வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். குறிப்பாக, இந்தியாவை பொருத்தவரை கேரளாவைச் சேர்ந்த பலர் அரபு நாடுகளில் அதிகம் வேலைசெய்து வருகின்றனர். அங்கு நிரந்தர குடியிருப்பு பெற்று பலர் வசித்துவந்தாலும் வேலைநிமித்தமாக மட்டுமே அங்கு சென்று பணிபுரிவோரின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கிறது. அப்படி வேலைநிமித்தமாக ஏமன் நாட்டிற்குச் சென்று பணிபுரிந்துவந்தவர்தான் கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா. அந்த நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்ற சமயத்தில் பலர் இந்தியாவிற்கு திரும்பிய நிலையில், ஒருசிலர் அங்கேயே இருக்க முடிவெடுத்தனர். அதில் நிமிஷாவும் ஒருவர். அங்கு தவறுதலாக ஒரு சிக்கலில் மாட்ட, 2020ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு அவருக்கு மரண தண்டனை விதித்தது. அவரை தண்டனையிலிருந்து தப்புவிக்க இந்திய அரசு முயற்சிக்கவேண்டுமென பலதரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்த நிலையில், தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இந்தியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தன. இந்நிலையில் அந்த தகவல் உண்மையா? பொய்யா? என்பது குறித்து வெளிநாட்டு தூதரகம் விளக்கமளித்திருக்கிறது. யார் இந்த நிமிஷா பிரியா? மரண தண்டனை விதிக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன? தண்டனையிலிருந்து தப்பிக்க என்ன வழி? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த நிமிஷா பிரியா?
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. தினக் கூலித் தொழிலாளர்களின் மகளான இவர் நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஒருசில ஆண்டுகள் பணிபுரிந்த நிமிஷாவுக்கு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துவைத்தனர் அவருடைய பெற்றோர். கணவன் - மனைவி இருவருமே ஏமன் நாட்டில் வேலைசெய்துவந்த நிலையில், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 2014ஆம் ஆண்டு அந்த நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடியின் காரணத்தால் டாமி தாமஸும், மகளும் கேரளாவிற்கு திரும்பிவர, நிமிஷா மட்டும் அங்கேயே தங்கி வேலைசெய்வது என முடிவெடுத்தார். அங்கு பொருளாதார நெருக்கடி அதிகரிக்கத் தொடங்கியபோது நிமிஷா தனக்கு தெரிந்த மருத்துவத் தொழிலையே அங்கு சொந்தமாக தொடங்கலாம் என நினைத்திருக்கிறார். அப்போதுதான் அந்த நாட்டின் சட்டதிட்டங்களின்படி, அங்கு எந்தவொரு தொழிலை தொடங்கவேண்டுமென்றாலும் அந்நாட்டு குடிமகனின் பெயரில்தான் இருக்கவேண்டும் என்பது தெரியவந்திருக்கிறது. அப்போதுதான் நிமிஷாவுக்கு ஏமன் நாட்டு குடிமகனான தலால் அப்தோ மெஹ்டி என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவருடன் சேர்ந்து அங்கு ஒரு க்ளினிக்கை நிறுவியுள்ளார். மெஹ்டி பார்ட்னர்தான் என்றாலும் இது நிமிஷாவின் ஐடியா என்பதால், நிமிஷா அதில் அதிக தொகையை முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே ஏமன் நாட்டில் உள்நாட்டு கலவரம் அதிகரிக்கத் தொடங்குகிறது. 2015ஆம் ஆண்டு அங்குள்ள இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியா, கிட்டத்தட்ட 4000 பேரை அழைத்துவந்தது. அதில் பெரும்பாலானோர் செவிலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில்தான் நிமிஷாவின் பிசினஸில் ஓரளவு முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கவே, சூழ்நிலையை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்து, அங்கேயே தங்க முடிவெடுத்திருக்கிறார் நிமிஷா.
டாமி தாமஸ் - நிமிஷா பிரியா திருமண புகைப்படம்
எதிர்பாராமல் நடந்த கொலை
தங்களுடைய க்ளினிக்கில் மருத்துவர்கள் முதல் அனைத்துவித ஊழியர்களையும் வேலைக்கு அமர்த்தி, பிசினஸ் ஓரளவு நன்றாக போக ஆரம்பித்ததும்தான் மெஹ்டியின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது. கொஞ்சம் முதலீடு செய்த மெஹ்டி வருமானத்தில் அனைத்தையும் தன்வசப்படுத்த நினைத்து, பல ஆவணங்களில் நிமிஷாவிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார். ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இல்லாததால், அந்த நாட்டு மொழியும் தெரியாததால் கண்மூடித்தனமாக அவற்றில் கையெழுத்து போட்டிருக்கிறார் நிமிஷா. அவற்றை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மெஹ்டி, நிமிஷாவை தான் திருமணம் செய்துகொண்டதாக போலி ஆவணங்களை உருவாக்கி, இருவரும் கணவன் - மனைவி என்று கூறி வருமானம் முழுவதையும் தனது வங்கிக்கணக்கிலேயே வரவைத்திருக்கிறார். ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பதால் நிமிஷாவுக்கு சேரவேண்டிய தொகையையும் தானே எடுத்திருக்கிறார். இதனால் நிமிஷாவிற்கும் மெஹ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட உடல் மற்றும் உளவியல்ரீதியாக நிமிஷாவுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியிருக்கிறார் மெஹ்டி. நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் எடுத்து மறைத்துவைத்துள்ளார். மேலும் அவருக்கு போதைப் பொருட்களையும் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த நிமிஷா, ஒரு கட்டத்தில் ஏமன் தலைநகர் சனாவிலிருக்கும் காவல் நிலையத்தில் மெஹ்டிமீது புகாரளித்திருக்கிறார். ஆனால் அங்கு பெரும்பாலும் உள்நாட்டு மொழியே வழக்கத்தில் இருந்ததால் நிமிஷா மீது தவறு உள்ளதாக சித்தரிக்கப்பட்டு 6 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இப்படி கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், 2017ஆம் ஆண்டு காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன் மெஹ்டிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார் நிமிஷா. அதன்படி, மெஹ்டியின் வீட்டிற்குச் சென்று, அங்கு மயக்க ஊசியை செலுத்தியுள்ளார். ஆனால் அது ஓவர்டோஸ் ஆகவே, துரதிர்ஷ்டவசமாக மெஹ்டி உயிரிழந்தார். இதனிடையே தனது பாஸ்போர்ட்டை எடுத்த நிமிஷா, அங்கிருந்து தப்பி இந்தியா வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் அங்கு கடும் போர் நிலவிய காரணத்தால், சவுதி அரேபியா வழியாக வர முயற்சித்தபோது, அங்கு சவுதி - ஏமன் எல்லையில் வைத்து நிமிஷா கைதுசெய்யப்பட்டார். அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கடைசியில் 2020ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.
நிமிஷாவால் கொலை செய்யப்பட்ட தலால் அப்தோ மெஹ்டி
செல்லுபடி ஆகாத மேல் முறையீடு
நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கொலை நடந்ததாகவும், அவரை மீட்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் இறங்கவேண்டுமெனவும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்தன. இதனிடையே நிமிஷா சார்பில் மேல் முறையீடும் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம். இந்நிலையில் இந்தியா சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தனது மகளை மீட்க, தானே ஏமன் நாட்டிற்குச் செல்வது என முடிவெடுத்தார் நிமிஷாவின் தாய் பிரேமா குமாரி (57). அங்கு தொடர்ந்துவந்த உள்நாட்டு கலவரத்தை கருத்தில்கொண்டு இந்தியாவில் அனுமதி அளிக்கப்படாததால் அவர், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். அங்கு அவருக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட, ஏமனுக்குச் சென்றார் குமாரி. ஏமனில் வசித்துவரும் இந்தியரான சாமுவேல் ஜெரோம் என்பவரின் உதவியுடன் ஏமன் நாட்டு உச்சநீதிமன்றத்தில் தனது மகளின் மரண தண்டனையை நிறுத்தக்கோரி மேல் முறையீடு செய்தார். அதேநேரத்தில் நிமிஷாவை காப்பாற்றக்கோரி save Nimisha International Counsil என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஆதரவு திரட்டப்பட்டன. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் தனது மகளை சந்தித்தார் குமாரி.
நிமிஷாவை தண்டனையிலிருந்து காப்பாற்ற போராடும் அவருடைய தாய் குமாரி
ஷரியா சட்டத்தின் மூலம் மீட்கப்படுவாரா?
ஏமன் நாட்டு சட்டத்தின்படி இழப்பை சந்தித்த குடும்பத்தினர் இழப்பீடு பெற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்கினால் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பிக்க முடியும் என்பது ஏமனில் பின்பற்றப்படும் ஒரு வழக்கம். தனது மகள் வேண்டுமென்றே இந்த கொலையை செய்யவில்லை என்பதை மெஹ்டியின் குடும்பத்திற்கு தெரியப்படுத்த குமாரி பலரின் உதவியையும் நாடினார். மெஹ்டி குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் கேட்கும் தொகையை இழப்பீடாக வழங்கினால் நிமிஷாவை மன்னிக்கத் தயார் என்று அவர்கள் கூற, அதுகுறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்துவந்தது. அங்குள்ள பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதாலும், அங்கு நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்குகள் அனைத்துமே உள்ளூர் மொழியில்தான் நடக்கும் என்பதாலும் நிமிஷா தரப்பு மிகப்பெரிய வழக்கறிஞர் ஒருவரின் உதவியை நாடியிருக்கிறது. அவர் இந்த வழக்கில் ஜெயிக்க வேண்டுமானால் 40000 டாலர் கட்டணமாக கொடுக்கவேண்டுமென கேட்டிருக்கிறார். நிமிஷாவின் குடும்பம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதை புரிந்துகொண்டு கட்டணத்தை இரண்டு தவணைகளாக பெற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறார். முதல் தவணையாக 20,000 டாலர் பெற்றுக்கொண்ட அவர், மெஹ்டியின் குடும்பத்தாரிடம்பேசி மன்னிப்பு வரை கொண்டு சென்றுள்ளார். ஆனால் இரண்டாம் தவணையை செலுத்தமுடியாத சூழலில் நிமிஷா தரப்பு இருப்பதை புரிந்துகொண்ட அவர், வழக்கை தொடரவேண்டுமானால் பணத்தை கொடுக்கவேண்டுமென கறாராக கூறிவிட, இதனிடையே நிமிஷாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக செய்திகள் பரவத் தொடங்கின. இப்படி கடந்த சில நாட்களாக இந்த பிரச்சினை ஊடகங்களை மீண்டும் ஆக்கிரமித்திருக்கின்றன. நிமிஷாவின் மரண தண்டனையை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் விளக்கமளித்திருக்கிறார். அதில் நிமிஷா பிரியாவிற்கு அந்நாட்டு அதிபர் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை எனவும், அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதேசமயம் தற்போது ஏமன் நாட்டின் அதிகாரங்கள் ஹௌதியின் கையில் இருப்பதால் அந்நாட்டு ஷரியா சட்டப்படி மெஹ்டியின் குடும்பம் ரத்தத்திற்கு பதில் ரொக்கம் என்ற ‘தியா’ தொகையை (Blood Money) பெற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்கினால் மட்டுமே நிமிஷாவை காப்பாற்றமுடியும். பல வருடங்களாக அங்கு தங்கி தனது மகளுக்காக போராடிவரும் ஒரு தாயின் பாசப்போராட்டத்திற்கு பலன் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நிமிஷா ஆதரவாளர்கள்.