கொலை, கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் தஞ்சாவூரில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை மர்ம நபர் ஒருவர் வகுப்பறைக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் ஒருதலை காதல் என்று கூறப்பட்ட நிலையில், பிறகு இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால் பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த பெண் காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த காதலன் அவரை குத்தி கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில் இறந்த ஆசிரியையின் உடலுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், தாக்குதலை நடத்தியவர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். தஞ்சாவூர் ஆசிரியைக்கு நடந்தது என்ன? சம்பவத்தின் முழு விவரத்தையும் பார்க்கலாம்.
ஆசிரியர் கொலை - முழு விவரம்
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் 26 வயதான ரமணி என்ற பெண். 20ஆம் தேதி காலை எப்போதும்போல பள்ளிக்குச் சென்ற இவரை மர்ம நபர் ஒருவர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து கத்தியால் குத்தியுள்ளார். ரமணி அங்கேயே சரிந்துவிழ, அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கத்தி கூச்சலிட்டதுடன் ரமணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ரமணியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபரின் பெயர் மதன் (30) என்றும், அவர் ரமணியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ரமணி மற்றும் மதன் இருவருமே கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த நிலையில், தீபாவளி சமயத்தில், ரமணியை தனது குடும்பத்தாருடன் சென்று பெண் கேட்டுள்ளார் மதன். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதிலும் ரமணியின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலிக்க முடியாது என ரமணி கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன் அவரை திருமணத்திற்கு சமாதானப்படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் 20ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற ரமணியை நேரில் சந்தித்து பேசுவதற்காக சென்ற மதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமணியின் கழுத்திலும் வயிற்றிலும் குத்தியதாக தெரிகிறது. ரமணி ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழ, அங்கிருந்து தப்பியோட முயன்ற மதனை பிடித்து சேதுவாசத்திரம் காவல்துறையினரிடம் ஆசிரியர்கள் ஒப்படைத்தனர்.
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை குத்தி கொலை செய்த மதன்
பள்ளியில் நடந்த இச்சம்பத்தின் முழு விவரத்தையும் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையில், கடந்த 10.06.2024 முதல் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக தமிழ் ஆசிரியராக செல்வி ரமணி 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை பாடம் எடுத்து வந்ததாகவும், சம்பவம் நடந்த 20ஆம் தேதியன்று ரமணிக்கு முதல் பாட வேளை இல்லை என்பதால் காலை 10.10 மணியளவில் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறை வராண்டாவில் நின்று சின்னமனை மதன் என்பவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, எதிர்பாராதவிதமாக ஆசிரியை ரமணியின் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கத்தியால் குத்திவிட்டு ஓடிய மதனை ஆசிரியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்றும், ஆசிரியை ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது உயிரிழந்துவிட்டதாகவும், இதுகுறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டு விசாரணை நடந்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழும் கண்டனங்கள்!
ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவேண்டுமெனவும், இறந்த ஆசிரியையின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் தற்காலிக ஆசிரியர்களின் நிலை குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கியுள்ளார். அதில், அரசு ஆசிரியர்களுக்கு கிடைக்கிற மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி மற்றும் குடும்ப நல நிதி போன்ற எதுவும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், இதனால் தொகுப்பூதியம் பெறும் தற்காலிக ஆசிரியர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குள்ளாக இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே இதுபோன்ற அசம்பாவித சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ்நாடு அரசு உடனே பணி பாதுகாப்பு வழங்கவேண்டுமெனவும் அதில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியை ரமணி கொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
இதுதவிர, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. சமீப காலமாக பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், மருத்துவர்களைப் போல ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு முன்பு இந்த கொடூரத்தை அரங்கேற்றிய நபருக்கு மிக கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. உயர் நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமும், கொலைசெய்த நபருக்கு தூக்குதண்டனை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், ரமணியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையிலும், மாநிலம் முழுவதுமுள்ள ஆசிரியர்கள் மத்தியில் இச்சம்வம் கடும் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவரவேண்டுமென ஆசிரியர்கள் சார்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரிய நிகழ்வு என்றும், இனிமேலும் ஆசிரியர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் கடுமையான போராட்டங்களில் ஈடுபடவேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றும், திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவலநிலை வரும் அளவிற்கு நிர்வாக திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கை காக்க தவறியுள்ளது என்றும், இந்த கொலைவழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கடுமையாக சாடியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் தமாகா கட்சி தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அஞ்சலி
கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்கில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன் மற்றும் எம்.எல்.ஏக்கள் அசோக்குமார், அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார். ஆசிரியையின் சொந்த பிரச்சினையாக இருந்தாலும் பள்ளிக்குள் இப்படி நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்று காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் இவருக்கு கொடுக்கப்படும் தண்டனை எல்லாருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டுமென்று கூறியதுடன், அப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் பயந்திருப்பார்கள் என்பதால் அந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆசிரியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.