
நம்மை சுற்றி அடிக்கடி நடக்கின்ற சம்பவங்களை கேள்விப்படும்போது காதலுக்காக உயிரை கொடுக்கும் காலம் மாறி காதலுக்காக உயிரை எடுக்கும் காலம் வந்துவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காதலனுக்காக தாயை கொன்ற மகள், காதலிக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த மகன், மகள் காதலிப்பது பிடிக்காததால் சாப்பாட்டில் விஷம் வைத்த தாய், தங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாய் கழுத்தை நெரித்து கொலை போன்ற செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அப்படியொரு சம்பவம்தான் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியிருக்கிறது. சென்னையில் தனது காதலுக்கு அம்மா எதிர்ப்பு தெரிவிக்க, காதலனை வீட்டிற்கு வரவைத்து, தன் கண்முன்னே தனது தாயை அவன் கழுத்தை நெரித்துக்கொன்றதையும் மகள் பார்த்துக்கொண்டே நின்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கும் ஒருசில நாட்களுக்கு முன்புதான் தனது மகள் காதலிப்பது பிடிக்காமல் பெற்ற தாயே முட்டை பொடிமாஸில் விஷம் கலந்து கொடுத்த செய்தி வெளியாகி காதலிக்கும் இளைஞர்கள் மத்தியில் பயத்தை கிளப்பியது. தற்போது காதலியை திட்டிய அவருடைய தாயையே இளைஞர் கொலைசெய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது. சென்னையில் நடந்த இச்சம்பவத்தின் முழு விவரத்தையும் தெளிவாக பார்க்கலாம்.
காதலியின் கண்முன்னே அவரது தாயை கொலைசெய்த காதலன்
சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலை பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மைதிலி (64). இவர் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது 24 வயது மகள் ரித்திகாவுடன் அங்கு தனியாக வசித்துவந்துள்ளார். ரித்திகா போரூரிலுள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த ஜூனியர் மாணவனான ஷியாம் கண்ணன் (22) என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவரும் முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் பகுதியில் தங்கி, தனியார் ஐஏஸ் அகாடமியில் போட்டித்தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் அடிக்கடி வெளியே ஊர் சுற்றிவிட்டு இரவு வீட்டிற்கு தாமதமாக வருவதும், ரித்திகாவின் வீட்டிற்கு ஷியாம் அடிக்கடி வந்துபோவதுமாக இருந்ததால், இவர்கள் இருவரும் காதலிப்பது மைதிலிக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. அந்த காதல் வேண்டாம் என மைதிலி அடிக்கடி சண்டை போடுவதும் ரித்திகாவை திட்டுவதுமாக இருந்துள்ளார். மேலும் அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் தன்னை பற்றி தவறாக பேசுவதாக கூறிவந்துள்ளார். இருந்தாலும் மைதிலியின் பேச்சை ரித்திகா கேட்கவில்லை. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி பகல் முழுவதும் ஷியாமுடன் ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார் ரித்திகா. இதனால் ஆத்திரமடைந்த மைதிலி அவரை கண்டித்துள்ளார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றிய நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய ரித்திகா, தனது காதலனுக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறி அழுதிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை வந்து பார்க்குமாறு ரித்திகா அழுததால், ஷியாம் அவரை பார்க்க சென்றிருக்கிறார். இதற்கிடையே வீட்டைவிட்டு வெளியே சென்ற தனது மகள் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் பயந்துபோன மைதிலி அவரைத் தேடி சென்றிருக்கிறார். அப்போது ரோட்டில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து மேலும் கோபமடைந்த மைதிலி, மகளை வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்து சென்றிருக்கிறார். இவர்களுடன் ஷியாமும் வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
காதலியின் தாயை கொலைசெய்த ஷியாம் - உயிரிழந்த மைதிலி
இருவரையும் உட்கார வைத்து மைதிலி அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதில் மூவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. இந்த சண்டையில் ஷியாம், மைதிலியை அடித்து கீழே தள்ளியதுடன் கழுத்தை நெரித்ததில் சம்பவ இடத்திலேயே மைதிலி உயிரிழந்தார். கோபத்தின் உச்சத்தில் தான் கொலைசெய்ததை உணர்ந்த ஷியாம், தானே ஜே.ஜே நகர் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு நடந்ததை விளக்கியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மைதிலியின் உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்த ஷியாமை கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர். தன் கண்முன்னே தனது தாய் கொலைசெய்யப்பட்டதை பார்த்தும் தடுக்காத மகள் ரித்திகாவிடமும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டராக நினைத்து சென்னை முகப்பேரில் தங்கி படித்துவரும் ஷியாம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கலெக்டராக நினைத்த ஒருவர் காதலுக்காக கொலையாளியாக மாறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு...
காதலிக்காக, அவருடைய அம்மாவை கொலைசெய்த சம்பவம் நடப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்புதான் கள்ளக்குறிச்சியில் தனது மகள் காதலிப்பது பிடிக்காமல் முட்டை பொடிமாஸில் ஒரு தாயார் விஷம் கலந்துகொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் வசித்துவரும் முனுசாமி - மல்லிகா தம்பதிக்கு குறிஞ்சி (20) என்ற மகள் இருக்கிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்துவருகிறார். இவருக்கும் திருவள்ளூரைச் சேர்ந்த சாய்குமார் என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நல்ல நண்பர்களாக பேசிவந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது.
காதலித்த மகளுக்கு முட்டை பொடிமாஸில் விஷம் வைத்து கொடுத்த தாய் மல்லிகா
இருவரும் அடிக்கடி ஃபோனில் பேசிவந்த நிலையில், குறிஞ்சியின் காதல் விவகாரம் அவருடைய அம்மா மல்லிகாவிற்கு தெரியவரவே, அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை மிரட்டியிருக்கிறார். மேலும் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரையும் கூறியிருக்கிறார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத குறிஞ்சி, தொடர்ந்து சாய்குமாருடன் பேசிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா, முட்டை பொடிமாஸ் செய்து அதில் எலி மருந்தை கலக்கி மகளுக்கு சாப்பிட கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி குறிஞ்சி மயங்கிவிழவே, தான் விஷம் கலந்தது குறித்து வீட்டில் கூறியிருக்கிறார் மல்லிகா. உடனடியாக குறிஞ்சியை மீட்ட உறவினர்கள் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவசர சிகிச்சைப்பிரிவில் குறிஞ்சிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன், தாயார் மல்லிகாமீது கொலைமுயற்சி வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர்.
காதலிக்காக கஞ்சா விற்ற இளைஞர்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயையே காதலனை வைத்து மகள் கொலைசெய்வதும், குடும்ப கௌரவத்துக்காக பெற்ற மகளையே தாய் கொலைசெய்ய துணிவதும் ஒருபுறம் நடக்க, தனது காதலியுடன் ஊர் சுற்றுவதற்காக கஞ்சா விற்று போலீசாரிடம் சிக்கியிருக்கிறான் நீலகிரியைச் சேர்ந்த கல்லூரி மாணவன். பொதுவாகவே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துபோகின்ற இடங்களில் கஞ்சா புழக்கமும் அதிகமாக இருக்கும். கஞ்சா விற்பனையை தடுக்க போலீசாரின் தடுப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை குறைந்தபாடில்லை.
காதலியுடன் ஊர் சுற்ற ஊட்டியில் கஞ்சா விற்ற இளைஞன்
இந்நிலையில் ஊட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இளைஞனை பிடித்து அவனை பரிசோதித்தபோது அவனிடம் 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவனை விசாரித்ததில் தான் ஒரு கல்லூரி மாணவன் என்றும், காதலியுடன் வெளியே ஊர்சுற்ற பணம் இல்லாததால் கஞ்சா விற்கும் தொழிலில் இறங்கியதாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறான். மேலும் பெற்றோர் தனக்கு கொடுக்கும் பணமானது தனது செலவிற்கே சரியாக இருப்பதால், தனது நண்பர்களிடம் ஐடியா கேட்டதாகவும், அவர்கள்தான் கஞ்சா விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று சொல்லவே அதை கேட்டு கஞ்சா விற்றுவருவதாகவும் கூறியிருக்கிறான். மேலும் வெறும் 20 ரூபாய் கொடுத்து மொத்தமாக வாங்கிவரும் கஞ்சாவை 1 லட்சம் ரூபாய் வரைக்கும்கூட விற்று நல்ல லாபம் பார்த்துவருவதாக கூறியுள்ளான். கல்லூரி மாணவனின் இந்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
இப்படி காதலை எதிர்க்கும் பெற்றோர் ஒருபுறம் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்றால், காதலனுக்காக வீட்டிலிருக்கும் நகைகளை பிள்ளைகள் விற்பதும், காதலிக்காக சட்டவிரோத தொழிலில் காதலன் ஈடுபட்டு சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த 10, 20 ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில், இன்று பல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் காதலுக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஒருசில பெற்றோர் கடுமையாக எதிர்க்கவே செய்கின்றனர். அதற்கு இதுபோன்ற சம்பவங்கள் சிறந்த உதாரணம். எனவேதான் பெற்றோரை பிள்ளைகளும், பிள்ளைகளின் மனநிலையை பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டுமென மனநல மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.
