இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘Metoo' என்ற இயக்கம் மிகவும் ட்ரெண்டானது. ஹாலிவுட் தொடங்கி பல மொழி நடிகைகள் உட்பட பல்வேறு துறைகளில் வேலைபார்க்கும் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்களை புகார்களாக சமூக ஊடகங்கள்மூலம் வெளிக்கொண்டுவந்தனர். அதனைத்தொடர்ந்து ஆண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகளை வெளிக்கொண்டுவர ‘Mentoo’ என்ற இயக்கத்தைத் தொடங்கினர் பாலிவுட் நடிகர் கரண் ஓபராயின் நண்பர்கள். அதாவது Metoo-வை தவறாக பயன்படுத்தி ஆண்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பெண்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் ‘Mentoo’ இயக்கத்தின் நோக்கமே. இப்படி உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் தற்போது மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதற்கு காரணம், அதுல் சுபாஷ் என்ற ஒரு நபர்தான். பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியரான இவருடைய மரணம்தான் தற்போது நாட்டையே உலுக்கியிருக்கிறது. இறப்பதற்கு முன்பு இவர் விட்டுச்சென்ற ‘justice is due' என்ற வாசகம்தான் நீதிக்கு எதிராக நாட்டிலுள்ள மொத்த ஆண்களின் கோபத்தையும் எழுப்பியிருக்கிறது.

நாட்டையே உலுக்கிய அதுல் சுபாஷ் மரணம்

பெங்களூருவிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றியவர் 34 வயதான அதுல் சுபாஷ். இவர் ஜான்பூரைச் சேர்ந்த நிகிதா சிங்கானியா என்ற பெண்ணை காதலித்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் இந்த தம்பதியருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். மாதம் ரூ.84 ஆயிரம் சம்பளம் வாங்கும் சுபாஷிடமிருந்து ரூ. 3 கோடி பணம் தருமாறு வற்புறுத்தியதுடன், சுபாஷ் மீது கொலை முயற்சி, பாலியல் துஷ்பிரயோகம், பணத்திற்காக துன்புறுத்தல், குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை உள்ளிட்ட 9 பொய் வழக்குகளை தொடுத்திருக்கிறார் நிகிதா. மேலும் தனது மகனின் பராமரிப்புக்காக மாதந்தோறும் லட்சங்களில் பணம் வேண்டுமென்றும் கேட்டுள்ளார். மேலும் சுபாஷின் குடும்பத்தார் மீதும் வழக்கு தொடுத்திருக்கிறார் நிகிதா. இந்நிலையில் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த அதுல் இதுகுறித்து தனது நண்பர்களிடம் விவாதித்திருக்கிறார். ஒருகட்டத்தில் தீவிர மன உளைச்சலில் இருந்த அதுல், பெங்களூருவிலுள்ள மஞ்சுநாத் லேஅவுட்டில் டிசம்பர் 9 அன்று தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளிக்கவே அங்கு சென்ற போலீசார், அதுலின் சடலத்தை மீட்டதுடன், அதுல் தனது கைப்பட எழுதிய 24 பக்க மரண குறிப்பை கைப்பற்றினர். மேலும் தனது மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தார் தன்மீது போட்ட பொய் வழக்குகள் குறித்தும், அதற்கு உத்தரபிரதேச நீதிபதி உட்பட யார்யாரெல்லாம் லஞ்சம் வாங்கிகொண்டு நீதியை தனக்கு எதிராக திசைதிருப்பினர் என்பது குறித்தும், தன்மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற ரூ. 3 கோடி கேட்டதாகவும், தனது மகனை பார்க்கவேண்டுமென்றால் 30 லட்ச ரூபாய் தரவேண்டுமென்று மனைவி கூறியதாகவும் 80 நிமிட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டோனால்டு ட்ரம்ப் ஆகியோரை டேக் செய்து இந்தியாவில் நீதி ஆண்களுக்கு எதிராக இருக்கிறது என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.


உயிரை மாய்த்துக்கொண்ட அதுல் சுபாஷ் - அவருடைய மனைவி நிகிதா சிங்கானியா

தனது மனைவிக்கு வழங்கவேண்டிய ஜீவனாம்சம் குறித்து மேல்முறையீடு செய்தும் எந்த பலனும் அளிக்காததால் ‘Justice is Due' என குறிப்பிட்டு இந்த ஆவணங்களை பதிவுசெய்த அதுல், இந்த வழக்கை கர்நாடகா நீதிமன்றத்துக்கு மாற்றுமாறும், அங்கும் தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தனது அஸ்தியை நீதிமன்ற வளாகத்திலிருக்கும் சாக்கடையில் கரைத்து விடுமாறும் அந்த குறிப்பில் தெளிவாக எழுதியுள்ளார். அதுல் கடைசியாக எழுதிய மரணக்குறிப்பில், “என் மனைவி என்மீது 9 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார். அதில் 6, கீழமை நீதிமன்றத்திலும், 3 உயர் நீதிமன்றத்திலும் இருக்கின்றன. நான் சம்பாதிக்கும் பணம் என் எதிரிகளை பலப்படுத்துகிறது. எனவே என் வாழ்க்கையை நான் முடித்துக்கொள்வது நல்லது. நான் அவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டுமென்று போராடுகின்றனர். ஆனால் அந்த பணத்தை என்னை அழிக்கவே பயன்படுத்துகின்றனர். இது ஒரு சுழற்சியாக நடந்துகொண்டிருக்கிறது. என் மனைவியும் ஐடி ஊழியர்தான். அவரும் சம்பாதிக்கிறார். இருந்தாலும் என்னிடமிருந்து மாதம் ரூ.40 ஆயிரத்தை பெறுகிறார். இதுவும் போதாது என்று என் மகனை பராமரிக்க ரூ. 40 லட்சம் மாதம் தரவேண்டும் என்கிறார். அப்படி தராவிட்டால் மகனை பார்க்க அனுமதிக்க முடியாது என்கிறார். உத்தர பிரதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகூட எனக்கு சாதகமாக நீதி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சமாக தரச்சொல்லி கேட்கிறார். இதை நீங்கள் பார்க்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். என்னுடைய வழக்கை கர்நாடகா நீதிமன்றத்துக்கு மாற்றிவிடுங்கள்” என்று எழுதியுள்ளார். மேலும் தனது மகனை தன் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறியதுடன், தனது மனைவியுடன் வளர்ந்தால் அதே புத்தி தனது மகனுக்கும் வந்துவிடும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


அதுல் சுபாஷ் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட நிகிதா மற்றும் அவருடைய குடும்பத்தினர்

செய்தியாளர்களையே மிரட்டிய குடும்பம்

அதுலின் மரணக்குறிப்பு மற்றும் ஆவணங்களை கைப்பற்றிய பெங்களூரு போலீசார் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனது அண்ணனின் மரணம் குறித்து பேசிய அதுலின் சகோதரர் பிகாஸ் குமார், நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா, அவருடைய சகோதரர் அனுராக் சிங்கானியா மற்றும் அவரது மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர் மீது பெங்களூரு காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், குற்றச்செயலில் ஈடுபடுதல் ஆகிய 2 பிரிவுகளின்கீழ் அவர்கள்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் நிகிதாவின் குடும்பத்தாரிடம் தொடர்புகொள்ள முற்பட்டபோது அவர்கள் செய்தியாளர்களையே மிரட்டிய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அனுராக்கும், நிஷாவும் பால்கனியில் நின்றுகொண்டு செய்தியாளர்களிடம் கேமிராவை ஆஃப் செய்யுமாறு கட்டளையிட்டதுடன், அங்கிருந்து கூச்சலிட்டு கத்தியுள்ளனர். மேலும் உங்களுடைய கேள்விகளுக்கு நாங்களே வந்து பதிலளிப்போம், நீங்கள் இப்படி நடந்துகொண்டால் அது தவறாகிவிடும். எங்களுடைய வழக்கறிஞர் இல்லாமல் இதுகுறித்து பேசமாட்டோம் என்று கூறி மறுத்துவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவர்களிடம் அதிர்ச்சியோ துக்கமோ இல்லை. ஆனால் நிருபர்களை தாக்க முற்பட்டதுடன், தங்களுடைய திமிர்த்தனத்தைக் காட்டுகின்றனர் என்று கூறிவருகின்றனர். மேலும் நாட்டில் பெண்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படும் நீதியால் ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்தி ‘Mentoo’ என்ற இயக்கத்தை மீண்டும் பயன்படுத்தி தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு, ஆண்களுக்கும் உரிமை தேவைப்படுகிறது என்று கூறிவருகின்றனர்.


ஜீவனாம்சத்தை தீர்மானிக்க கவனத்தில் கொள்ளவேண்டியவை குறித்து இந்திய சட்டம்

498ஏ பிரிவு என்ன சொல்கிறது?

மனைவியின் துன்புறுத்தலால் ஒரு ஆண் தனக்கு நீதி கிடைக்கவேண்டுமென்று கூறி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய தகுதிக்கு அதிகமாக ஜீவனாம்சம் கேட்டு மனைவி தொடுத்த பொய் வழக்குகளால் மன உளைச்சலுக்கு ஆளானதால்தான் அதுல் சுபாஷ் இப்படியொரு தவறான முடிவை எடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்திய சட்டப்பிரிவு 498ஏ என்ன சொல்கிறது? என்பதை நாம் பார்க்கவேண்டும். ஒருவருக்கு ஜீவனாம்சம் குறித்து முடிவு செய்யும்போது எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற 8 காரணிகளை உச்ச நீதிமன்றம் வரையறுக்கிறது. அதன்படி, விவாகரத்து பெறும் இருதரப்பினரின் பொருளாதாரம் மற்றும் சமூக நிலை, மனைவி மற்றும் குழந்தைகளின் நியாயமான தேவைகள், கணவருடைய வருமானம், சொத்துமதிப்பு, பராமரிப்பு கடமைகள் மற்றும் பொறுப்புகள், திருமணமான பிறகு மனைவியின் வாழ்க்கைத்தரம், விண்ணப்பதாரருக்கு (பெண்) சொந்தமான வருமானம் அல்லது சொத்துகள், ஒருவேளை குடும்ப பொறுப்புகளுக்காக (பெண்) வேலையை தியாகம் செய்திருத்தல், வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால் அவருக்கு நியாயமான செலவுகள், இருவருடைய தனிப்பட தகுதி மற்றும் வேலைகள் போன்றவற்றை கருத்தில்கொண்டுதான் ஜீவனாம்ச தொகையை தீர்மானிக்கவேண்டும். இருப்பினும் இதை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது, வேறுசில முக்கிய காரணிகள் இருப்பின் அதையும் கருத்தில்கொள்வது அவசியம் என்று வலியுறுத்துகிறது. குறிப்பாக, மனைவிக்கு வழங்கும் ஜீவனாம்ச தொகை கணவருக்கு அபராதமாக விதிக்கப்படக்கூடாது என்கிறது. ஆனால் அதுல் சுபாஷின் வழக்கில் விதிமீறல்கள் நடந்திருப்பது தெளிவாகியுள்ளது. இந்த வழக்கில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆண் சமுதாயத்தின் கோரிக்கையாக உள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Updated On 23 Dec 2024 5:24 PM IST
ராணி

ராணி

Next Story