
சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஷ்மிதா. இவர் சொந்தமாக மேக்கப் அகாடமி வைத்து நடத்திவருவதுடன், வெளிநாடுகளுக்கும் சென்று திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு மேக்கப் செய்துவருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டிலுள்ள மேக்கப் ஆர்ட்டிஸ்டுகளில் காஸ்ட்லியானவர்களில் ஒருவர் என்று சொல்லப்படுகிறார். இவருடைய கணவர் விஷ்ணுகுமார். இவரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசி வீடியோக்கள் பதிவிடுவது, இன்ஸ்டா பிரபலங்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவது, தவெக கட்சிக்கு ஆதரவாக பேசுவது என சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது நண்பனின் சகோதரிக்கு பாலியல் ரீதியில் வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதுடன் அவரை நேரில் பார்க்க சென்றபோது நான்கைந்து இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து விஷ்ணுவை புரட்டியெடுத்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தன்னை அடித்து மிரட்டி அவ்வாறு பேசவைத்ததாக விஷ்ணுகுமார் விளக்கமளித்து இருந்தாலும் ஏற்கனவே அவர் ஆன்லைன் டிரேடிங் மோசடியில் சிக்கியிருந்ததால் அதை திசைதிருப்பவே இந்த நாடகம் என்று சொல்லப்படுகிறது. யார் இந்த அஷ்மிதா - விஷ்ணு தம்பதி? சமூக ஊடகங்களில் பரவும் வைரல் வீடியோவின் பின்னணி என்ன? பார்க்கலாம்.
யார் இந்த அஷ்மிதா - விஷ்ணு?
சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஷ்மிதா குடும்ப சூழ்நிலை காரணமாக 10ஆம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார். அதன்பிறகு படிப்படியாக முன்னேறி தனியார் தொலைக்காட்சியில் வி.ஜேவாக வேலைசெய்தார். ஆனால் பள்ளிபருவத்திலிருந்தே மேக்கப்மீது இருந்த ஆர்வத்தால் 18 வயதிலிருந்தே தனக்கு தெரிந்தவர்கள் மற்றும் தோழிகளுக்கு மேக்கப் போட்டு பயிற்சி எடுத்துக்கொண்ட இவர், 2017ஆம் ஆண்டு முறைப்படி படித்து தன்னை பியூட்டீஷியனாக உருவாக்கிக்கொண்டார். அதன்பிறகு அஷ்மிதா அகாடமி என்ற பெயரில் மேக்கப் வகுப்புகளையும் எடுத்துவருகிறார். அதுபோக அழகுசாதன பொருட்களையும் விற்பனை செய்துவருகிறார். தனது சொந்த முயற்சி மற்றும் கடின உழைப்பால் மட்டுமே தான் வளர்ந்திருப்பதாக கூறும் அஷ்மிதா ஏற்கனவே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்தாலும், கடந்த வருடத்தில் தனது தங்கையின் பெயரில் வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தினார். குடும்பத்தின்மீது இவருக்கு இருக்கும் பாசத்தை பார்த்து நிறைய யூடியூப் சேனல்கள் இவரிடம் பேட்டியெடுத்தன. அப்போதுதான் அவருடைய கணவர் விஷ்ணுகுமாரும் மீண்டும் டிரெண்டாக ஆரம்பித்தார். இவர்கள் இருவரும் ஒரு ஆல்பம் பாடலில் சேர்ந்து நடித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அஷ்மிதா தனது கெரியரில் அடுத்தடுத்து முன்னேறி வளர்ச்சியடைந்துகொண்டே போன காலகட்டத்தில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சட்டபடி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதுகுறித்து விஷ்ணு தனது சமூக ஊடகங்களில் வெளிப்படையாகவே பதிவிட்டார். இவருடைய நடத்தை சரியில்லாததால்தான் அஷ்மிதா இவரை பிரிந்துசென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஒருசில மாதங்களுக்கு பிறகு இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்து மீண்டும் ஒன்றுசேர்ந்த நேரத்தில், ஒரு ஆல்பம் பாடல் வீடியோவும் வெளியானது. அந்த பாடலுக்கு புரமோஷன் செய்யத்தான் விவாகரத்து நாடகமாடியதாக இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
விவாகரத்து பெற்று மீண்டும் சேர்ந்த அஷ்மிதா - விஷ்ணு தம்பதி
இருந்தாலும் பிரிந்திருந்தபோதுதான் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதாகவும், தங்களை பற்றியும் புரிந்துகொண்டதாகவும் கூறியதோடு, ஏன் இன்னொரு வாய்ப்பை கொடுக்கக்கூடாது? என்று யோசித்ததால்தான் மீண்டும் சேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையும் கர்ப்பமாக இருக்கிறார் அஷ்மிதா. அஷ்மிதா தனது மேக் ஓவர் பிஸினஸில் கவனம் செலுத்திவந்த நிலையில், விஷ்ணுவும் இன்ஸ்டா பிரபலங்களுடன் இணைந்து நடனம் ஆடுதல், ஆல்பம் பாடல்களை வெளியிடுதல் என்று இருந்தாலும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருடைய கட்சிக்கு ஆதரவாகவும் பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு குமார் ஃபோரெக்ஸ் என்ற ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து தற்போது தனது நண்பனின் சகோதரிக்கு தவறாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறி தர்ம அடி வாங்கிய வீடியோ இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
வெளியான வீடியோ - சிக்கிய ஆணுறை
இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்களுடன் வலம்வந்த விஷ்ணு, கல்லூரிக்கு செல்லும் தனது நண்பனின் சகோதரியிடம் பாலியல் குறுஞ்செய்தி அனுப்பி அத்துமீறியதுடன், அந்த பெண்ணின் புகைப்படத்தையே அனுப்பி, உன்னை தங்கையாக பார்க்க முடியவில்லை என்றும் மெசேஜ் செய்துள்ளார். இதுதான் அவரை தற்போது மிகப்பெரிய சிக்கலில் சிக்க வைத்திருக்கிறது. திருமணமாகி மூன்றாவது குழந்தை பிறக்கவிருக்கும் நிலையில், இளம்பெண்ணுக்கு தவறாக செய்தி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் அவரை பார்க்க வீட்டிற்கே வருவதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அந்த பெண் தனது அண்ணனிடம் கூற, அவர் நான்கைந்து நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணுவின் அலுவலகத்திற்கே சென்று அடித்து தாக்கியதுடன், அந்த மெசேஜையும் படித்து காட்டி, மன்னிப்பும் கேட்க வைத்திருக்கின்றனர். மேலும் யூடியூப் சேனல் அலுவலகத்தில் ஆணுறைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அதையும் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் இணையங்களில் வெளியிட அதுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் தன்னை மிரட்டி அவ்வாறு பேசவைத்ததாகவும், நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டதால் தனது குடும்பத்தின் பெயரை காப்பாற்றத்தான் அவர்கள் தன் மீது வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் விஷ்ணு விளக்கமளித்திருக்கிறார். மேலும் தனது இன்ஸ்டாகிராமை ஹேக் செய்து அவர்கள் இவ்வாறு செய்துவிட்டதால் 4 பேர் மீதும் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ஆணுறை எதற்கு? என அந்த வீடியோவில் எழுப்பப்பட்ட கேள்வியையே சுட்டிக்காட்டி, விஷ்ணு இதுபோன்று பல பெண்களிடம் தவறாக பேசியிருப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.
கல்லூரி பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மாட்டிய விஷ்ணுகுமார்
விஷ்ணு உண்மையில் விஜய் கட்சியை சேர்ந்தவரா?
இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பே forex டிரேடிங் நிறுவனத்தின்கீழ் பல பேரிடம் மோசடி செய்து கோடிக்கணக்கில் விஷ்ணுகுமார் பணத்தை ஏமாற்றி இருப்பதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாதிக்கப்பட்ட ஒருசிலர் இதுகுறித்து ஆடியோ வெளியிடுவது, வீடியோக்களில் பேசுவது என்று விஷ்ணுகுமார் குறித்து வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, வீட்டிற்கு தெரியாமல் பணத்தை சேமிக்க நினைத்த பெண்களை குறிவைத்துதான் விஷ்ணு குமார் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும், பணம் கொடுத்த பெண்களுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் வைத்து பார்த்தால் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விஷ்ணு குமார் குறித்து செய்திகள் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அதுகுறித்து குடும்பத்தாரிடம் தெரிவித்தால் அவர்களும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று வீட்டாரிடையே பிரச்சினை எழும் என்பதாலேயே பலர் இதுகுறித்து தைரியமாக பேச தயங்குவார்கள் என்று திட்டமிட்டே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோவை எடுத்ததே அஷ்மிதாதான் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அடுத்தடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் விஷ்ணு குமார் தன்னை நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன் என்று சொல்லிக்கொள்வதோடு அவருடைய கட்சிக்கும் ஆதரவாக பேசிவருவதால், பலரும் அவரை தவெக கட்சியின் நிர்வாகி என்றே குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் விஜய் தனது தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை ‘வெர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்று குறிப்பிட்டிருப்பதால் விஷ்ணுவும் தன்னை அப்படியே குறிப்பிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் கட்சி நிர்வாகிகள் கஞ்சா மற்றும் பாலியல் அத்துமீறல் பிரச்சினைகளில் சிக்கியதால் அவர்களை கட்சி பதவிகளிலிருந்து அதிரடியாக நீக்கினார் விஜய். இந்நிலையில் விஷ்ணு குமாரும் அந்த வரிசையில் இணைந்திருப்பதாக கூறப்பட்டாலும், இவர் தவெகவுக்கு ஆதரவாக பேசுகிறாரே தவிர கட்சி நிர்வாகி அல்ல என்று விளக்கமளித்து வருகின்றனர் தவெகவை சேர்ந்தவர்கள்.
விஜய் கட்சிக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிடும் விஷ்ணு குமார்
விஷ்ணுவின் வீடியோவை வெளியிட்டதே அஷ்மிதாதான்!
இந்த சூழலில் விஷ்ணுவின் வீடியோவை வெளியிட்டதே அஷ்மிதாதான் என்று வீடியோவை எடுத்த 4 பேரும் கூறியுள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தாங்கள் வீடியோ எடுத்த அன்று, அஷ்மிதாவுக்கு ஃபோன் செய்து விஷ்ணு குறித்து குற்றம்சாட்டியதாகவும், அன்று இரவே தங்கள் வீட்டுக்கு வந்த அஷ்மிதா, வீடியோவை தன்னிடம் கொடுத்துவிடுமாறும், விஷ்ணுவை தான் பார்த்து கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான அஷ்மிதா வேண்டி கேட்டுக்கொண்டதால் மட்டுமே வீடியோவை அவரிடம் கொடுத்ததாக கூறியுள்ள அவர்கள், தற்போது அஷ்மிதாவே வீடியோவை வெளியிட்டுவிட்டு அமைதியாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் நாங்கள் அந்த வீடியோவை மிரட்டி எடுத்ததாக விஷ்ணு புகார் அளித்துள்ளதையடுத்து, 4 பேரும் காவல் நிலையம் செல்ல இருப்பதால், நீங்களும் எங்களுடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று அஷ்மிதாவிடம் கேட்டதாகவும், அவர் வர மறுத்துவிட்டதாகவும் தெரித்துள்ளனர். "உடனடியாக தன்னால் ரியாக்ட் செய்ய முடியாது என்றும், கால அவகாசம் வேண்டும் என்றும், தான் சேர்த்து வைத்திருக்கும் பிராண்டு நேம் கெட்டுவிடக் கூடாது என்றும்" அஷ்மிதா தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே அஷ்மிதா வெளியே வந்து வாய் திறந்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே வழக்கை கையிலெடுத்திருக்கும் போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதால் இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
