இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குத்து பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் மெட்டில் கிறிஸ்தவ பாடல்களை இயற்றி, பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ். கடந்த சில மாதங்களாகவே இவர் குறித்து சமூக ஊடகங்களில் பல செய்திகள் பரவிவந்த நிலையில், ஒருசில கிறிஸ்தவ மத போதகர்களும் இவரைப் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்திருந்தனர். ஆனால் அது பற்றியெல்லாம் கவலைப்படாத ஜான் ஜெபராஜ் தனது மியூசிக் கான்சர்ட்களில் தன்னைப்பற்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக பேசிவந்தார். இந்நிலையில் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த 2 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க முயன்றபோது அவர் தலைமறைவான நிலையில், கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏப்ரல் 25-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பிற கிறிஸ்தவ மத போதகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஜான் ஜெபராஜ் விஷயத்தில் என்ன நடந்தது பார்க்கலாம்.

யார் இந்த ஜான் ஜெபராஜ்?

கோவையைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் போதகர் ஜான் ஜெபராஜ். 37 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். தென்காசியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், செங்கோட்டையிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்துள்ளார். அதன்பிறகு சதர்ன் ஆசிய பைபிள் கல்லூரியில் படித்த இவர் லேவி மினிஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஊழியம் செய்துவந்தார். மேலும் கோவை கிராஸ்கட் சாலையிலுள்ள கிங்க்ஸ் ஜெனரேஷன் சர்ச் என்ற பெயரில் எட்வின் ரூசோ என்ற போதகருடன் இணைந்து சபையும் நடத்திவந்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சபையிலிருந்து அவர் விலகியது மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாக அங்கு ஆலய கூடுகையே நடைபெறுவதில்லை என்று சொல்லப்படுகிறது. சபை மூடப்பட்டாலும் தனியார் அரங்கை வாடகைக்கு எடுத்து அங்கு ஆலய கூடுகையை சில மாதங்கள் நடத்தியதாக சொல்லப்படுகிறது. சபை மட்டுமல்லாமல் கிறிஸ்தவ பாடல்களை இயற்றி அவற்றை வீடியோவாக வெளியிட்டு தனது பாடல்கள் மூலம் உலகெங்கும் பிரபலமானவர் இவர் என்பதால் தொடர்ந்து வெளிமாநிலங்களில் இவருக்கு வரவேற்பு இருந்துவந்தது. குறிப்பாக, இவர் பயன்படுத்தும் டியூன் மற்றும் இசை அனைத்தும் மேற்கத்திய முறையில் இருப்பதுடன், இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் இருப்பதாலேயே ஜான் ஜெபராஜுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். அதனால் தமிழ் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் ஜான் ஜெபராஜை வைத்து கான்சர்ட்கள் நடத்தப்பட்டு வந்தன. ‘லைவ் இன் கான்சர்ட்’ என்ற பெயரில் இவருடைய கான்சர்ட்டில் கலந்துகொள்ள டிக்கெட்கள் ஆன்லைனில் விற்கப்படுவது வழக்கம். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் ஜான் ஜெபராஜ் தொடர்ந்து ஊழியங்களில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே இவர் தனது மனைவியை பிரிந்துவாழ்வதாகவும், குறிப்பாக, கேரளாவில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் கிறிஸ்தவ யூடியூப் சேனல்களில் ஜான் ஜெபராஜ் குறித்து கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.


மாடர்ன் மியூசிக் கிறிஸ்தவ பாடல்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான போதகர் ஜான் ஜெபராஜ்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார்!

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜான் ஜெபராஜ் குறித்த எந்த தகவலும் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், அவர்மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 21ஆம் தேதி, அவருடைய வீட்டில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜான் ஜெபராஜ் வீட்டில் நடைபெற்ற பார்ட்டிக்கு அவருடைய மாமனார் தனது 17 வயது வளர்ப்பு மகளை அழைத்துவந்துள்ளார். அங்கு ஜான் ஜெபராஜின் பக்கத்துவீட்டை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். அவர்களுடைய 14 வயது மகள் இதுகுறித்து தற்போது தனது பெற்றோரிடம் கூறியதன்பேரில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி ஜான் ஜெபராஜ்மீது போக்சோ சட்டப்பிரிவு 9 மற்றும் அதன் தண்டனைப்பிரிவு 10இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க அவரைத் தேடியபோதுதான் நீண்ட நாட்களாகவே அவர் கோவைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜான் ஜெபராஜை கைதுசெய்ய தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இந்த புகாருக்கு முன்பே ஜான் ஜெபராஜின் பாடல்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மதபோதகர்கள் பலர் எச்சரித்துவந்தனர். குறிப்பாக, அவருடைய பாடல்கள் சினிமா பாடல்கள் போன்று இருப்பதாகவும், இளைஞர்களை தவறான வழியில் நடத்துவதாகவும் கூறிவந்தனர். ஆனால் அதற்கு, எப்போதும் இருப்பதைப் போன்றே மீண்டும் மீண்டும் பாடல் இயற்றினால் மக்கள் விரும்பமாட்டார்கள். குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் பாடல்களை இயற்றுவதாகவும், அவற்றை சினிமா பாடல்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதாகவும், ஆனால் தன்னுடைய இசை அறிவை பயன்படுத்தி வெளிநாட்டு பாணிகளை தன்னுடைய பாடல்களில் புகுத்தி இயற்றுவதாகவும் கூறியிருந்தார். மேலும் தன்னை பற்றி விமர்சிக்கும் போதகர்களுக்கு தனது மேடை நிகழ்ச்சிகளின்போது பதிலடி கொடுக்கும்வகையிலும், தனது வளர்ச்சியைக் கண்டு பலர் பொறாமைப்படுவதாகவும் கூறிவந்தார். இந்நிலையில் தற்போது ஜான் ஜெபராஜ் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து கோவை கிறிஸ்தவ மதப்போதகர்கள் ஐக்கியத் தலைவர் சாம்சன் எட்வர்டு கூறியபோது, தங்களுடைய ஐக்கியத்தில் 800 பேர் இருப்பதாகவும், ஆனால் அதில் ஜான் ஜெபராஜ் இல்லையென்றும் கூறியிருந்தார். மேலும் இந்த பாலியல் புகார் குறித்து கருத்து சொல்லும் அளவிற்கு அவரைப் பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.


போக்சோ சட்டத்தின்கீழ் ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு

ஜான் ஜெபராஜ் பேசியதாக வெளியான ஆடியோ!

மத போதகர் செய்யும் காரியமா இது? என்று சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ஜான் ஜெபராஜ் பேசிய ஆடியோ என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், “நம் இருவருக்கும் இடையே நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன. அதை வைத்து யாரோ விளையாடி, அசிங்கம் ஏற்படுத்துகின்றனர். உன்னை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறார்கள். என்னையும் துரத்தி துரத்தி ஓட வைத்திருக்கிறார்கள். கர்த்தர் என்னை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார். இதுபோன்ற பிரச்சினைகள் வரும்போது எல்லாருக்கும் செத்து போய்விடலாம் என்ற எண்ணம் வரும். எனக்கும் அதுபோன்ற எண்ணம் நான்கைந்து முறை வந்தது. நான் சரியாக சாப்பிடவில்லை. 9 கிலோ எடை குறைந்துவிட்டேன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். நம் இரண்டு பேருக்கு மட்டும்தான் என்ன நடந்தது என்று தெரியும். கர்த்தர் என்னை பார்த்துக்கொள்வார். நான் மறுபடியும் சொல்கிறேன், உன்னை நான் பொது இடத்தில் அசிங்கப்படுத்த மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். இந்த போன் காலில் யாரிடம் ஜான் ஜெபராஜ் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், இருவரும் விவாகரத்து கோரவிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்த போன் காலை அவருடைய மனைவியிடம் பேசியிருக்கலாம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றனர்.


முன்ஜாமின் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தலைமறைவான நிலையில் ஜான் கைது

முன் ஜாமின் கோரி மனு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த ஜான் ஜெபராஜ், தலைமறைவானார். ஜான் ஜெபராஜ், தனது சொந்த ஊரான தென்காசி அல்லது அடிக்கடி சென்றுவருகிற கேரளா அல்லது பெங்களூருவில் இருக்கக்கூடும் என்று சொல்லப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கேரளாவின் மூணாறு அருகே மறைந்திருந்த ஜான் ஜெபராஜை போலீசார் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். கோவை காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஏப்ரல் 25-ம் தேதிவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிற மத போதகர்கள் மகிழ்ச்சி

ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, பிற மத போதகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஜான் ஜெபராஜின் நடவடிக்கைகளை திருத்திக்கொள்ளுமாறு, அவருக்கு அறிவுரை கூறிய மூத்த மத போதகர்களை, பொது நிகழ்ச்சி மேடைகளில் வைத்தே, ஜான் ஜெபராஜ் கடுமையாக விமர்சித்ததாகவும், ஒருமையில் பேசி அவர்களை அசிங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளது, தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக பிற மத போதகர்கள் கூறியுள்ளனர். மேலும், மாட்டிக்கினாரு ஒருத்தரு, பல தவறுகள் செய்த இவரை காப்பாத்த மாட்டாரு கர்த்தரு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On 15 April 2025 8:16 AM IST
ராணி

ராணி

Next Story