இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த எத்தனையோ செய்திகளை நாம் தினசரி கேட்கிறோம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் நடந்த சம்பவமொன்று நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. கர்ப்பிணி என்றும் பாராமல் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதுடன், அவர் சம்மதிக்காததால் கையை உடைத்து, காலால் எட்டி உதைத்து அவரை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறான் ஒரு கொடூரன். தலையில் பலத்த காயங்களுடன் கர்ப்பிணியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையெடுத்து வரும் பாதிக்கப்பட்ட பெண் காட்டிய அடையாளங்களின்பேரில் குற்றவாளியை கண்டுபிடித்து போலீசார் கைதுசெய்துள்ளனர். குற்றவாளிக்கு உரிய தண்டனையை அளித்திடுமாறு பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் யார்? அவருடைய பின்னணி என்ன? குற்றவாளி பிடிபட்டது எப்படி? என வேலூரில் நடந்த முழு சம்பவத்தையும் விரிவாக பார்க்கலாம்.

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் திருப்பூரிலுள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். அவருடைய மனைவியும் வீட்டிலேயே டி-ஷர்ட் தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், 36 வயதான அப்பெண், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 4 மாத கர்ப்பிணியான அவர், சித்தூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு, பிப்ரவரி 6ஆம் தேதியன்று காலை 6.40 மணிக்கு திருப்பூர் வழியாக செல்லும் கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பாக செல்ல நினைத்த அப்பெண் முன்பதிவில்லா பெண்கள் பொதுப்பெட்டியில் ஏறியிருக்கிறார். அவர் ரயிலில் ஏறியபோது 7 பெண்கள் இருந்ததால் அவர்களுடன் அமர்ந்து பயணித்திருக்கிறார். ஈரோடு, சேலம் வழியாக செல்லும் அந்த ரயில் ஜோலார்ப்பேட்டை ரயில்நிலையத்தை அடைந்ததும், பெட்டியிலிருந்த மற்ற அனைவரும் இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் மட்டும் தனியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த பெட்டியில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருப்பதை பார்த்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ரயில் புறப்படும் நேரம்பார்த்து அந்த பெட்டியில் ஏறியுள்ளான். அது பெண்கள் பெட்டி எனவும், உடனடியாக இறங்குமாறும் அந்த பெண் கூறவே, ரயில் புறப்பட்டுவிட்டது எனவும், அடுத்த ஸ்டேஷனில் இறங்கி மாறிவிடுகிறேன் எனவும் கூறியிருக்கிறான் அந்த இளைஞன். சில நிமிடங்கள் ரயிலில் அங்குமிங்கும் நடந்து நோட்டம்விட்டபிறகு, உள்ளே யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட அந்த நபர், டாய்லெட்டுக்குள் சென்றுள்ளான். ஒருசில நிமிடங்களில் உள்ளே இருந்து வந்தபோது ஆடை முழுவதையும் கழற்றிவிட்டு, அந்த பெண்ணின் முன்பு நிர்வாணமாக நின்றதுடன், தன்னுடன் உடலுறவில் ஈடுபடுமாறு கூறியிருக்கிறான்.


கர்ப்பிணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஹேமந்த்ராஜ்

பயந்துபோன அக்கர்ப்பிணி, உதவி கேட்டு கத்தியுள்ளார். ஆனால் ரயில் ஓடிக்கொண்டிருந்ததால் யாருக்கும் தெரியவில்லை. இதனை சாதகமாக்கிக்கொண்ட அந்த நபர், பெண்ணின் ஆடைகளை களைய முற்பட்டிருக்கிறான். இருப்பினும் அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை விட்டுவிடும்படியும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அந்த இளைஞன் கேட்பதாக இல்லை. சுமார் அரை மணிநேரம் அவனுடன் போராடிய அப்பெண், டாய்லெட்டில் சென்று தாழிட்டு அங்குள்ள செயினை இழுத்து ரயிலை நிறுத்தலாமென்று எண்ணி, எழுந்து செல்ல முற்பட்டிருக்கிறார். ஆனால் அந்த கொடூரன் அதற்குள் அவரை பிடித்து கீழே தள்ளி அடித்து தாக்கியிருக்கிறான். பதிலுக்கு அந்த பெண்ணும் அவனை உதைத்துள்ளார். ஆனாலும் அவரால் ஒருகட்டத்திற்கு மேல் போராட முடியவில்லை. இந்த சூழ்நிலையில், படியின் ஓரத்திற்கு அப்பெண்ணை இழுத்துச்சென்ற அந்த நபர், அந்த பெண்ணை கீழே தள்ளிவிடுவேன் என மிரட்டியிருக்கிறான். மேலும் அந்த பெண்ணின் கால்களை படிக்கு வெளியே தள்ளிவிடவே, எப்படியாவது மேலே ஏறுவதற்காக கம்பியை கைகளால் இறுக்கி பிடித்திருக்கிறார் அப்பெண். அந்த நபர் அவருடைய ஒரு கையை பலமாக தாக்கவே ஒரே கையால் முடிந்தவரை கம்பியை பிடித்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் கையில் ஓங்கி உதைக்க நிலை தடுமாறி ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்துவிட்டார் அப்பெண். வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே விழுந்துகிடந்த அப்பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் சுயநினைவிழந்திருந்த அப்பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர் கர்ப்பமாக இருந்ததால் இந்த தாக்குதலில் கருவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து அடித்த கொடூரம்

கர்ப்பிணியின் கண்ணீர் வாக்குமூலம்

முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதில் சுயநினைவு திரும்பிய அப்பெண் தனக்கு நடந்தவற்றை போலீசாருக்கு விளக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களை வைத்து, பெண்கள் பெட்டியில் ஏறிய இளைஞனை அடையாளம் கண்டுபிடித்த போலீசார் அந்த பெண்ணிடம் சிசிடிவி காட்சிகளைக் காட்டி குற்றவாளி அவன்தான் என்பதை உறுதிசெய்தனர். அந்த நபர் யார் என விசாரணை மேற்கொண்டதில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகேயுள்ள நாகல் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்பது தெரியவந்திருக்கிறது. அந்த நபர் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி ரயில் நிலையம் அருகே இளம்பெண்ணை தாக்கி செயின், செல்ஃபோனை பறித்துக்கொண்டு, அப்பெண்ணை கீழே தள்ளிய வழக்கில் சிக்கியவர். அதுபோக, திருமணத்தை மீறிய உறவிலிருந்த பெண்ணின் கொலைவழக்கிலும் தொடர்புடையவர் என்பதும், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.


தீவிர சிகிச்சைப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தபடியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “நான் திருப்பூரில் காலை 6.40க்கு ரயில் ஏறினேன். ஜோலார்பேட்டை வரும்போது மணி 10.45 இருக்கும். அப்போது பெண்கள் எல்லாரும் இறங்கிவிட்டனர். ரயில் நகரும் சமயத்தில் அந்த பையன் உள்ளே ஏறினான். உடனே அவனிடம் இது லேடீஸ் கோச், நான் ஒரு ஆள்தான் இருக்கிறேன். நீ இறங்கிவிடு என்று சொன்னேன். ஆனால் அடுத்து காட்பாடியில் இறங்கிவிடுகிறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று சொன்னான். நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அவன் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டே இருந்தான். பிறகு கொஞ்ச நேரம் ஆளை காணவில்லை. பாத்ரூமிலிருந்து அவன் வெளியே வந்தபோது டிரெஸ் அனைத்தையும் கழற்றிவிட்டு வந்தான். என்னிடம் வந்து என்னுடைய டிரெஸை கழற்ற முயன்றபோது, என்னுடைய வயிற்றில் குழந்தை இருக்கிறது. நான் அந்த மாதிரி பெண் கிடையாது வேணாம் தம்பி இப்படி பண்ணாதே என்று கெஞ்சினேன். உடனே செயினை இழுக்க சீட்மீது ஏறினேன். உடனே என் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து அடித்தான். முடிந்தவரை நானும் அவனை அடித்தேன். பிறகு பாத்ரூமில் சென்று லாக் செய்துகொண்டு செயினை இழுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவன் தரதரவென படிவரை இழுத்துச் சென்றான். நான் அந்த கம்பியை இரண்டு கைகளாலும் கெட்டியாக பிடித்துக்கொண்டேன். அவன் என்னுடைய வலது கையை உடைத்துவிட்டான். ஒரு கை சப்போர்ட்டில் நான் பிடித்துக்கொண்டிருந்தபோது என் கால்களை எடுத்து கீழே விட்டுவிட்டான். என்னால் முடிந்தவரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு வந்தேன். ஆனால் அந்த கையை அவன் எட்டி உதைத்துவிட்டான். நான் கீழே விழுந்தபிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. அடுத்து ஆம்புலன்ஸில் என்னை கொண்டுவந்து அட்மிட் செய்தார்கள்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


கர்ப்பிணியின் கண்கலங்க வைக்கும் அதிர்ச்சி வாக்குமூலம்

மேலும் தனக்கு நடந்ததைப் போன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என்றும், முடிந்தால் அவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுங்கள் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். என்னிடம் நடந்துகொண்டதைப் போன்று வேறு பெண்ணிடம் நடந்துகொள்ளமாட்டான் என என்ன உத்தரவாதம் இருக்கிறது? இந்த சைக்கோவை வெளியே விடாதீங்க, ஆயுள் தண்டனைகூட கொடுங்கள், பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார் பாதிக்கப்பட்ட பெண். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஹேமந்த்ராஜ் போலீசாரில் பிடியிலிருந்து தப்பியோடியப்போது கீழே விழுந்து இடதுகாலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவனுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராகிவரும் நிலையில், அவருக்கு தெற்கு ரயில்வே ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளது. அப்பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ரயிலிலிருந்து கீழே விழுந்ததில் சிசுவிற்கு இதய துடிப்பு நின்று, வயிற்றிலேயே இறந்துவிட்டதால், அதை அறுவைசிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர். கர்ப்பிணியைத் தாக்கி சிசுவைக் கொன்ற கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமென பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story