இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

போலி அரசு அதிகாரிகள், போலி போலீஸ், போலி கலெக்டர் என பலவற்றை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் குஜராத்தில் 5 வருடங்களாக ஒரு நபர் போலி நீதிமன்றத்தையே நடத்தி தீர்ப்பு வழங்கிவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குஜராத்தில் போலி அரசு அலுவலகம், போலி மருத்துவமனை மற்றும் போலி சுங்கச்சாவடி செயல்பட்டதைத் தொடர்ந்து போலி நீதிமன்றமும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர் தனது அலுவலகத்தையே நீதிமன்றம் செட்டப்பில் மாற்றியமைத்து, அதில் தனது ஊழியர்களையே வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களாக மாற்றி வழக்குகளை எடுத்து நடத்திவந்துள்ளார். மேலும் தனது ஊழியர்களை வைத்து, பிரச்சினை இருப்பவர்களுக்கு உதவுவதைப் போன்று நடித்து யார் தனக்கு அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார். குறிப்பாக, நில மோசடி வழக்குகளை எடுத்து விசாரித்துவந்த மோரிஸ், 2019ஆம் ஆண்டு இதுபோன்றதொரு வழக்கில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அந்த வழக்கு தற்போது அகமதாபாத் குடிமையியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, மொத்த விவரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

5 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த போலி நீதிமன்றம்

குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன். 37 வயதான இவர் தனது அலுவலகத்தையே நீதிமன்றம் போன்று மாற்றியமைத்து, வெளியே சிட்டி சிவில் நீதிமன்றம் என போர்டும் வைத்து, அதில் தானே நீதிபதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக, நிலப் பிரச்சினை தொடர்பான வழக்குகளை எடுத்து விசாரணையும் நடத்தியுள்ளார். சிவில் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் நிலப் பிரச்சினை தொடர்பான வழக்கு விவரங்களை சேகரித்து, இருதரப்பு நபர்களிடமும் தனது ஊழியர்களை வைத்து தொடர்புகொண்டு, அவர்களுடைய வழக்கின் விசாரணை, தனது நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். அதை நம்பி, மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது மோரிஸ் நீதிபதி போன்றும், அவருடைய ஊழியர்கள் வழக்கறிஞர்கள், டவாலி போன்ற கெட்டப்களிலும் ஆஜராகியுள்ளனர். இதை பார்த்த மக்கள் அது உண்மையான நீதிமன்றம் என்று நினைத்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர். இவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்கள் தரப்பில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியே 5 ஆண்டுகள் தனது ஆட்களை வைத்தே ஒரு நீதிமன்றத்தையே நடத்தி வந்துள்ளார் மோரிஸ். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு தீர்ப்பாயம் இது என்று மக்களிடம் கூறியதாலும், இங்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டதாலும் நிறையப்பேர் இவர்களை தேடிவந்துள்ளனர். இப்படி இந்த நீதிமன்றத்தில் பல வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் பாபுஜி என்பவரின் வழக்கில் உத்தரவு பிறப்பித்த மோரிஸ் வசமாக சிக்கிக்கொண்டார்.


குஜராத்தில் செயல்பட்டுவந்த போலி நீதிமன்றத்தின் போலி நீதிபதி

போலி நீதிபதி சிக்கியது எப்படி?

காந்திநகரைச் சேர்ந்த பாபுஜி என்பவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பால்டி பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததுடன், அந்த நிலத்தை கையகப்படுத்தவும் எண்ணியிருக்கிறார். அந்த இடத்தில் பல ஆண்டுகளாக தான் குடியிருப்பதால் நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துதரவேண்டும் எனவும் கேட்டு மோரிஸின் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இதுகுறித்து அங்கு மனுதாக்கலும் செய்திருக்கிறார். பிறகு பாபுஜியிடம் தனிப்பட்ட முறையில் பேசி, பெரும் தொகையை பெற்றுக்கொண்ட மோரிஸ், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இந்த தீர்ப்பின் நகலை வைத்து எப்படியாவது தனது பெயரில் பட்டா வாங்கிவிடலாம் என்று நினைத்த பாபுஜி, அகமதாபாத் ஆட்சியர் அலுவலத்திற்குச் சென்று, தான் குடியிருக்கும் நிலத்தை பட்டா போட்டு தரவேண்டுமென்றும், அதற்கான நீதிமன்ற உத்தரவு நகலை சமர்பித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் மாவட்ட ஆட்சியரோ அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நீதிமன்ற தீர்ப்பு நகலை, மாவட்ட ஆட்சியரிடம் தான் கொடுத்த மனு நகலுடன் இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுதாக்கல் செய்திருக்கிறார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய் இதுகுறித்து போலீசில் புகாராளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் மோரிஸின் ஒட்டுமொத்த மோசடியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோரிஸ் சாமுவேல்மீது இந்திய சட்ட பிரிவுகளான 171 - அரசு அதிகாரி பதவியில் இருப்பதுபோல் நடித்தல் மற்றும் 419 - ஆள் மாறாட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மோரிஸ் நடத்திவந்த போலி நீதிமன்றமும் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தியதில், நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் நிலத் தகராறு வழக்குகள் குறித்து தெரிந்துகொண்டு, பின்னர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வு நீதிபதி என்று தன்னை அறிமுகம் செய்து, அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து பேசியுள்ளார். மேலும் தனது நீதிமன்ற செட்டப்பிற்குள் அவர்களை கூட்டிவந்து, தன்னுடைய ஊழியர்களையே வழக்கறிஞர்களாகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு வழக்கிற்கும் அதிக தொகை வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்கியதையும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.


பல்வேறு வழக்குகளில் உடனடி தீர்ப்பு வழங்கிய போலி நீதிபதி மோரிஸ்

கடந்த 5 ஆண்டுகளாக இதுபோல் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார்? எத்தனை வழக்குகளில் போலி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன? என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் உண்மையான நீதிமன்றங்களைப் போன்றே தீர்ப்பாணைகளை வழங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காத மோரிஸ் மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றி இருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போது போலி நீதிமன்றம் குறித்த விவரம் வெளிச்சத்திற்கு வர காரணமான பாபுஜியிடமிருந்து ரூ.30 லட்சத்தை பெற்றிருக்கிறார். ஓரே ஆண்டில் 500க்கும் மேற்பட்ட வழக்குகளை எடுத்து நடத்தி அவற்றில் தீர்ப்புகளையும் உடனடியாக வழங்கியிருக்கிறார். இதன்மூலம் பல கோடிகளை மோசடி செய்திருக்கிறார். ஏமாற்றிய பணத்தை வைத்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியிருக்கிறார். மேலும் அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொதுமக்களின் இடம் என சுமார் 100 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு மாற்றியிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

பொது ஊழியராக ஆள் மாறாட்டம் செய்தால் என்ன தண்டனை?

போலி வங்கி அதிகாரிகள், போலி ஐபிஎஸ், போலி கலெக்டர் என பலதரப்பட்ட ஏமாற்று நபர்கள் குறித்த செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, போலி மருத்துவமனை மற்றும் போலி அரசு அலுவலகம் நடத்துதல் போன்ற குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில் போலியாக நீதிமன்றமே உருவாக்கப்பட்டு, அதில் தீர்ப்புகளும் வழங்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு நபர் அரசு / பொது அதிகாரிபோன்று நாடகமாடி மக்களை ஏமாற்றினால் அதற்கு பெரும்பாலும் சிறைதண்டனைதான் விதிக்கப்படும். தவறான நோக்கத்துடன் அரசு ஊழியர்களின் ஆடைகளை அணிவது அல்லது அவர்களைப் போன்று நடிப்பது இந்திய சட்டப்பிரிவு 171 மற்றும் 49-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.


நீதிபதி உடையணிந்து மக்களை ஏமாற்றியதால் கைதுசெய்யப்பட்ட மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன்

குறிப்பிட்ட பொது ஊழியர் பதவியில் தான் இல்லாதபோதும் அந்த பதவியில் இருப்பதாக கூறி, எந்தவொரு செயலையும் செய்தால் அல்லது செய்ய முயற்சித்தால் அந்த நபருக்கு குறைந்தபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது இரண்டு ஆண்டு சிறை தண்டனையுடன்கூடிய அபராதமும் விதிக்கப்படும். ஏற்கனவே சிறப்பு சலுகைகளை பெறுவதற்காக அரசு ஊழியர்போல ஆள்மாறாட்டம் செய்வது அல்லது அவர்களைப் போல நடிப்பது, போலி ஆவணங்களை உருவாக்குவது போன்ற குற்றங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய சட்டப்பிரிவு 170ஆனது நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத்தில் போலி நீதிபதியாக மக்களை ஏமாற்றிய மோரிஸ், Ph.D. in law என்ற டேக் அணிந்து நீதிபதியின் ஆடையையும் அணிந்த புகைப்படங்களை காட்டி மக்களை ஏமாற்றியதுடன், அலுவலகத்தையே நீதிமன்றம் போன்று செட் செய்து, அதில் நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் டவாலி ஆகியோர் போன்று வேடமிட்ட நிறையப்பேரை பணிக்கு அமர்த்தியது மிகப்பெரிய குற்றமாகும். அதுபோக, கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியதுடன், தன் பேரில் சொத்துகளை வாங்கி குவித்தது, போலி நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்தது போன்ற பல குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் இவருக்கு 5 ஆண்டுகள்வரை அபராதத்துடன்கூடிய சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

Updated On 5 Nov 2024 12:07 AM IST
ராணி

ராணி

Next Story