இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சென்னை மேத்தா நகரைச் சேர்ந்தவர் சார்பூதின். இம்மாதம் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் முகமது என்பவரின் வீடு கடந்த சில நாட்களாக சந்தேகத்துக்குரிய வகையில் பூட்டப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரின் புகாரினை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் உடனே விசாரணையில் இறங்கினர். அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு அங்கிருந்த கழிவறையில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி, உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது . இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


வீட்டு வேலைக்காக அழைத்துவரப்பட்டு சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சிறுமி

இறந்து கிடந்த சிறுமி யார்?

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முகமது நிஷாத் மற்றும் நிவேதா என்கிற நிஷாவின் வீட்டில் இறந்து கிடந்த சிறுமி, அந்த வீட்டில் வேலை செய்து வந்தவர். தஞ்சாவூரைச் சேர்ந்த அந்த சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக, முகமது நிஷாத் மற்றும் நிஷா தம்பதியின் வீட்டில் வேலைக்கு வந்துள்ளார். சென்னை மேதாநகரில் உள்ள முகமது - நிஷா தம்பதியின் குழந்தையை பார்த்துக்கொள்ள தஞ்சாவூரிலிருந்து அவரை அழைத்துவந்துள்ளனர்.

வீட்டின் கழிவறையில் சிறுமி சடலமாக கிடந்த நிலையில், தலைமறைவாக இருந்த முகமது நிஷாத் மற்றும் நிஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் நெஞ்சை உலுக்கும், மனம் பதை பதைக்கும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 4 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள்

3 மாதமாக சித்ரவதை

உயிரிழந்த சிறுமி கடந்த 3 மாதங்களாக அந்த வீட்டில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அந்த சின்னஞ்சிறு பெண்ணை முகமது, அவரது மனைவி நிஷா, முகமதுவின் சகோதரி சீமாபேகம், முகமதுவின் நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெய சக்தி மற்றும் அந்த வீட்டில் வேலை செய்த மற்றொரு பெண்ணான மகேஸ்வரி ஆகியோர் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். அனைத்திற்கும் காரணம், முகமது, அந்த சிறுமியின் மீது ஆசைப்பட்டதே என்று கூறப்படுகிறது. தன் கணவருக்கு சிறுமியின் மீது ஆசை இருப்பதை அறிந்துகொண்ட மனைவி நிஷா, சிறுமியை முதலில் கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார். கணவர் முகமதுக்கு சிறுமியின் மீது வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைகளை பார்த்துள்ளார். சிறுமியின் மீது திருட்டுப்பட்டமும் கட்டியுள்ளார். மேலும் சிறுமியை பற்றி தவறாக சித்தரித்து, முகமதுவின் நண்பர், சகோதரி உள்ளிட்டவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அனைவரும் சிறுமியை அவ்வப்போது திட்டவும், அடிக்கவும் செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்து அன்று அனைவரும் சேர்ந்து சிறுமியை ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் சிறுமி இறந்துவிட, என்ன செய்வது என்று தெரியாமல் சடலத்தை கழிவறையில் வைத்து பூட்டிவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர். இதனை நிஷாவே வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இந்நிலையில் இறந்து போன சிறுமியின் உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட காயங்கள் அதிகம் இருந்ததாக மருத்துவமனை உடற்கூராய்வு தகவலில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் காவல்துறையினர், கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Updated On 19 Nov 2024 12:09 AM IST
ராணி

ராணி

Next Story