடந்திருக்காது. உதாரணத்திற்கு, பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்களே என்று ஒரு பெண் தனது வீட்டிற்கே தெரியாமல் நகைகளையெல்லாம் வைத்து பணம் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர்களோ இந்த பெண்ணிற்கு தெரியாமல் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவர, இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. எனவே என்னிடம் வந்து இந்த பிரச்சினையை விளக்கினார்கள். போன் நம்பர்கூட தெரியவில்லை என்று கூறி எப்படியாவது கண்டுபிடித்து தரச்சொன்னார்கள். அந்த இடத்தில் என்ன பிரச்சினை என்று பார்த்தோமானால் நம்பிக்கை துரோகம்தான். இதுபோல் எல்லா இடங்களிலுமே நம்பிக்கை துரோகங்கள் இருக்கின்றன. அதை குறைத்துக்கொண்டாலே சமுதாயத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை குறைக்கவும் முடியவில்லை, அழிக்கவும் முடியவில்லை.


தெகிடி படத்தை போன்று நிஜத்திலும் செயல்படும் துப்பறிவாளர்கள்

தெகிடி, துப்பவறிவாளன் போன்ற சமீபத்திய திரைப்படங்களில் துப்பறிவாளர்கள் குறித்து பார்க்கிறோம். நிஜத்திலும் அப்படித்தான் இருக்குமா?

தெகிடி படம்போன்றுதான் நிஜத்தில் பெரும்பாலும் இருக்கும். துப்பறிவாளர்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை எந்தவிதத்திலும் மீறக்கூடாது. எக்காரணத்தைக்கொண்டும் காவல்துறையின் வேலைகளில் துப்பறிவாளர்களின் தலையீடோ குறுக்கீடோ இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு, ஒரு கொலை நடக்கும்போது துப்பறிவாளர்கள் அதுகுறித்து விசாரணை நடத்தக்கூடாது. அதுபோன்ற கேஸ்கள் எங்களிடம் வரும்போது காவல்துறையை அணுகும்படி கூறிவிடுவோம். எங்களுக்கும் என்னென்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்ற விதிமுறைகள் இருக்கின்றன. என்னவாக இருந்தாலும் சினிமா வேறு, நிஜ வாழ்க்கையில் டிடெக்டிவாக இருப்பது வேறு. காவல்துறை, நீதி என எந்த துறையாக இருந்தாலும் சினிமாவில் பார்ப்பதுபோன்று நிஜத்தில் இருக்காது.

துப்பறிவாளர்களுக்கும் காவல்துறைக்குமான உறவு எப்படியிருக்கும்?

நன்றாக சுமுகமாக இருக்கும். துப்பறிவாளர்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் காவல்துறையினர் உதவுவார்கள்.


பிரச்சினைகளின்போது துப்பறிவாளர்களுக்கு உதவும் காவலர்கள்

பெரிய கேஸ்களை கையாளும்போது அச்சுறுத்தல்கள் வந்ததுண்டா?

சில கேஸ்களில் மிகவும் கஷ்டப்பட்டு தவறை கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் ரிப்போர்ட்களை மாற்றித்தரும்படி மிரட்டுவார்கள். உதாரணத்திற்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபர் என்னிடம் வந்தார். அவர் தனது மனைவி தவறான ஒரு விஷயத்தில் ஈடுபடுவதாகவும் அவரிடமிருந்து விவாகரத்து பெறவிரும்புவதாகவும் கூறினார். மேலும் தனது மனைவி என்ன தவறு செய்கிறார் என்பதை என்னிடம் காட்டுவதாகவும் கூறி, அதை ஒரு ரிப்போர்ட்டாக கொடுத்தால் அதைவைத்து நீதிமன்றத்தில் விவாகரத்து வாங்கிவிடுவதாகவும் கூறினார். அவர் ஒரு வெப்சைட்டிலிருந்து ஆபாச வீடியோக்களின் ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்து, அதில் இருப்பது தனது மனைவி என்றும், அந்த வீடியோ எடுத்திருக்கும் இடம் தனது வீட்டு கிச்சன், அவை தனது வீட்டிலிருக்கும் பொருள்கள் என்றும் குறிப்பிட்டு அனுப்பினார். மேலும் சில வீடியோக்களையும் டவுன்லோட் செய்து அனுப்பினார். கொஞ்ச நாளைக்குப்பிறகு எனக்கு அனுப்பவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதேசமயம் இந்த நபருக்கு இயற்கையாகவே சந்தேக குணம் அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பெண், வீட்டு காலெண்டரில் குறித்து வைத்திருக்கும், தண்ணீர் கேன், பால்காரர் போன்ற செல்போன் எண்களையெல்லாம் அவளுடைய கஸ்டமர்களுடைய போன் நம்பர் என்று அவர் என்னிடம் கூறினார். அவர்கள் ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் அந்த பெண் கிராமத்திலிருந்து அவரை திருமணம் செய்துகொண்டு வந்திருந்தார். அதனால் அவரிடம் எதையும் விசாரிக்காமல் சொல்லமுடியாது என்று கூறிவிட்டு, நான் விசாரணையில் ஈடுபட்டபோது அந்த பெண் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணின் ஊருக்கு சென்று விசாரித்தபோது திருமணமான காலத்திலிருந்தே அந்த நபர் தங்களுடைய பெண்ணை சந்தேகித்து அடித்து கொடுமைப்படுத்தி வந்ததுடன், இரண்டு குழந்தைகளுடன் தங்களுடைய வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டதாக கூறினார்கள். அந்த பெண்மீது தவறு இல்லை என்று நானும் ரிப்போர்ட் கொடுத்துவிட்டேன். அதன்பிறகு அந்த நபர் ஆட்களை கூட்டிவந்து என்னை கடுமையாக மிரட்டியதுடன், தான் கூறுவதுதான் உண்மை என்றும், ரிப்போர்ட்டை மாற்றி கொடுத்தே ஆகவேண்டுமென்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் என்னிடம் மட்டுமல்லாமல் நிறையப்பேரிடம் அந்த வீடியோக்கள் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்களை காண்பித்து அதில் இருப்பது தனது மனைவிதான் என்று கூறியிருந்தார். அந்த பெண்ணை பற்றி அவர் கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லை. இதுபோன்று பிரச்சினைகள் அவ்வப்போது வருவதுண்டு.

Updated On 23 Dec 2024 5:24 PM IST
ராணி

ராணி

Next Story