சமூக வலைதளங்களால் எந்த அளவிற்கு நல்ல விஷயங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறதோ அதைவிட பலமடங்கு அதிகமாக கெட்ட விஷயங்களும் அவற்றின்மூலம் பரப்பப்படுகிறது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. சமூக வலைதளங்கள்மூலம் பலர் பாசிட்டிவாக பிரபலமாகவேண்டுமென நினைத்தாலும், ஒருசிலர் எப்படியாவது பிரபலமானால்போதும், அது எதிர்மறையாக இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருக்கின்றனர். பிரபலமாகிவிட்டாலே போதும், பணம் சம்பாதித்துவிடலாம் என்ற எண்ணம் இங்கு நிறையப்பேருக்கு இருக்கிறது. டிக்டாக்கில் தொடங்கி, தற்போது யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என ஆபாச வீடியோக்களை போட்டு பிரபலமடைந்த ஒருசிலர் இதுகுறித்து வெளிப்படையாகவே பேசியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி பிரபலமானவர்களில் ஒருவர் திவ்யா கள்ளச்சி. கார்த்தி என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டதாக குற்றஞ்சாட்டி அழுது வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான திவ்யா, ஒரு கட்டத்தில் கார்த்தியை கண்டுபிடித்துவிட்டதாகக்கூறி அவருடன் சேர்ந்து தற்போது தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சிறுவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், அவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபடவைத்ததாகவும் கூறி திவ்யா, கார்த்தி உட்பட நான்குபேரை போலீசார் கைதுசெய்திருக்கின்றனர். இவர்கள்மீது போக்சோ உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திவ்யா கள்ளச்சி யார்? சிறார் பாலியல் சீண்டல் வழக்கில் சிக்கியது எப்படி? விரிவாக பார்க்கலாம்.
திவ்யா கள்ளச்சி யார்?
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் டிக்டாக் மோகம் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது பலர் ஆடல், பாடல், ஓவியம் போன்ற தங்களது பல்வேறு திறமைகளை வெளிகொண்டுவரும் ஒரு தளமாக டிக்டாக்கை பயன்படுத்தத் தொடங்கினர். யூடியூபில் பிரபலமாக இருந்தவர்கள் பலரும் ஷார்ட் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை பார்த்து டிக்டாக்கில் இறங்கினர். அப்படி பல திறமைகளுக்கு மத்தியில் தனது காதலன் கார்த்தியை காணோம் என்று அப்பாவிபோல கூறி, அழுது தொடர்ந்து வீடியோக்களை போட்டு வந்தவர்தான் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா கள்ளச்சி என்கிற திவ்யா. தொடர்ந்து பார்ப்பவர்கள் பலரை தனது கார்த்தி என்று கூறுவதும், கார்த்தியை திட்டுவதாகக் கூறி கெட்ட வார்த்தைகளில் பேசி அழுது வீடியோ போடுவதுமாக இருந்தார். ஒருகட்டத்தில் டிக்டாக் தடைசெய்யப்பட, யூடியூப் பக்கம் சென்றார் திவ்யா. மேலும் இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவற்றில் பெரும்பாலும் தனது கார்த்தியை தேடுவதும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கேட்டுவந்தார். ஒரு கட்டத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கும் சென்று தனது கார்த்தியை கண்டுபிடித்து தருமாறு கதறி அழுதார். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பலரும் விமர்சித்தனர். மேலும் பல யூடியூபர்களும் இவரை அழைத்து பேட்டி எடுக்கத் தொடங்கினர்.
கார்த்தியுடன் திவ்யா கள்ளச்சி
ஒருவழியாக கிடைத்த கார்த்தி!
ஒருபுறம் கார்த்தியை தேடிக்கொண்டே இருந்தாலும், மற்றொருபுறம் தன்னை ஒரு செலிப்ரிட்டியாக காட்டிக்கொண்ட திவ்யா, பல ஆண்களுடன் சேர்ந்து அநாகரிகமான விதங்களில் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். பலமுறை திருமணம் செய்தது போன்ற வீடியோக்களை பதிவேற்றி, அவை அனைத்தும் வெறும் கன்டென்ட்தான் என்று கூறிவந்ததுடன், கார்த்தியை கெட்ட வார்த்தைகளில் திட்டி இனிமேல் நீ தேவையில்லை என்று கூறியும் வீடியோ பதிவிட்டார். இந்நிலையில்தான் திடீரென, திவ்யா தேடிக்கொண்டிருக்கும் கார்த்தி நான்தான் என ஒரு நபர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேட்டியும் கொடுத்தார். ஒரு கட்டத்தில் கார்த்தியை மன்னித்து ஏற்றுக்கொண்டதாக கூறிய திவ்யா, அவருடன் சேர்ந்து பல மோசமான வீடியோக்களை பதிவிட்டு வந்ததுடன், ஒருசில மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வீடியோ வெளியிட்டனர். இனிமேலாவது ஒழுக்கமாக இருப்பார் என்று எதிர்பார்த்த நெட்டிசன்களுக்கு மேலும் எரிச்சலூட்டும்விதமாக அந்த திருமணமும் ஒரு கன்டென்ட்தான் என்று கூறி நாடகம் போட்டதுடன், இப்படியெல்லாம் வீடியோக்கள் போடுவதன்மூலம் தான் நிறைய சம்பாதிப்பதாகவும் வெளிப்படையாகவே திவ்யா கூற, பலரின் கோபத்துக்கும் ஆளானார். ஆனால் இவர்கள் குறித்து பதிவிடப்படும் கமெண்டுகளையெல்லாம் கண்டுகொள்ளாத திவ்யா - கார்த்தி தொடர்ந்து அதேபோன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில்தான் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக திவ்யா கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
சிறார் பாலியல் சீண்டல் வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி - திவ்யா - சித்ரா மற்றும் ஆனந்த்
கைதின் பின்னணி!
சமூக ஊடகங்களின் முக்கிய பயன்பாடே பரிச்சயமில்லாத நபர்களின் அறிமுகங்களையும் எளிதில் பெற்றுவிடலாம் என்பதுதான். அப்படி ஃபுட் வ்ளாகர்ஸ், பியூட்டீஷியன்ஸ், ரிவ்யூவர்ஸ் என பிரபலமாக இருப்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய துறைகளில் இருப்பவர்களிடம் நல்ல நட்புறவை வளர்த்துகொள்வதுண்டு. அதற்காகவே, பல மீட்-அப் நிகழ்ச்சிகளையும் அவர்களே நடத்துகின்றனர். அப்படி திவ்யா கள்ளச்சிக்கு அறிமுகமானவர்தான் சென்னையைச் சேர்ந்த சித்ரா என்னும் பெண். இவர்களுக்குள் இருந்த நட்புறவு குறித்து வெளியே தெரியாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரா, டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், திவ்யா கள்ளச்சி சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி அதை வீடியோ எடுத்து, ஆபாச இணையதளங்களுக்கு விற்றுவருவதாகவும் கூறினார். மேலும் திவ்யா, தனது வங்கிக்கணக்கை ஹேக் செய்து தன்னிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாயை அபகரித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து விசாரிக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசாருக்கு பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. அதன்படி, திவ்யாவும், கார்த்தியும் வீடியோ எடுப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற நிலையில், கார்த்தியை தொடர்புகொண்ட சித்ரா, திவ்யா குழந்தைகளிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்களை எடுத்து தரும்படி கூறியதாகவும், அதற்கு லட்சங்களில் பணம் தருவதாகவும் சொல்லியதாக தெரிகிறது. லட்சத்துக்கு ஆசைப்பட்ட கார்த்தி அந்த பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை வரவழைத்து, அவர்மூலம் இரண்டு சிறுவர்களிடம் திவ்யா நெருக்கமாக இருக்கும்படி வீடியோ பதிவுசெய்து சித்ராவுக்கு அனுப்பியிருக்கிறான். ஆனால் பணம் தருவதாகக் கூறிய சித்ராவோ, அந்த வீடியோவையே வைத்து திவ்யாவை தனக்கு பணம் தரும்படி மிரட்டியுள்ளார். ஆனால் திவ்யா பணம் கொடுக்க மறுக்கவே, அந்த வீடியோக்களை சித்ராவே வெளியிட்டுவிட்டு, திவ்யா அப்படி செய்ததாக நாடகமாடி டிஜிபி அலுவலகத்திற்கே சென்று புகார் கொடுத்த சம்பவம் போலீசாருக்கே அதிர்ச்சியளித்துள்ளது. போலீசாரையே ஏமாற்ற நினைத்த சித்ராவையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்த்து, திவ்யா, கார்த்தி, ஆனந்த் மற்றும் சித்ரா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும் இவர்கள்மீது போக்சோ உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரவுடி பேபி சூர்யா - சித்ரா - திருச்சி சாதனா
யார் இந்த சித்ரா?
சித்ரா குறித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தன்னை வளர்ந்துவரும் சமூக ஆர்வலர் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் சித்ரா, 7 வருடங்களுக்கு முன்பே சேலத்தில் திருமண மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தவர். மாடலான தனது மகளை திருமணம் செய்துதருவதாகக் கூறி ஐடி துறையில் பணிபுரியும் 10 பேரை ஏமாற்றி 2 கோடிரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்தவர் இந்த சித்ரா என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும் இவர் வாடகைத்தாயாக இருந்துவந்ததும் தெரியவந்திருக்கிறது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு இந்த விவகாரம் குறித்து தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் தரப்பிலிருந்தும் இந்த சம்பவம் குறித்து தீர விசாரித்து பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மனநலனை கருத்தில்கொண்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திவ்யாவைப் போன்று ரவுடிபேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றோரும் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதாகவும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், யூடியூபை வைத்துக்கொண்டு, அதன் பின்னணியில் ஒரு பெரிய கும்பலே இதுபோன்ற மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் பல தரப்புகளிலும் புகார்கள் எழுந்துவரும் நிலையில், இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுவோர் குறித்து தீர விசாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆபாசா வீடியோ விவகாரத்தில் சிக்கியிருக்கும் திவ்யா, 4 யூடியூப் சேனல்கள் வைத்திருப்பதாகவும், அதில் இரண்டு சேனல்களின் மூலமே மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும்மேல் வருமானம் கிடைப்பதாகவும் அவரே சொல்லியிருக்கிறார். அதுபோக, மற்ற யூடியூப் சேனல்களுக்கு கன்டென்ட் வீடியோக்களில் நடித்துகொடுப்பதன்மூலமும் ஒரு லட்சத்துக்கும் மேல் மாத வருமானம் வருகிறதாம்.