இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த ஓரிரு ஆண்டுகளில் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அதனால் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போவதாகவும் சமீபத்திய அறிக்கைகளில் சொல்லப்பட்டன. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் ரவுடிகளிடையே சண்டை, அதனால் குத்து, கொலை போன்ற சம்பவங்கள் கணிசமாக அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்புதான் திருநெல்வேலியில் கடந்த 5 ஆண்டுகளில் 285 பேர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக தகவல் அறிக்கை வெளியாகி கொலைநகரமாக மாறிவருகிறதா என்ற கேள்வியை எழுப்பியது. அதிலும் குறிப்பாக, கொலைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் 60 பேர் சிறார் என்ற தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்கும் முன்பே சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஈரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது ரவுடி கும்பலால் வழிமறித்து வெட்டி கொலைசெய்யப்பட்ட செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மனைவியின் கண்முன்னே 5 பேர் கொண்ட ரவுடி கும்பல் கணவனை சரமாரியாக வெட்டி ரத்தவெள்ளத்தில் தள்ளிவிட்டு ஓடிய வீடியோக்கள் வெளியாகி பார்ப்போருக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர். ஈரோட்டில் பட்டப்பகலில் மனைவியின் கண்முன்னே அரங்கேற்றப்பட்ட இந்த கொலையின் முழு விவரத்தையும் விரிவாக பார்க்கலாம்.

ஈரோட்டில் நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்யா. 35 வயதான ஜானின் மனைவியின் பெயர் சரண்யா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஜான் மீது அவரது சொந்த ஊரான கிச்சிபாளையம் மற்றும் அதன் அருகிலுள்ள ஊர்களான அன்னதாப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை போன்ற பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் கொலைவழக்கு உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக பல்வேறு காவல்நிலையங்களில் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் தனது ஊரைவிட்டு திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். அங்கு டூவீலர் மற்றும் கார் போன்ற வாகனங்களுக்கு லோன் கொடுக்கிற நிதி நிறுவனம் ஒன்றை நடத்திவந்துள்ளார். திருப்பூரில் வசித்துவந்தாலும் தன்மீதுள்ள வழக்குகளுக்காக காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப்போட்டு வந்துள்ளார். அப்படி மார்ச் 19ஆம் தேதி சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள காவல்நிலையத்தில் கஞ்சா வழக்கு ஒன்றில் கையெழுத்துப் போடுவதற்காக தனது மனைவி சரண்யாவுடன் சென்றிருக்கிறார். கையெழுத்து போட்டுவிட்டு திரும்பியபோது ஈரோடு மாவட்டத்திலுள்ள நசியனூர் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளனர். ஜானின் மனைவி சரண்யாதான் காரை ஓட்டிச்சென்றுள்ளார். சாமி கவுண்டன்பாளையம் பிரிவு அருகே மதியம் 12.15 மணிக்கு ஜானின் காரை பின்தொடர்ந்துவந்த மர்ம கும்பல் ஒன்று காரை வழிமறித்ததுடன் கண்ணாடியை உடைத்து தாக்கியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு காரிலிருந்து இறங்கி ஜானின் காரை சூழ்ந்துகொண்ட அந்த கும்பல், முன்பக்க இடதுபகுதியில் அமர்ந்திருந்த அவரை சரமாரியாக வெட்டியது.


மனைவியின் கண்முன்னே ரவுடி ஜான் வெட்டிக்கொலை செய்யப்பட்ட காட்சி

இதனை தடுக்கமுயன்ற சரண்யாவிற்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. கொடூரமான தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். கையில் பலத்த வெட்டுக்காயத்துடன் கூச்சலிட்ட சரண்யாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை நசினூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார், ஜானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடியதில் முதலில் கைகளில் வெட்டுக்காயங்களுடன் குற்றவாளி கார்த்திகேயன் (28) கண்டுபிடிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சேலம் மாவட்டம் இச்சிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவர அவர்களை தேடும் பணியில் இறங்கினர். தீவிர தேடுதலில் சதீஷ் (30), சரவணன் (28) மற்றும் பூபாலன்(28) ஆகிய 3 பேரை பச்சப்பாளி அருகே பவானி காவல்துறை தலைமையிலான குழு கைதுசெய்ய முற்பட்டபோது தப்பியோடியதால் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தது. அந்த மூன்று பேருக்கும் முதலில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்தபிறகு ஜானின் உடலை கிச்சிபாளையத்திலுள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டுசென்று இறுதி சடங்குகளை முடித்தபிறகு, நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையத்தில் வைத்து அடக்கம் செய்தனர்.

கைதானவர்களின் வாக்குமூலம்

ஜானின் கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. சேலத்தில் பிரபல ரவுடிகளாக வலம்வந்த ஜானும், செல்லதுரையும் நெருங்கிய நணபர்களாக பழகிவந்துள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து கொலை, அடிதடி போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்படி இணக்கமாக இருந்த இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனையடுத்து 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை கொல்ல திட்டமிட்ட ஜான், வெளியூரிலிருந்து ரவுடிகளை அழைத்துவந்து, செல்லதுரை சென்ற காரை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்துள்ளார்.


ஜானை கொலை செய்தது குறித்து கைதானவர்களின் வாக்குமூலம்

ஜானின் இந்த செயல் செல்லதுரையின் தம்பி ஜீவகனுக்கு தெரியவர, எப்படியாவது தனது அண்ணனின் சாவுக்கு பழிதீர்க்கவேண்டுமென்று திட்டமிட்டு வந்துள்ளார். பலமுறை கொலை திட்டங்கள் சொதப்பவே ஒருவழியாக கொலை நடந்ததற்கு 3 நாட்களுக்கு முன்பே ஜானை தீர்த்துகட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் அப்போது முடியவில்லை. இந்நிலையில்தான் மார்ச் 19ஆம் தேதி 2 கார்களில் தனது கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு சேலத்திலிருந்து ஜானை பின்தொடர்ந்து வந்துள்ளார் ஜீவகன். முதலில் சங்ககிரி சுங்கச்சாவடி அருகே வைத்து கொலைசெய்ய திட்டமிட்ட நிலையில், அது கைகூடாமல் போயிற்று. எனவே ஜானின் காரை பின்தொடர்ந்து நசியனூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் மோதி விபத்து ஏற்படுத்தி அங்கு வைத்து கொலையும் செய்துள்ளனர். கைதானவர்களின் இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து மற்றொரு காரில் தப்பிச்சென்ற குற்றவாளிகளையும் போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜீவகன் மற்றும் சலீம் ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். செல்லதுரை தனது 2வது மனைவியின் வீட்டுக்குச் சென்றபோதுதான் ரவுடிகள் அவரை காருக்குள் வைத்து விபத்து நிகழ்த்தி கொலைசெய்ததால் அப்போதே அவருடைய இரண்டு மனைவிகளும் தங்களுடைய கணவனின் இறப்புக்கு பழிக்குப்பழி வாங்குவோம் என்று சபதம் எடுத்திருந்தனர். இதனால் ஜானின் கொலைவழக்கில் அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரிக்க போலீசார் தேடியபோது இருவரும் தலைமறைவாகிவிட்டது தெரியவந்துள்ளது.

யார் இந்த ஜான்?

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தில், பிரபல ரவுடியாக ஜான் உருவெடுப்பதற்கு முன்பே அங்கு பெயர் சொன்னால் தெரியும் அளவிற்கு பெரிய ரவுடியாக வலம்வந்தவர் சூரி. இவருடைய மகன் நெப்போலியன் 2015ஆம் ஆண்டு கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக கைதானவர்தான் ஜான் என்கிற சாணக்யா. ஜான் தவிர அந்த வழக்கில் பழனிசாமி, தம்பி சாரதி, செல்லதுரை, ஜீவகன் உட்பட 20 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பின் நல்ல நட்புறவுடன் இருந்த ஜானுக்கும் செல்லதுரைக்கும் இடையே விரோதம் ஏற்பட, ஜான் தனக்கென வேறு கூட்டாளிகளை சேர்த்துள்ளார்.


நண்பர்களாக இருந்து விரோதிகளாக மாறிய ரவுடிகள் செல்லதுரை மற்றும் ஜான் என்கிற சாணக்யா

குறிப்பாக, சூரியன் மகன்கள் சிலம்பரசன், ஜீசஸ், டெனிபா மற்றும் சதீஷ் ஆகியோருடன் ஜானும் சேர்ந்து திட்டமிட்டு செல்லதுரையை கொலைசெய்தனர். இதில் ஜானின் தம்பி சாரதி, அப்பா சாமிதாஸ், அம்மா கனகா உட்பட 32 பேர் கைதுசெய்யப்பட்டனர். இப்படி அடுத்தடுத்த கொலைகள் மற்றும் அடிதடி சண்டைகளில் ஈடுபட்டு வந்த ஜானுக்கு போலீசார் தரப்பிலிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதால் சேலத்தில் வசிக்காமல் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியிலுள்ள தனது மாமனார் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து காவல்நிலையங்களில் கையெழுத்து போட்டுவந்த ஜான், தனியாக பிசினஸ் செய்ததில் அவரிடம் நல்ல பணப்புழக்கம் இருந்திருக்கிறது. அதை வைத்து நெப்போலியன் தரப்பினரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நெப்போலியன் கொலை வழக்கில் கைதான ஜான் உட்பட சலீம், சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பிறகு நெப்போலியனின் அப்பா சூரி போலீசாரிடம் அந்த கொலைவழக்கு குறித்து பிறழ்சாட்சியமும் அளித்துள்ளார். இப்படி அந்த வழக்கின் விசாரணையில் திருப்புமுனை ஏற்பட்டிருந்த சமயத்தில் ஜானுடன் இருந்த சதீஷ், சலீம் மற்றும் சரவணன் ஆகியோர் எப்படி செல்லதுரையின் தம்பி ஜீவகனுடன் சேர்ந்துகொண்டு ஜானையே கொலைசெய்தனர்? இந்த கொலையில் இன்னும் யார்யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? என்பது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர் போலீசார்.

Updated On 26 March 2025 4:09 PM IST
ராணி

ராணி

Next Story