
தன்னுடைய நகைச்சுவையான அதேசமயம் கருத்துமிக்க எதார்த்த பேச்சுக்களால் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சாமியார்களில் ஒருவர் நித்யானந்தா. இளம்வயதிலேயே சாமியாராக உருவாகி மிக குறுகிய காலத்தில் உச்சத்திற்குச் சென்ற சாமியார்களில் ஒருவரான இவர், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்மிக பக்தர்களுக்காக ஆசிரமங்களை உருவாக்கி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பியுள்ளார். தன்னை கடவுள் என்று கூறி மிகவும் பிரபலமடைந்தார் நித்யானந்தா. ஆனால் 2010ஆம் ஆண்டு இவருடைய அந்தரங்க வீடியோ ஒன்று ஊடகங்களில் வைரலாகி இவர் கட்டிவைத்த சாம்ராஜ்யத்தையே உடைத்து தரைமட்டமாக்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இவர்மீது அடுத்தடுத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இந்தியாவின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். எங்கு பார்த்தாலும் உடனே கைதுசெய்யுமாறு இவர்மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ‘தலைவர் ஸ்டைலில் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று தனிநாட்டையே உருவாக்கிவிட்டதாக அறிவித்து ஆன்மிக பக்தர்கள் மட்டுமல்லாமல் அவருடைய பேச்சை விரும்பிகேட்டுவந்த இளைஞர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதோடு நின்றுவிடாமல் தனது நாட்டிலுள்ள சிறப்புகள் குறித்தும், அங்கு ஆன்மிக பக்தர்கள் வருமாறும் அழைப்புவிடுத்தார். இந்நிலையில் அந்த நாடு எங்கு இருக்கிறது என்று கேட்டுவந்தவர்களுக்கு பதிலளிக்கும்விதமாக தனது நாட்டைப்பற்றிய விவரங்களை அறிவித்ததுடன், அதை தனிநாடாக அங்கீகரிக்க ஐ.நா வரை சென்றார். இப்படி இந்தியாவில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவந்த ஒரு தமிழன் உலகின் எங்கோ ஒரு மூலையில் தனக்கென தனிநாட்டையே உருவாக்கிவிட்டதாக பேசப்பட்டுவந்த சூழலில், நித்யானந்தாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் நித்யானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டதாக அவருடைய அக்கா மகன் வீடியோ வெளியிட, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்றைய நிலவரப்படி சுமார் 4000 கோடி சொத்துமதிப்புள்ள நித்யானந்தா திடீரென இறந்துவிட்டதாக கூறப்பட்டதால், அவருடைய சொத்தை அபகரிக்க அவர் கொலைசெய்யப்பட்டாரா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இன்னும் பல வருடங்கள்தான் உயிர்வாழ்வேன் என்றும் கூறி நேரலையில் பேசியுள்ளார். சாதாரண சாமியாராக அறியப்பட்ட நித்யானந்தா, இந்தியாவில் குற்றவாளி என்று கூறப்பட்டாலும் உலகம் முழுக்க பக்தர்களை உருவாக்கி, தனக்கென நாட்டையே உருவாக்கியது எப்படி? அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை பற்றியெல்லாம் பார்க்கலாம்.
நித்யானந்தா சிக்கிய சர்ச்சைகள்
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின்கீழ் உள்ள திருக்கோவிலூரில் ஒரு சாதாரண தம்பதியருக்கு பிறந்தவர்தான் ராஜசேகரன் என்ற இயற்பெயர்கொண்ட நித்யானந்தா. மிக இளம்வயதிலேயே கடுமையான தவம் மற்றும் பல்வேறு ஆன்மிக பயணங்களை மேற்கொண்டு, 20 வயதுகளிலேயே தன்னை ஒரு ஆன்மிக குரு என்று அறிவித்துக்கொண்ட நித்யானந்தாவை தனது வாரிசு என்றும் இளைய ஆதீனமாகவும் அறிவித்தார் மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனம். ஆனால் அப்போதே நித்யானந்தாவிற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்ப அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு முன்பே திருவண்ணாமலையில் ஒரு ஆசிரமத்தை நிறுவி நடத்திவந்த நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கர்நாடகாவில் பிடதி என்ற பகுதிக்குச் சென்று அங்கு ஒரு ஆசிரமத்தை நிறுவினார். ஒருபுறம் இவர்மீது அரசு சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் மற்றொருபுறம் இவருடைய எதார்த்தமான பேச்சு மற்றும் நகைச்சுவை கலந்த ஆன்மிக கருத்துகளால் இவரின் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போனது.
நடிகை ரஞ்சிதாவுடனான அந்தரங்க வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தா
இப்படி குறுகிய காலத்தில் புகழின் உச்சத்திற்குச் சென்ற முதல் சாமியார் என்ற பெருமையுடன் வலம்வந்த நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ ஒன்றை 2010ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்ப, கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் நித்யானந்தா. அதனைத் தொடர்ந்து தனது மகள்களை நித்யானந்தா வசியம் செய்து தனது ஆசிரமத்தில் வைத்திருப்பதாக ஒரு பெற்றோர் புகாரளித்தனர். இதனால் நித்யானந்தா மீது கடத்தல் மற்றும் பல்வேறு பாலியல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் பிடதி ஆசிரமத்துக்கே சென்று பல்வேறு பேட்டிகள் எடுக்கப்பட்டன. அதில் ஒரு செய்தியாளரை நித்யானந்தா தாக்கியதை அடுத்து, அவரை கைதுசெய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கர்நாடகா ஆசிரமம் மூடப்பட்டது. இதனிடையே தலைமறைவான நித்யானந்தாவை போலீசார் தேடிப்பிடித்து கைதுசெய்தனர். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதன்பிறகு அவர் பல வழக்குகளில் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததுடன் 2019ஆம் ஆண்டு மீண்டும் தலைமறைவாகிவிட்டதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் தனது சீடர்களுடன் நேபாளம் வழியாக தப்பிச்சென்று நாட்டைவிட்டே வெளியேறினார். அதுமுதல் நித்யானந்தா எங்கு போனார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
உலகின் மிகப்பெரிய சாமியார்களில் ஒருவராக உருவெடுத்த நித்யானந்தா!
இப்படியிருந்த சூழலில் 2020ஆம் ஆண்டு திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டு, கைலாசா என்ற பெயரில் தான் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டதாக அறிவித்தார் நித்யானந்தா. மேலும் அந்த நாட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன? அங்கு வர பக்தர்கள் என்ன செய்யவேண்டும்? என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும் உலகிலேயே பணம் என்ற ஒன்றே தேவைப்படாத, வரி இல்லாத, அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை கடைபிடிக்கும் ஒரே நாடு கைலாசாதான் என்றும் வெளிப்படையாக கூறினார். மேலும் கைலாசா நாட்டுக்கென பாஸ்போர்ட், தனி கொடி, நாணயங்கள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தி அந்நாட்டுக்கு சர்வதேச தூதர்களையும் நியமித்தார். இந்தியாவில் மிகப்பெரிய குற்றவாளியாக பார்க்கப்படும் நித்யானந்தாவைத் தேடி உலகெங்கும் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கைலாசா நாட்டிற்குச் சென்றனர். அங்கிருந்து தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதன்மூலம் தனது ஆன்மிக சொற்பொழிவுகளை ஆற்றிவந்தார் நித்யானந்தா. இந்நிலையில் இந்த கைலாசா நாடு எங்கு இருக்கிறது? என்ற கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தன. குறிப்பாக, கொரோனா காலத்தில் இங்கு இருப்பதற்கு பதிலாக கைலாசாவுக்கு போகலாம் என்று நித்யானந்தாவின் நாட்டை சமூக ஊடகங்களில் டிரெண்டாக்கினர் இளைஞர்கள்.
நித்யானந்தாவின் எதார்த்தமான பேச்சு மற்றும் சிரிப்பால் கவரப்படும் இளைஞர்கள்
அந்த சமயத்தில்தான் தனது நாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டதுடன், கைலாசாவை தனிநாடாக அங்கீகரிக்குமாறு ஐ.நா சபையையும் நாடினார். தென் அமெரிக்காவிலுள்ள ஈக்வடார் நாட்டின் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயர் சூட்டியிருப்பதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, கரீபியன் தீவு, பசிபிக், தென் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கைலாவிற்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும், மேலும் சில இடங்களை வாங்கவிருப்பதாகவும் அறிவித்தார். இப்படி உலகெங்கும் இருந்து கைலாசா நாட்டின் ஆன்மிக மக்கள்தொகையை பெருக்கும் முயற்சியில் நித்யானந்தாவும் அவருடைய சீடர்களும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பால் நித்யானந்தா சுய நினைவை இழந்துவிட்டதாகவும், இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சிவராத்திரி அன்று நித்யானந்தா சொற்பொழிவாற்றிய வீடியோ வெளியிடப்பட்டது. ஆனால் அந்த வீடியோ பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அங்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்று கைலாசா சார்பில் கூறப்பட்டாலும், அது பழைய வீடியோ என்று சொல்லப்பட்டது.
நித்யானந்தா இறந்துவிட்டதாக வெளியான செய்தி நாடகமா?
இப்படி பலமுறை நித்யானந்தா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகிவந்தாலும், அந்த வதந்திகளை உடைத்தெறியும்விதமாக மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுப்பார். இப்படி கடந்த வாரத்தில் நித்யானந்தாவின் சகோதரி மகனான சுந்தரேஸ்வரன் அவரைப்போலவே உடையணிந்துகொண்டு, சனாதன தர்மத்தை காப்பாற்ற நித்யானந்தா உயிர் தியாகம் செய்து ஜீவசமாதி அடைந்துவிட்டதாக அறிவித்தார். இதனால் நித்யானந்தா பக்தர்கள் மட்டுமல்லாமல் அவருடைய பேச்சை விரும்பி கேட்கும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் நித்யானந்தாவின் இறப்பு வெறும் நாடகமென்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர். அதற்கு காரணம், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும், குறிப்பாக, கைலாசா நாடு அமைந்திருப்பதாக கூறப்படும் தென் அமெரிக்காவின் பொலிவியா நாட்டிலுள்ள, பழங்குடியினருக்கு சொந்தமான மிகப்பெரிய இடத்தை வாங்க முயற்சித்ததாக அவர்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஜீவ சமாதி அடைந்துவிட்டதாக கூறப்பட்ட நித்யானந்தா நேரலையில் தோன்றி விளக்கம்
பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிற அமேசான் காடுகளுக்கு மத்தியில் அங்குள்ள பூர்வகுடிகள் மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிற இடத்திற்குச் சென்று சுமார் 4.8 ஹெக்டேர் என்ற மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இடத்தை, கைலாசா நாடு அமைக்க எழுதி தருமாறு நித்யானந்தா சார்பில் கேட்கப்பட்டதாகவும், மேலும் அங்குள்ளவர்களுக்கு மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி பழங்குடியினரை ஏமாற்றி கையெழுத்து வாங்கியதாகவும், அங்குள்ள அரசாங்கத்திற்கு அது தெரியவர, அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்கவே, நித்யானந்தா ஜீவ சமாதி என்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. மற்றொருபுறம், இன்றைய நிலவரப்படி, உலகின் பல்வேறு இடங்களில் நித்யானந்தாவிற்கு சொந்தமான சுமார் 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கவே இந்த நாடகம் என்றும் கூறப்பட்டது. ஆனால் எப்போதும்போல தான் இறந்துவிட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய் எனவும், தான் நலமுடன், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் நேரலையில் பேசியுள்ளார் நித்யானந்தா. மேலும் தன்னுடைய எதிரிகளும் எதிர்ப்பாளர்களும் தனது நேரத்தை வீணடிப்பதாகவும், தான் இன்னும் 15 வருடங்கள் உயிரோடு இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
