இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காதல் குறித்த புரிதல் இளம்தலைமுறையினரிடையே இப்போது நிறையவே அதிகரித்திருக்கிறது. காதலித்தாலே கல்யாணத்தில்தான் முடியவேண்டும் என்ற நிலை மாறி, இருவருக்குமிடையே சரியான புரிதல் இல்லையென்றால் எத்தனை ஆண்டு காதல் என்றாலும் பிரிந்துவிடலாம் என்ற முடிவை நிறையப்பேர் சுமுகமாக பேசி எடுக்கின்றனர். ஆனால் இந்த காலகட்டத்திலும் காதலை ஏற்றுக்கொள்ளாத காதலன், காதலியை திட்டமிட்டு கொலைசெய்யும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு சம்பவம்தான் தற்போது விழுப்புரத்தில் நடந்திருக்கிறது. எதேச்சையாக பார்த்து பேசி பழகி காதலித்துவந்த இருவரும், அண்ணன், தங்கை முறை என்பது தெரியவர, காதல் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார் அந்த ஆண். ஆனால் அந்த பெண்ணோ, நான் உன்னை காதலித்துவிட்டேன் என்னை திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்தி வந்ததுடன், தனக்கு கிடைக்காத அந்த நபர் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் டீயில் எலி பேஸ்ட் கலந்துகொடுத்து, கொலைசெய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஒரு பக்க சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சைபெற்றுவருகிறார் அந்த ஆண். கொலைமுயற்சி செய்த கல்லூரி செல்லும் மாணவியை போலீசார் கைது செய்திருக்கின்றனர். கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓரிரு மாதங்களுக்குள் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறி பரபரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரத்தில் நடந்த இச்சம்பவத்தின் முழு விவரத்தையும் விரிவாக காணலாம்!

தங்கச்சி இல்லை காதலி!

விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கிரிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஜெயசூர்யா. பள்ளிப்படிப்பை முடித்த இவர், அந்த பகுதியிலேயே இ-சேவை மையம் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ரம்யா என்ற பெண், இ-சேவை மையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட, செல்போனிலும் நேரில் சந்தித்தும் பேசிவந்துள்ளனர். இவர்களுக்கிடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் ஒரே ஊர் என்பதால் ஜெயசூர்யாவின் குடும்பத்திற்கு இந்த காதல் விவகாரம் குறித்து தெரியவந்திருக்கிறது. அந்த பெண் யாரென விசாரித்ததில் அவர், ஜெயசூர்யாவுக்கு தங்கை உறவுமுறை வருவதாக கூறியுள்ளனர். என்ன உறவு என்று தெரியாமல் காதலித்து, தவறை உணர்ந்த ஜெயசூர்யா, இதுபற்றி ரம்யாவிடம் எடுத்துக்கூறி காதல் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் ரம்யாவோ ‘நான் உன் தங்கச்சி கிடையாது. காதலிதான். வா இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று சொல்லி சொல்லி ஜெயசூர்யாவை தினமும் தொடர்ந்து டார்ச்சர் செய்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த ரம்யா, பிளேடால் கையை வெட்டிக்கொண்டு, ரத்தம் வழிவதை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் ஜெயசூர்யாவுக்கும் அனுப்பியிருக்கிறார். இதனை பார்த்து பயந்துபோன ஜெயசூர்யா அவரிடம் மீண்டும் பேசியுள்ளார். இருந்தாலும் தங்கை உறவு என்று தெரிந்தபிறகு, காதலியாக பார்க்கமுடியாததால் வெறும் நட்பின் அடிப்படையில் பேசிவந்துள்ளார். முன்பு போல் ஜெயசூர்யா தன்னிடம் பேசாததை நினைத்து மனம் வருந்திய ரம்யா, இதுகுறித்து தனது தோழிகள் மற்றும் உறவினர்களிடம் கூறி அடிக்கடி அழுதுவந்துள்ளார்.


காதலன் ஜெயசூர்யாவுக்கு டீயில் விஷம் கலந்துக்கொடுத்த ரம்யா

காட்டிக்கொடுக்காத காதலன்

இப்படி தொடர்ந்து நடந்துவந்த சூழலில் பிப்ரவரி 11ஆம் தேதி திடீரென ஜெயசூர்யாவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக தான் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டதாக ஜெயசூர்யா கூற, மேல்சிகிச்சைக்காக அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இங்கும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதும், குடும்ப பிரச்சினைதான் காரணம் என்று ஜெயசூர்யா கூறியிருக்கிறார். சுமார் ஒரு மாதமாக அங்கு சிகிச்சைபெற்று வந்தவருக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். சிறுநீரக செயலிழிப்பால் மஞ்சள் காமாலை வந்ததால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளார் ஜெயசூர்யா. ஒரு கட்டத்தில் செல்போனை கூட கையில் எடுத்து பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த செல்போனை ஜெயசூர்யாவின் பெற்றோர் பார்த்தபோது, வாட்ஸ் அப்பில் ரம்யாவுடன் இருந்த உரையாடலை பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து ஜெயசூர்யாவிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போதுதான் உண்மையை கூறியுள்ளார் அவர். “கடந்த 11ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு வருமாறு ரம்யா என்னை அழைத்தார். நானும் அவர் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்படி பேசிக்கொண்டிருந்தபோது, மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரம்யா வற்புறுத்தியதால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அப்போது ரம்யா எனக்கு டீ போட்டு கொண்டுவந்து கொடுத்தார். அந்த டீயை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது எனக்கு உடலில் ஒருவித அசௌகர்யம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மெசேஜ் செய்த ரம்யா, உனக்கு உடலில் ஏதாவது பண்ணுகிறதா? என்று கேட்டாள். ஆமாம் எனக்கு என்னவோ பண்ணுகிறது என்று நான் கூறினேன். அப்போதுதான், ‘நீ என்னை வேண்டாம் என்று சொன்னதால் உனக்கு கொடுத்த டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்தேன்’ என்று கூறினாள். ஆனாலும் எனக்கு அவளை காட்டிக்கொடுக்க மனமில்லை என்பதால் நான் என் நண்பர்களுக்கு போன் செய்து குடும்ப பிரச்சினை காரணமாக நானே எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டேன் என்று கூறினேன்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயசூர்யாவின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். புகாரின்பேரில் ரம்யாமீது கொலைமுயற்சி வழக்கு பதிந்த போலீசார் அவரை கைதுசெய்ய தேடியபோது, குடும்பத்துடன் அவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் குற்றம்புரிந்த ரம்யாவை வலைவீசி தேடிய போலீசார் இரண்டு நாளைக்குள் அவரை கைது செய்து, திருவெண்ணைநல்லூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எலி பேஸ்ட் சாப்பிட்டால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள்

எலி பேஸ்ட் சாப்பிட்டால் என்னவாகும்?

சாப்பிடும் உணவில் எலி மருந்து கலந்துகொடுத்து கொலைசெய்வது சமீபகாலமாக அதிரித்து வருகிறது. எலி மருந்துகள் பிஸ்கட், பவுடர் மற்றும் பேஸ்ட் என மூன்று வடிவங்களில் கிடைக்கின்றன. இந்த மருந்தை சாப்பிட்டு மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. எலி பவுடரை கலந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருந்தாலும், பேஸ்ட் சாப்பிட்டு வருவோரை காப்பாற்றுவது சிரமம். ஏனென்றால் பேஸ்ட்டானது குடலில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அதன் வீரியத்தை குறைத்து வெளியே எடுப்பது என்பது மிகவும் கடினமானது. அதேபோலத்தான் சாப்பிட்ட உடனே இதன் விளைவுகள் வெளியே தெரியாது. எலி பேஸ்ட் சாப்பிட்ட பிறகு இரண்டு நாட்களுக்கு பெரிதளவில் அறிகுறிகளே இல்லாமல்கூட இருக்கலாம். எலி பேஸ்ட்டில் கலக்கப்பட்டிருக்கும் மஞ்சள் பாஸ்பரஸிற்கு அனைத்து உள்ளுறுப்புகளையும் பாதிக்கும் திறன் இருக்கிறது. குறிப்பாக, கல்லீரல், சிறுநீரகம், கணையம் போன்றவைதான் முதலில் பாதிக்கப்படும். இதனால் உடலின் உள்ளே எங்கு வேண்டுமானாலும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஆனால் எலி பேஸ்ட் சாப்பிட்ட முதல் இரண்டு நாட்களுக்கு வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண அறிகுறிகள்தான் இருக்கும் என்பதால் இது எதற்கான அறிகுறிகள் என்பதே அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இதனாலேயே பலரை காப்பாற்ற முடியாமல் போவதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.


காதலன் ஷாரோனுக்கு விஷம் கொடுத்த வழக்கில் காதலி கிரீஷ்மாவிற்கு மரண தண்டனை விதிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரத்தில் தற்போது நடந்த சம்பவத்தைப் போன்றே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ஒரு சம்பவம் அரங்கேறியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரும், கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்துள்ளனர். 2022ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி கிரீஷ்மாவை காண அவரது வீட்டிற்கு வந்த ஷாரோன் ராஜுக்கு ஜூஸ் குடிக்க கொடுத்துள்ளார். அந்த ஜூஸை குடித்துவிட்டுச் சென்ற ஷாரோனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. தனது நண்பரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற ஷாரோனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருடைய ரத்த மாதிரிகளில் விஷம் இருப்பது தெரியவந்தது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து கடைசியில் உயிரிழந்தார். இறக்கும் தருவாயில் கிரீஷ்மா கொடுத்த ஜூஸை குடித்தபிறகுதான் தனக்கு இப்படி ஆனதை ஷாரோன் தெரிவிக்க, இதுகுறித்து ஷாரோனின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், கிரீஷ்மாவுக்கு வேறு ஒரு பணக்கார வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததும், அதற்கு ஷாரோன் தடையாக இருக்கக்கூடாது என திட்டமிட்டு விஷம் கலந்த ஜூஸை குடிக்க கொடுத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த கிரீஷ்மாவின் தாயார் மற்றும் மாமா நிர்மல் குமார்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் குற்றவாளி என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக கிரீஷ்மாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அடங்குவதற்குள் அதே போன்றதொரு சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On 11 March 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story