இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உடலில் பச்சைக்குத்தி கொள்ளும் வழக்கம் காலங்காலமாக இருந்துவந்தாலும் கடந்த சில ஆண்டுகளில் டாட்டூ மோகம் மிகவும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, உடல் முழுவதும் டாட்டூ போட்டுக்கொள்வது, அதில் கலரடிப்பது மற்றும் முகத்தில் ஆங்காங்கே துளையிட்டு வளையங்களை மாட்டிக்கொள்வதை பலர் விரும்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம் என்ற பெயரில் இயற்கைக்கு மாறாக உடலில் மாற்றங்களை செய்து அதை சமூக ஊடகங்கள்மூலம் ட்ரெண்டாக்கி வந்தனர். இதைப் பார்த்து ஈர்க்கப்பட்ட பல ஜென் - Z கிட்ஸ் தங்களுடைய உடலையும் ஃபேஷன் என்ற பெயரில் வருத்திக்கொள்வதை அதிகமாக விரும்புகின்றனர். இந்த கலாச்சாரத்தை வணிகமாக்கி, பல டாட்டூ கடைகள் ஆங்காங்கே இயங்கிவருகின்றன. பிறரிடமிருந்து வித்தியாசமாக தெரிய விரும்பும் பலர் இதுபோன்ற டாட்டூக்களை விரும்பி போட்டுக்கொள்கின்றனர். அப்படி திருச்சியில் ட்ரெண்ட் என்ற பெயரில் நாக்கை பாம்பு நாக்கு போல இரண்டாக பிளப்பது, அதில் நிறமூட்டுவது, கண்களுக்குள் நிறமூட்டி செலுத்துவது என பலரையும் ஈர்த்துவந்த ஹரிஹரன் என்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பல்வேறு நாடுகளில் டாட்டூ போடுவதற்கும், உடலை மாற்றிக்கொள்வதற்கும் தடையில்லை என்றாலும் இந்தியாவைப் பொருத்தவரை டாட்டூ போடுவதில் பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. திருச்சியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டது எதனால்? டாட்டூ மோகத்தால் இளைஞர்கள் சீரழிகிறார்களா? இதுகுறித்து நமது சட்டம் என்ன சொல்கிறது? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக பார்க்கலாம்.

நாக்கை துண்டித்து சிக்கிய இளைஞர்

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு பழைய கட்டிடத்தில் இயங்கி வந்துள்ளது ‘ஏலியன் இமோ டாட்டூ’ என்ற கடை. இதனை வெனிஸ் தெருவைச் சேர்ந்த 25 வயது இளைஞரான ஹரிஹரன் நடத்திவந்துள்ளார். தனக்கு துணையாக 24 வயதான ஜெயராமன் என்ற தனது நண்பரையும் கூடவே வைத்திருந்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மும்பைக்குச் சென்று அங்கு தனது நாக்கை இரண்டாக பிளவுபடுத்தி வந்த ஹரிஹரன், அங்கு ஓரிரு மாதங்கள் வேலைசெய்து இந்த சிகிச்சையை கற்றுக்கொண்டதாக தெரிகிறது. பின்பு திருச்சிக்குத் திரும்பிய இவர், டாட்டூ போடுவதையே தனது தொழிலாக மாற்றியுள்ளார். திருச்சி சத்திரம் பகுதியில் இவர் நடத்திவந்த டாட்டூ கடையில் சாதாரண டாட்டூக்கள் மட்டுமின்றி, நாக்கை இரண்டாக பிளவுபடுத்துவது, கண்களுக்கு நிறமூட்டுவது, அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ போடுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன் அவற்றை வீடியோ எடுத்து தனது சமூக ஊடக பக்கத்திலும் பதிவிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வந்துள்ளார்.


கைது செய்யப்பட்ட திருச்சி டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஹரிஹரன்

இன்ஸ்டாகிராமில் தற்போது இவரை 1.49 லட்சம்பேர் ஃபாலோ செய்துவரும் நிலையில், சாதாரண டாட்டூ போட 1000 முதல் 3000 வரையிலும், அந்தரங்க உறுப்புகளிலும், இறக்குமதி செய்யப்பட்ட ஊசிகளில் டாட்டூ போடவும், கலர் டாட்டூ போடவும் 3000 முதல் 10,000 வரையிலும், நாக்கை பிளவுபடுத்த 50,000 வரையிலும், சாதாரணமாகவோ அல்லது பிளவுபடுத்திய நாக்கில் டாட்டூ போட 30,000 முதல் 50,000 வரையிலும் கட்டணமாக வசூலித்து வந்ததுடன், அவற்றை வீடியோ எடுத்து தனது சமூக ஊடக பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக, உரிய அனுமதியின்றி நாக்கை பிளவுபடுத்தி தையல் போடும் வீடியோக்களை பகிரங்கமாக அப்படியே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பலரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 17 வயது சிறுவனுக்கு நாக்கை பிளவுபடுத்தி வீடியோ பதிவிட்டதையடுத்து, ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ஜெயராமன் ஆகியோரை டிசம்பர் 15ஆம் தேதி போலீசார் கைதுசெய்தனர். இந்த வீடியோக்களை பார்த்த ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இருவர்மீதும் இந்திய சட்டப்பிரிவுகள் 118 (1), 123, 125, 212, 223BNS, 75 மற்றும் 77 ஆகிய 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஹரிஹரன் நடத்திவந்த ஏலியன் இமோ டாட்டூ கடையிலிருந்து நாக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், கத்திகள், மயக்க மருந்து உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியதுடன், மாநகராட்சியின் உரிமமின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கடைக்கும் சீல் வைத்தனர்.

ஹரிஹரனின் பகீர் வாக்குமூலம்!

தனது வீடியோக்களில் ‘ஹாய் ஏலியன்ஸ்’ என்று பேசத் தொடங்கும் ஹரிஹரன், தன்னை ஏலியனாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். உலகளவில் பிரபலமான ‘ப்ளாக் ஏலியன்’ என்று அழைக்கப்படுகிற ஃபிரான்ஸை சேர்ந்த ஆண்டனி லோஃப்ரெடோ என்பவரால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஹரிஹரன், தானும் அதுபோல் மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக முதலில் மும்பைக்குச் சென்று 2 லட்சம் ரூபாய் செலவழித்து தனது நாக்கை பிளவுபடுத்தி இருக்கிறார். அதன்பிறகு டாட்டூ கடை தொடங்கியிருந்தாலும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக ஏலியனாக்க நினைத்து, நாக்குக்கு நிறமூட்டுவது, கண்களுக்குள் நீல நிறமூட்டுவது, சில்வர் பல் பொருத்துவது, முடியின் நிறத்தை மாற்றுவது உட்பட உடலில் பல்வேறு டாட்டூக்களையும், துளைகளையும் போட்டு வந்துள்ளார். மேலும் தன்னையே ஒரு மாடலாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு பாம்பு, ஓணான்களுக்கு இருப்பது போன்று நாக்கை மாற்றலாம் எனக் கூறி மற்ற இளைஞர்களையும் ஈர்த்து வந்துள்ளார். குறிப்பாக, ஹரிஹரனின் இந்த செயல் ஜென் - Z கிட்ஸ்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக மாறியிருக்கிறது.


நாக்கை இரண்டாக பிளவுபடுத்தி அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்வு

அதனைத் தொடர்ந்து பல இளைஞர்கள் ஹரிஹரனிடம் சென்று நாக்கை பிளவுபடுத்தியுள்ளனர். ட்ரெண்டிங் மற்றும் ஃபேஷன் என கூறி தன்னிடம் வர கஸ்டமர்களை ஈர்த்ததுடன், இதை வீடியோவாக எடுத்து தங்களுடைய சமூக ஊடங்களிலும் பதிவிட்டு, தன்னை பிரபலமாக்கினால், தான் புதிதாக தொடங்கும் கிளைகளில் அவர்களையே வேலைக்கு அமர்த்துவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இதுபோன்ற செயல்களுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், ஹரிஹரன் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதி பெற்ற மருத்துவர்கள் மட்டுமே செய்யக்கூடிய நாக்கை பிளவுபடுத்தும் வேலையை செய்யும் அளவிற்கு ஹரிஹரனுக்கு மருத்துவ கருவிகள் மற்றும் மயக்க மருந்துகள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கேள்வியெழுப்பிய நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகுதான் இந்த வழக்கில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவரும்.

டாட்டூ குறித்து சட்டம் சொல்வது என்ன?

பச்சை குத்துதல் அல்லது டாட்டூ போடுவது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் ஒன்று. முன்பெல்லாம் பச்சை நிறத்தில் மட்டுமே குத்தியதால் அதை பச்சை குத்துதல் என்றே அழைத்தனர். பின்பு கருப்பு நிறத்தை பயன்படுத்தி வித்தியாசமான வடிவங்களை உடலின் பல்வேறு பகுதிகளில் வரைந்தனர். பிறகு கலாச்சாரம் மாற மாற, தற்காலிக மற்றும் நிரந்தர டாட்டூக்களை பல வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்தியாவை பொருத்தவரை டாட்டூ அல்லது பச்சை குத்துதல் என்பது கலைப்படைப்பின் ஒரு வடிவமாக பார்க்கப்படுகிறது. இது 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய சட்டப்பிரிவு 2(சி) இன் கீழ் வருகிறது. ஒரு டாட்டூவை வரையும்போது அதற்கான பதிப்புரிமை டாட்டூ கலைஞருக்கு சொந்தமா அல்லது போட்டுக்கொண்ட நபருக்கு சொந்தமா என்பதுகூட இந்த சட்டத்தின்கீழ் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இது பிரிவு 17-இன் கீழ் வருகிறது. மேலும் டாட்டூ கலையை ஒரு தொழிலாக கையிலெடுப்பதற்கு முறைப்படி பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் இச்சட்டத்தின்கீழ் சொல்லப்பட்டிருக்கிறது.


டாட்டூ பிரியருடன் ஹரிஹரனின் இன்ஸ்டாகிராம் பதிவுகள்

டாட்டூ குத்த பயன்படுத்தப்படும் இங்க், ஊசிகள் போன்றவற்றால் பல்வேறு தொற்றுகள் பரவ வாய்ப்பிருக்கிறது. மேலும் கண்கள் போன்ற சென்சிட்டிவான பகுதிகளுக்குள் நிறமூட்டுவது மிகவும் ஆபத்தானதும் கூட. உடலின் எந்தெந்த பகுதிகளில் டாட்டூ போடுவது பாதுகாப்பானது என்பதைக்கூட நிபுணர்கள் பலர் விளக்கியிருக்கின்றனர். அதன்படி முக்கிய நரம்புகள் செல்லுமிடங்களில் டாட்டூ குத்தக்கூடாது. இதனால் அலர்ஜி, உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவில் டாட்டூ குத்திக்கொள்ள சில வரையறைகளின்கீழ் அனுமதி இருந்தாலும், நாக்கை இரண்டாக பிளவுபடுத்த இந்திய மருத்துவ கொள்கைப்படி அனுமதி இல்லை. நாக்கை துண்டிக்கவோ, இரண்டாக பிளக்கவோ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதை முறைப்படி பயிற்சிபெற்ற மருத்துவர்கள்தான் செய்யவேண்டுமே தவிர, எல்லாரும் செய்யக்கூடாது. அப்படி வெட்டும்போது ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டால் செல்கள் இறந்து நாக்கு செயலிழக்கக்கூடும். ஒருவேளை பிளவுபடுத்திய நாக்கை மீண்டும் இணைக்கவேண்டுமென்று நினைத்தாலும் அது மிகவும் கடினம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில் உரிய பயிற்சி மற்றும் உரிமமின்றி மருத்துவர் போல் செயல்பட்டு நாக்கை பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட ஹரிஹரன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின்கீழ் உரிய தண்டனை கிடைக்கும்பட்சத்தில் குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Updated On 24 Dec 2024 9:46 AM IST
ராணி

ராணி

Next Story