
தகாத உறவுகள், குடும்ப பிரச்சினைகள், குடும்ப வன்முறைகள் போன்ற பல காரணங்களால் கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கொலைசெய்யும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக, திருமணத்தை மீறிய உறவிலிருக்கும் கணவன்மார்களை மனைவிகளே சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை, தலையில் கல்லை போட்டு கொலை போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துவருகின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் பெங்களூருவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதிக வயது வித்தியாசம் இருந்தாலும் தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர் வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்துகொண்டே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாத பெண் ஒருவர் அவரை திட்டமிட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆள் நடமாட்டமற்ற பகுதியில் காருக்குள் யாரோ கொலைசெய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை தொடங்கினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கொலையின் பின்னணி!
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டியின் புறநகர் பகுதிகளில் ஒன்று சிக்கபனாவரா. கடந்த மார்ச் 25ஆம் தேதி இந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு காரில் ஆணின் சடலம் கொலைசெய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் காரிலிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துகிடந்த நபர் யார் என்று விசாரித்ததில் அவர் பெயர் லோக்நாத் சிங் என்பதும், அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து லோக்நாத்தின் மனைவி யஷ்வினிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சந்தேகத்திற்கிடமாக பதிலளிக்கவே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. லோக்நாத் சிங்கை கொலைசெய்த குற்றத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் யஷ்வினியும் அவரது தாயார் ஹேமாவும் சேர்ந்துதான் லோக்நாத்தின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலைசெய்திருக்கின்றனர் என்பது தெரியவந்தது. லோக்நாத் சிங்கை யஷ்வினி காதலித்து திருமணம் செய்துள்ளார். இருப்பினும் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவந்த லோக்நாத்திற்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. இதுகுறித்து யஷ்வினிக்கு தெரியவரவே, இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு விவாகரத்து கேட்டிருக்கிறார் யஷ்வினி. இதுபோக, லோக்நாத் சட்டவிரோத தொழிலிலும் ஈடுபட்டுவந்தது அவருக்கு தெரியவரவே, கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது தன்னை பார்க்க வருவதாக கணவன் சொல்ல, தனது அம்மாவுடன் சேர்ந்து அவரை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார். தான் திட்டமிட்டபடியே கொலையையும் அரங்கேற்றியுள்ளார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த லோக்நாத்தை கொலைசெய்த மாமியார் ஹேமா மற்றும் மனைவி யஷ்வினி
கொலை குறித்து போலீசாரின் விளக்கம்
பெங்களூருவில் அரங்கேறிய இந்த கொலை சம்பவத்தை விசாரித்த போலீஸ் துணை கமிஷ்னர் சைதுல், பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து பேசினார். அவர் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட லோக்நாத்தும் யஷ்வினியும் 2 ஆண்டுகள் காதலித்துள்ளனர். இந்த காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் யஷ்வினியின் வீட்டுக்கு தெரியவந்திருக்கிறது. லோக்நாத்துக்கு யஷ்வினியைவிட வயது மிக அதிகம் என்பதால் அவர்களுடைய வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் குடும்பத்தையும் எதிர்த்து லோக்நாத்தை ரகசியமாக பதிவு திருமணம் செய்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொண்டதை வீட்டில் சொல்லாமல் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்திருக்கிறார் யஷ்வினி. ஒரு கட்டத்தில் இந்த திருமணம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. அதேநேரத்தில் லோக்நாத்திற்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது யஷ்வினிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த அவர், இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து சண்டை போட்டுவந்துள்ளார். ஆனால் லோக்நாத் அதையெல்லாம் விட்டதாக தெரியவில்லை. மேலும் ரியல் எஸ்டேட் தொழில் தவிர சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்திருக்கிறது. ஒருகட்டத்தில் வெறுத்துப்போன யஷ்வினி தனக்கு விவாகரத்து வேண்டுமென கேட்டிருக்கிறார். கோபித்துக்கொண்டு தனது அம்மாவின் வீட்டிற்கும் போய்விட்டார். அங்கும் யஷ்வினியை நிம்மதியாக இருக்கவிடாமல் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இப்படி கடந்த 25ஆம் தேதி போன்செய்த லோக்நாத், யஷ்வினியை பார்க்க வருவதாக சொல்லியிருக்கிறார். தனது சகோதரியிடமும் மனைவியை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு காரில் வந்துள்ளார். வரும்போதே நிறைய பீர் பாட்டில்களை வாங்கிவந்துள்ளார். ஆனால் லோக்நாத் வருவதாக போன் செய்ததுமே அவரை கொல்ல யஸ்வினியும் அவரது தாயார் ஹேமாவும் சேர்ந்து திட்டமிட்டிருக்கின்றனர். எப்போதும் காரில் செல்லும்போது மது அருந்தும் பழக்கம் லோக்நாத்திற்கு இருந்ததால் அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டார் யஷ்வினி.
பெங்களூரு புறநகர் பகுதியில் காருக்குள் கிடந்த ஆணின் சடலம்
தாங்கள் திட்டமிட்டபடியே லோக்நாத்திற்காக தயாரித்த உணவில் அதிகளவு தூக்க மாத்திரைகளை கலந்து வைத்துள்ளனர். யஷ்வினியின் வீட்டிற்கு வந்த லோக்நாத் அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளார். சாப்பிட்டுவிட்டு போகச்சொல்லி ஹேமா சொன்னதால் செல்லும் வழியில் சாப்பிட்டுக்கொள்வதாகக்கூறி கையோடு சமைத்த உணவை எடுத்துச் சென்றுள்ளனர். காரில் சென்றுகொண்டிருந்த லோக்நாத் வழியிலேயே அதிகளவில் மது அருந்தியபடி சென்றிருக்கிறார். அதிகப்படியாக குடித்துவிட்டது தெரிந்த யஷ்வினி, தான் கொண்டுசென்ற தூக்கமாத்திரை கலந்த சாப்பாட்டை சாப்பிட கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்ட லோக்நாத்திற்கு சற்றுநேரத்தில் நல்ல தூக்கம் வந்திருக்கிறது. அவர் நன்கு தூங்கியதை பார்த்த யஷ்வினி தனது அம்மாவிற்கு போன் செய்து, தாங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு வரச்சொல்லியிருக்கிறார். சிக்கபனாவரா பகுதியில் கார் நின்றிருந்த இடத்திற்குச் சென்ற ஹேமா, கையில் கத்தியையும் கொண்டுசென்றிருக்கிறார். போதை மற்றும் தூக்க கலக்கத்தில் இருந்த லோக்நாத்தை ஹேமா கத்தியால் குத்தியுள்ளார். சூழ்நிலையை புரிந்துகொண்ட அவர், உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு ஓடியிருக்கிறார். இருந்தாலும் காரிலேயே விடாமல் துரத்திய யஷ்வினி மற்றும் ஹேமா, அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்துள்ளனர். லோக்நாத்தின் கழுத்தில் கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்துள்ளார். அவரை காருக்குள் போட்டு கதவை அடைத்துவிட்டு, அம்மாவும், மகளும் ஆட்டோ ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளனர். நீண்ட நேரம் அங்கு கார் நிற்பதை பார்த்த பொதுமக்கள் காரை திறந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்” என்று கூறியுள்ளார்.
லோக்நாத் சிங் குறித்து அதிர்ச்சி தகவல்களை வாக்குமூலமாக கொடுத்த மனைவி யஷ்வினி
பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்த யஷ்வினி
தொடர்ந்து அவர் பேசுகையில், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட யஷ்வினி மற்றும் ஹேமா இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் யஷ்வினி மேலும் பல அதிர்ச்சி தகவல்களை கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. லோக்நாத்தை காதலித்துவந்த சமயத்திலேயே யஷ்வினிக்கு அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் திருமணம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் 20203ஆம் ஆண்டிலிருந்தே யஷ்வினியையும் அவருடைய குடும்பத்தையும் மிரட்டிவந்த லோக்நாத்துக்கு பயந்துதான் அவரை திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் இருவரும் மகிழ்ச்சியாக வாழவில்லை என்று தெரிகிறது. தாம்பத்திய உறவுக்கு மறுத்த யஷ்வினியை அடித்து கொடுமைப்படுத்தியதுடன், கட்டாயமாக அவரை ஈடுபட வைத்துள்ளார். மேலும் தன்னுடன் வாழாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டி வந்துள்ளார். இதில் மனமுடைந்த யஷ்வினி என்ன செய்வதென்று தெரியாமல் லோக்நாத்தின் தொல்லையிலிருந்து நிரந்தரமாக தப்பிக்க அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து தனது அம்மாவிடமும் தெரிவிக்க, ஹேமாவும் தனது மகளுக்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறார். இப்படி இருவரும் திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர். தற்போது கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட ஹேமாவும், யஷ்வினியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
