இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சென்னை கிண்டியிலுள்ள அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் ஒருவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயாரின் உடல்நல பிரச்சினைக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் அவருக்கு மேலும் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அவர் படும் வேதனையை தன்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்றும் அந்த இளைஞர் ஒருபுறம் கூறினாலும், கத்திக்குத்தால் படுகாயமடைந்த மருத்துவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதுள்ள மருத்துவர்கள் போராட்டம் அறிவித்த நிலையில் மருத்துவத்துறை அமைச்சர், அவர்களை நேரில் சந்தித்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். மேலும் பணியிலிருக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கிண்டியில் நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கத்திக்குத்தின் பின்னணி விவரம்

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் வரை, சென்னை கிண்டியிலிருக்கும் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையின் தலைமை புற்றுநோய் நிபுணர் பாலாஜி சிகிச்சையளித்திருக்கிறார். ஆனால் 5 மாதங்கள் சிகிச்சை பெற்றும் பிரேமாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சவிதா மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். அங்கும் 3 மாதங்கள் சிகிச்சை பெற்று எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அடுத்து அடையாறை சேர்ந்த ஜாக்லின் மோசஸ் என்ற மருத்துவரிடம் சென்றிருக்கின்றனர். ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாகத்தான் பிரேமாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்மீது வழக்குத் தொடரலாம் என்றும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேமாவின் மகன் விக்னேஷ் என்கிற விக்னேஸ்வரன் (23), தனது தாயாருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, நவம்பர் 13ஆம் தேதி காலை வெளிநோயாளி பிரிவில் மருத்துவரை சந்திக்க தன்னுடன் 4 பேரை அழைத்துக்கொண்டு விக்னேஷ் சென்றதாக தெரிகிறது. ஆனால் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் தனது தாயாருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் பாலாஜி இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரிடம் அரைமணிநேரம் பேசியிருக்கிறார். ஆனால் மருத்துவர் பாலாஜி மரியாதையாக பேசவில்லை என்று தெரிகிறது.


கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி மற்றும் அவரை கத்தியால் குத்திய இளைஞர்

இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் வீட்டிலிருந்து எடுத்துச்சென்றிருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் மருத்துவர் பாலாஜியின் இடதுபக்க கழுத்தில் இருமுறை குத்தியுள்ளார். இதனை பார்த்த செவிலியர்களும், பொதுமக்களும், மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியடைந்ததுடன், ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுசென்றனர். அந்த சமயத்தில் எதுவும் நடக்காததை போன்று, விக்னேஷ் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். அவரை பின்தொடர்ந்துவந்த சில ஊழியர்கள், உடனடியாக விக்னேஷை பிடித்து அடித்து தாக்கி தப்பி செல்லாமல் பிடித்துவைத்தனர். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து உடனடியாக அங்கு விரைந்துவந்த போலீசாரிடம் விக்னேஷை ஒப்படைத்தனர்.

விக்னேஷ் மற்றும் அவரது தாயார் வாக்குமூலம்

பட்டபகலில் இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷை உடனடியாக கைதுசெய்த போலீசார், அவருடன் வந்த மற்றொருவரையும் கைது செய்திருக்கின்றனர். தப்பியோடிய மற்ற இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், உடனடியாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக 30க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே விக்னேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்திருக்கிறார். அதில், “என் அம்மா வலியால் துடித்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கீமோ சிகிச்சையை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால்தான் என் அம்மாவிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக வேறொரு மருத்துவர் கூறினார். அதனால் அம்மாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டுதான் வீட்டிலிருந்தே காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துவந்தேன். அம்மாவிற்கு ஏன் தவறான சிகிச்சையளித்தீர்கள் என மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் அவர் சரியாக பதிலளிக்காததால் நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினேன்” என்று கூறியிருக்கிறார்.


போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட விக்னேஷ் மற்றும் அவரது தாயாரின் வாக்குமூலம்

இதுகுறித்து விக்னேஷின் தாயார் பிரேமாவை பத்திரிகையாளர்கள் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, “போன வருடம் நவம்பர் மாதம் எனக்கு காய்ச்சல் வந்தது. அப்போது எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தபோது, எனக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. அங்கு 3 லட்சம் செலவாகும் என்று கூறிவிட்டதால், அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். ஆனால் அங்கும் 95 ஆயிரம் செலவானதால் அங்கும் சிகிச்சை எடுக்கமுடியாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன்பிறகு தெரிந்த நர்ஸ் சொன்னதால் கிண்டி மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு டாக்டர் பாலாஜி எனக்கு சிகிச்சையளித்தார். முதலில் எனக்கு இரண்டாவது ஸ்டேஜ் என்று சொல்லிவிட்டு, பிறகு ஐந்தாவது ஸ்டேஜ் என்று சொன்னார். அங்கு வெறும் 5 நாட்கள்தான் கீமோ சிகிச்சையெடுத்தேன். அந்த ஊசி போடும்போது உடம்பில் இருக்கும் பிரச்சினை குறித்து சொன்னால் டாக்டர் பாலாஜி அசிங்கமாக திட்டுவார். தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை அங்கேயே உட்கார வைத்தார்கள். மொத்தம் 18 நாட்கள் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். அதன்பிறகு வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன்பிறகு விருகம்பாகத்தில் 2 மாதங்கள் சிகிச்சை எடுத்தேன். அங்கிருந்து சவிதா மருத்துவமனைக்கு போக சொல்லிவிட்டார்கள். அங்கும் சிகிச்சை பலனளிக்காததால் வீட்டிற்கே வந்துவிட்டேன். டாக்டர் பாலாஜி எனக்கு கீமோ சிகிச்சை அளிக்கிற வரைக்கும் நான் ஓரளவு நன்றாயிருந்தேன். என் உடலில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று தெரியாமலேயே 5 கீமோ ஊசிவரை போட்டதால் என்னுடைய நுரையீரல் பழுதாகிவிட்டது.

சிடி ஸ்கேன் எடுக்க வடபழனிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது என்னுடைய மொபைலை பார்க்கச் சொன்னார்கள். அப்போதுதான் எனது மகன் இப்படி செய்தது எனக்கு தெரியவந்தது. என் மகனுக்கு என்மேல் ரொம்ப பாசம். அவனும் ஹார்ட் பேஷண்ட், ஃபிட்ஸ் பிரச்சினையும் இருக்கு. கடந்த 10 நாட்களாக நான் நரக வேதனைப்படுவதை அவன் பார்த்துவிட்டு, ‘இந்த டாக்டராலதான அம்மா உனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு?’ கேட்டான். 25 வருடம் சர்வீஸ்ல இருக்குறதா அந்த டாக்டர் சொல்லிட்டு, என்னுடைய நுரையீரலை இப்படி பண்ணலாமா? எனக்கு ஸ்கேன் எடுக்க எழுதி கொடுத்தார். நான் ஸ்கேன் எடுத்துவிட்டு, ரிப்போர்ட்டை கொண்டுவந்து கொடுத்தேன். அதை பார்க்கவேண்டுமா இல்லையா? என் ரிப்போர்ட் ஃபைலை பார்க்காமலேயே கீமோ போட எழுதி கொடுத்தார். அதை பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் உடனே ப்ளட் டெஸ்ட் எடுக்க சொல்லிவிடுவார். பாலாஜி டாக்டர் பற்றி மற்ற டாக்டர்களிடம் கேட்டால் அவர்களே பயப்படுவார்கள். அவரிடம் நாம் ஏதாவது கேள்வி கேட்டாலே, ‘நான் டாக்டரா? இல்ல நீ டாக்டரா? எல்லாத்தையும் எடுத்துட்டு போ’ என்று திட்டுவார். அரசு மருத்துவமனைக்கு போய் என்னை இப்படி ஆக்கிவிட்டார்கள். இப்போது கடன் வாங்கி செலவு செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய மகன் இப்படி செய்ததும் வீட்டிற்கு வந்த மூன்று பேர் என்னுடைய ரிப்போர்ட் ஃபைல் அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அதற்காக என் மகன் செய்தது சரி என்று சொல்லவில்லை” என்று பத்திரிகையாளர்களிடம் கண்ணீர்மல்க பேட்டியளித்திருக்கிறார் பிரேமா.


மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து முதலமைச்சர் பதிவு

மருத்துவருக்கு கத்திக்குத்து - முதலமைச்சர் பதிவு

அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளை நாடிவரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் நலமாக உள்ளார் எனவும், நன்றாக பேசுவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருக்கு பொருத்தப்பட்டிருக்கும் பேஸ் மேக்கர் கருவியின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்து, அதன் செயல்பாட்டை உறுதி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் அவருக்கு கடுங்காவல் தண்டனை அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவருக்கு நேர்ந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதுமுள்ள மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த நிலையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். மேலும் முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் நபர்களுக்கு வெவ்வேறு வண்ணங்களில் டேக் அணிவிக்க முன்னேற்பாடுகள் நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.

Updated On 25 Nov 2024 9:25 PM IST
ராணி

ராணி

Next Story