இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒரு மொழி படத்தில் நடித்தால்கூட ஒருவரால் சுலபமான பான் இந்தியா ஸ்டாராகும் வாய்ப்புகள் இப்போது நிறைய இருக்கின்றன. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே பலதரப்பட்ட மொழிகளில் அசலாட்டாக வாய்ப்புகளை பெற்று பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த ஒரு நடிகைதான் சௌந்தர்யா. இவரை பான் இந்தியா ஓ.ஜி நடிகை என்றே சொல்லலாம். இப்படி புகழின் உச்சத்தில் இருந்தபோதே சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இவர், தொடர்ந்து திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துவந்தார். அந்த காலத்திலிருந்தே நடிகர், நடிகைகளின் ஆதரவை தேர்தல் சமயங்களில் அரசியல்வாதிகள் நாடுவது வழக்கமான ஒன்று. அப்படி ஆந்திராவில் தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த சௌந்தர்யா, அக்கட்சிக்காக பரப்புரைகளிலும் ஈடுபட்டார். அப்படி ஒரு பரப்புரையை முடித்துவிட்டு, சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்தபோது திடீரென அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் திருமணமான அடுத்த ஆண்டே இவ்வாறு உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த இந்தியாவையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி சௌந்தர்யா இறந்துவிட்டாலும் அவரது புகழை நிலைநாட்டும் வகையில் இன்றும் அவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சௌந்தர்யாவின் இறப்பு, விபத்து அல்ல என்றும், அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்றும் போலீசில் புகாரளித்து பரபரப்பை கிளப்பினார். ஆனால் அதுகுறித்து சௌந்தர்யாவின் கணவர் விளக்கமளித்திருக்கிறார். இந்த சம்பவத்தின் முழு விவரத்தையும் பார்க்கலாம்.

தி ஓஜி பான் இந்தியா நடிகை!

சௌந்தர்யாவின் இயற்பெயர் சௌமியா சத்யநாராயணா. இவர் கர்நாடகாவில் 1972ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப்படிப்பை அங்கு முடித்த இவர், அடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்தார். சௌந்தர்யாவின் அப்பா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் இவருக்கு சினிமா வாய்ப்பு தேடிவர படிப்பை முதலாமாண்டுடன் நிறுத்திவிட்டு நடிப்புத்துறையில் இறங்கினார். முதலில் கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் வாய்ப்புகள் தேடிவந்தன. குறிப்பாக, தமிழில் அப்போது புகழின் உச்சத்தில் இருந்த கார்த்திக்குடன் சேர்ந்து இவர் நடித்த ‘பொன்னுமணி’ திரைப்படம் இன்றளவும் பேசப்படுகிறது. சௌந்தர்யா நடிக்கும் படங்கள் என்றாலே அது ஹிட்தான் என்ற அளவுக்கு ராசியான நடிகை என்ற பெயரை பெற்றார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் முதல் தெலுங்கில் நாகர்ஜூனா, சிரஞ்சீவி, ரவிச்சந்திரன் போன்றோருடனும் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் இவர் ஜோடி சேர்ந்தார். அதுபோக மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் பாவனைகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவருக்கு தென்னிந்திய திரையுலகில் அப்போது மவுசு மிகவும் அதிகமாகவே இருந்தது. சுமார் 10 ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சிய சௌந்தர்யா, 2003ஆம் ஆண்டு சாஃப்ட்வேர் என்ஜினீயரான ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துவந்த இவர் அவ்வப்போது அரசியல் கட்சிகளிலும் இணைந்து செயலாற்றினார்.


தென்னிந்திய திரையுலகில் கோலோச்சிய சௌந்தர்யா

எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து

குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் கால் பதிக்க கடுமையாக போராடிக்கொண்டிருந்த தேசிய கட்சிகளில் ஒன்றான பாஜக, தென்னிந்தியாவில் சௌந்தர்யாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே அவரை தனது கட்சிக்கு ஆதரவாக பயன்படுத்தியது. தேர்தல் சமயங்களில் பாஜகவுக்கு ஆதரவாக இவர் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்தார். 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு, ஆந்திராவின் கரீம்நகரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார் சௌந்தர்யா. அந்த சமயத்தில் சௌந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் பெங்களூருவிலிருந்து ஆந்திரா செல்ல சிறிய ரக தனி விமானம் ஒன்று இவருக்காக தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலை 11 மணியளவில் அந்த விமானத்தில் தனது சகோதரர் மற்றும் கட்சி நிர்வாகி ஒருவருடன் தனது பயணத்தைத் தொடங்கினார். விமானம் பறக்கத் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் சிக்கிய விமானி உட்பட 4 பேரும் எரிந்து கருகினர். இப்படி 31 வயதேயான சௌந்தர்யா புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் திடீரென மரணமடைந்த செய்தி திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


நடிகை சௌந்தர்யாவின் விருந்தினர் மாளிகையை நடிகர் மோகன் பாபு அபகரித்துவிட்டதாக புகார்

21 ஆண்டுகளுக்கு பிறகு புகார்!

இப்படி 21 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு நடிகையின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் தற்போது புகாரளித்திருக்கிறார். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்திலுள்ள சத்யநாராயணபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சிட்டிமல்லு என்பவர் நடிகை சௌந்தர்யாவின் மரணத்தில் சதி திட்டம் இருப்பதாக அந்த புகாரில் கூறியிருந்தார். ஷம்ஷாபாத்திலுள்ள ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாவிற்கு சொந்தமான ஒரு பெரிய விருந்தினர் மாளிகை இருந்ததாகவும், அந்த மாளிகையை தெலுங்கு நடிகர் மோகன் பாபு கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவும் அவருடைய சகோதரர் அமர்நாத்தும் அதை தரமாட்டோம் என்று கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்படி பிரச்சினை போய்க்கொண்டிருந்த சமயத்தில்தான் சௌந்தர்யா அவருடைய சகோதரர் அமர்நாத்துடன் சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளானதாகவும், அந்த விபத்துக்கான காரணம் குறித்து இன்றுவரை முழுமையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். சௌந்தர்யாவின் இறப்புக்கு பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தனக்குரியதாக்கிக்கொண்டதாகவும், எனவே அதை மீட்டு, ஆதரவற்றோர், போலீசார் மற்றும் ராணுவத்தினருக்கு வழங்கவேண்டுமெனவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். சௌந்தர்யா சென்ற விமானம் விபத்துக்குள்ளானது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமெனவும் கம்மம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததுடன், இந்த புகாரால் தனக்கு மோகன் பாபு தரப்பிலிருந்து மிரட்டல்கள் வர வாய்ப்புகள் இருப்பதால் பாதுகாப்பு வேண்டுமெனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.


நடிகர் மோகன் பாபு மீதான புகார் குறித்து விளக்கமளித்த சௌந்தர்யாவின் கணவர் ரகு

கணவர் விளக்கம்

சௌந்தர்யா இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்றதொரு புகார் கடிதம் அளிக்கப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது வழக்காக எடுத்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் திருப்பங்கள் வரலாம் என்றும் சொல்லப்பட்ட நிலையில், மோகன் பாபுவோ அல்லது அவரது தரப்பிலிருந்தோ இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் ரகு, அந்த புகார் குறித்து விளக்கமளித்திருக்கிறார். அதில், சௌந்தர்யா மரணம் குறித்து வெளியாகிற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும், சௌந்தர்யாவின் மரணத்துக்கு பின், தனது குடும்பத்தினர் எந்தவிதமான சொத்துக்களையும் விற்பனை செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதேபோல் மோகன் பாபுவும் தங்களிடமிருந்து எந்த சொத்தையும் சட்டவிரோதமாக பெறவில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் மோகன் பாபுவும் தனது குடும்பமும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நட்புறவில் இருப்பதாகவும், தனது மனைவியின் மரணம் குறித்தும், மோகன் பாபு குறித்தும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஏற்கனவே சௌந்தர்யாவின் இறப்புக்கு பிறகு அவருடைய சொத்துகளுக்கு உரிமை கோரி, அவருடைய கணவர், தாய் மற்றும் சகோதரரின் மனைவி மற்றும் பிள்ளைகள் என பலரும் வழக்குகளை தொடர்ந்த நிலையில், அவை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டிருக்கும் இந்த புகார் மனு திரையுலகினர் மட்டுமல்லாமல் சௌந்தர்யாவின் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Updated On 18 March 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story