இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீப காலமாக கலப்படம் செய்யப்பட்ட, காலாவதியான உணவுகளால் உடல்நலக்குறைவு ஏற்படுவது மிகவும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, ஷவர்மா, பிரியாணி, சிக்கன், கேக் போன்றவற்றை சாப்பிட்டு உயிரிழந்த செய்திகள் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கே பயத்தை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் அடிக்கடி கடைகளில் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் பரிசோதனை மேற்கொண்டாலும் உணவுப் பொருட்களால் இறப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டேதான் போகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. சாலையோர கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்ட ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மேலும் அதே கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் மோமோஸ் வியாபாரியை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த கடை உரிமம் இல்லாமல் இயங்கிவந்தது தெரியவந்திருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்த இச்சம்பவத்தின் முழு விவரத்தையும் பார்க்கலாம்.

மோமோஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!

ஹைதராபாத்திலுள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தெருவோர மோமோஸ் கடை ஒன்று மிகவும் பிரபலமாக இயங்கிவந்துள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி ரேஷ்மா பேகம் (31) என்ற பெண்ணும் அவருடைய குடும்பத்தினரும் அந்த கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட வீட்டிலேயே மருந்து சாப்பிட்டுள்ளார். ஆனால் நிலைமை மேலும் மோசமடைந்ததால் அக்டோபர் 27ஆம் தேதி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் மோமோஸ் சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அந்த நாளில் அதே கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்ட அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டதால் அவர்களையும் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ரேஷ்மா பேகம் உயிரிழந்த சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து புகாரளித்தனர். புகாரின்பேரில் தெருவோர மோமோஸ் கடையை பரிசோதனை செய்ய, கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன்(ஜிஹெச்எம்சி), பஞ்சாரா ஹில்ஸ் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணையில் அந்த மோமோஸ் கடை உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடை நடத்திவந்த இரு வட இந்தியர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அங்குள்ள 110 மோமோஸ் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அங்கிருந்து 69 மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மோமோஸ் சாப்பிட்டதால் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் இவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்ததா என்பதை உறுதிசெய்ய தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளனர். மோமோஸ் தவிர வெவ்வேறு இடங்களில் இயங்கிவந்த சாலையோர கடைகளில் சிற்றுண்டி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதையடுத்து இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்மீது கொலை மற்றும் பி.என்.எஸ் சட்டத்தின்கீழ் பிற தொடர்புடைய பிரிவுகளின்கீழ் கொலை குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மோமோஸ் சாப்பிட்டு உயிரிழந்த ரேஷ்மா பேகம்

தெலங்கானா அரசின் அதிரடி உத்தரவு

கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஒரே உணவு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பல்வேறு உணவகங்கள் மற்றும் சிறுகடைகளுக்கு மோமோஸ் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் பரிசோதனையின் முடிவில் மோமோஸுடன் விநியோகிக்கப்பட்ட மயோனிஸில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேகவைக்கப்படாத அல்லது பதப்படுத்தப்படாத பச்சை முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனிஸ்கள் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவ பரிசோதனை முடிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனிஸை பயன்படுத்த தெலங்கானா அரசு தடை விதித்திருக்கிறது. மேலும் வணிகரீதியாக பயன்படுத்தப்படுகிற, பதப்படுத்தப்படாத மயோனிஸுக்கு ஓராண்டு கால தடைவிதித்து தெலங்கானா அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம் பதப்படுத்தப்பட்ட அல்லது வேகவைத்த முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனிஸுக்கு அம்மாநில அரசு தடை விதிக்கவில்லை என்பது இதன்மூலம் தெரியவருகிறது.


பெண் இறந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் & தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட மயோனிஸ்

தொடர்ந்து எழும் புகார்களும் உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கைகளும்

சமீபகாலமாகவே பிரியாணி மற்றும் ஷவர்மா மோகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. எங்கு திரும்பினாலும் ஆஃபர்கள்... இப்படி ஆஃபர்கள் அளிக்கப்படுவதாலோ என்னவோ இதுபோன்ற உணவுப்பொருட்களின் தரமும் குறைந்துகொண்டே போகிறது. கேரளாவில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் மரணம், சென்னை வானகரத்தில் ஷவர்மா சாப்பிட்ட 22 வயது பெண் மரணம் போன்ற செய்திகள் கடைகளில் இறைச்சி வகை உணவுகளை வாங்கி சாப்பிடுவோருக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் பரிசோதனை நடத்தி சில கடைகளுக்கு சீல் வைப்பதும் தடை விதிப்பதும் வழக்கமாகி வருகிறது. குறிப்பாக, ஓரிரு மாதங்களுக்கு முன்பு, பிரபல பிரியாணி கடையான எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கொடுங்கையூர் கிளையில் பிரியாணி சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி தற்காலிகமாக சீல் வைத்தனர். மேலும், 14 நாட்களுக்குள் அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைகளை சரிசெய்யுமாறு கால அவகாசமும் வழங்கினர். அதற்கு முன்புதான், சுகாதரமின்றி செயல்பட்டு வந்ததாகக் கூறி, சமூக ஊடகங்களால் பிரபலமான திருவேற்காடு அப்பு பிரியாணி கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இப்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் உணவுக்கடைகள் குறித்து புகார்கள் எழுந்தாலும், குறிப்பாக சென்னையில் இயங்கிவரும் பெரும்பாலான உணவுக்கடைகள் சுகாதரமின்றி செயல்படுவதாகவும், கெட்டுப்போன இறைச்சிகள் பயன்படுத்தப்படுவதாகவும், வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், கலப்படம் செய்யப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, பிரபல ஹோட்டல்கள், சிறிய உணவகங்கள், சாலையோர கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் போன்றவற்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்மூலம் பல கடைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கப்படுகின்றன. மேலும் அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளும் மூடப்பட்டு வருகின்றன.


கேக் சாப்பிட்டு உயிரிழந்த பஞ்சாப் சிறுமி

தமிழ்நாடு மட்டுமல்ல; இந்திய அளவில் இதுபோன்ற ஃபுட் பாய்சன் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் கேக் சாப்பிட்டு பஞ்சாப் சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் பெங்களூருவில் கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவனும் உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் உணவு பாதுகாப்புத் துறை மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு கடைகளிலிருந்து 235 கேக் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியது. அதில் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள அல்லூரா ரெட், சன்செட் எல்லோ FCF, போன்செயு 4R, டார்ட்ரஸைன் மற்றும் கார்மோய்சைன் போன்ற செயற்கை நிறமூட்டிகள் அளவுக்கு அதிகமாக கலந்திருந்தது தெரியவந்தது. குறிப்பாக, ரெட் வெல்வெட் மற்றும் ப்ளாக் ஃபாரெஸ்ட் போன்ற கேக்குகளை அதிகம் சாப்பிட்டால் அவை உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி சாப்பிடும் உணவுப் பொருட்களில் செயற்கையாக ரசாயனங்கள் கலப்பது, கெட்டுப்போன மற்றும் காலாவதியான இறைச்சிகளை பயன்படுத்துவது போன்றவற்றால் நிறையபேர் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக இதுவரை வெளியாகியுள்ள பல்வேறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக, உணவகங்களில் விற்கப்படும் மற்றும் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் விரைவில் கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

Updated On 11 Nov 2024 11:33 PM IST
ராணி

ராணி

Next Story