இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

போதைபொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் போதைபழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடானது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களிடையே போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சிகரெட், மதுபழக்கத்தைத் தாண்டி, கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களை விற்க தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஆன்லைன் செயலிகளில் கோட் வேர்டு வைத்து தொடர்புகொள்வது, அதிலேயே பண பரிவர்த்தனை செய்வது போன்றவற்றின்மூலம் போதைப்பொருட்கள் யாருக்கும் தெரியாமல் எளிதில் விநியோகிக்கப்படுகின்றன. இதுபோன்ற விநியோகங்கள் கல்லூரி மாணவர்களிடையே சகஜம் என்பது குறித்த செய்திகளை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். அதுபோன்று கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகானின் மகனும் நடிகருமான அலிகான் துக்ளக். போதைப்பொருள் விநியோகித்த வழக்கில் தனது மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் மன்சூர் அலிகான், இதுகுறித்து பேட்டியும் அளித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

‘கடமான் பாறை’ திரைப்பட ஹீரோ!

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்துவருபவர் மன்சூர் அலிகான். இடையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர், சமீப காலமாக காமெடி கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருந்தார். சினிமா ஒருபுறம் இருந்தாலும் அரசியலிலும் ஈடுபட்டு வரும் மன்சூர், 1999ஆம் ஆண்டு முதல் 2009வரை அவ்வப்போது சில கட்சிகளின் சார்பில் தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்தார். அதன்பிறகு தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் புதிய கட்சியையும் தொடங்கினார். பிறகு கட்சியின் பெயரை ஜனநாயக புலிகள் என்று மாற்றிவிட்டார். இதனிடையே, ராஜ்கென்னடி ஃபிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் இவர் 2019ஆம் ஆண்டு தானே கதை எழுதி, தயாரித்த ‘கடமான் பாறை’ என்ற படத்தில் தனது மகன் அலிகான் துக்ளக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.


தனது மகனை ஹீரோவாக வைத்து 'கடமான் பாறை’ என்ற பெயரில் படம் இயக்கிய மன்சூர் அலிகான்

மேலும் அப்படத்தில் தானே வில்லனாகவும் நடித்திருந்தார். நகைச்சுவை கலந்த திரில்லர் பாணியில் அப்படம் உருவாகியிருப்பதாகவும், மாடர்ன் டெக்னாலஜியானது மாணவர்களை எப்படி தவறான பாதைக்கு வழிநடத்துகிறது என்பதை மையமாகக்கொண்டு கதை நகர்வதாகவும் அவர் தனது படம் குறித்து கூறியிருந்தார். ஆனால் அந்த படம் வெளியானதற்கான அறிகுறிகளே இல்லாத அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது. தனது மகனை எப்படியாவது தமிழ் சினிமாவில் ஹீரோவாக்கிவிடலாம் என்ற கனவுடன் இருந்த மன்சூர் அலிகானுக்கு அந்த கனவு வெறும் நனவாகிப்போனது. இந்நிலையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு மன்சூர் அலிகானுடைய மகன் பெயர் மீடியா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் இந்தமுறை அலிகான் துக்ளக் போதைப்பொருள் விற்ற வழக்கில் சிக்கியுள்ளார்.

அலிகான் துக்ளக் சிக்கியது எப்படி?

சென்னையிலுள்ள கல்லூரிகளில் போதைப்பொருள் விநியோகிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவதுண்டு. அப்படி கடந்த மாதம் முகப்பேர் பகுதியிலிருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு செல்போன் செயலிமூலம் போதைப்பொருட்கள் விற்றதாகக்கூறி 5 மாணவர்கள் ஜெ.ஜெ. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய மண்ணடியைச் சேர்ந்த மேலும் 2 பேரையும் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா, மேஜிக் காளான் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை வாங்கிவந்து இங்கு விற்பனை செய்தது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்டவர்களின் செல்போன்களை ஆராய்ந்ததில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக்கின் போன் நம்பர் அவர்களிடம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மாணவர்களுக்கும் துக்ளக்கிற்கும் என்ன தொடர்பு என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


போதைப்பொருள் பயன்படுத்தி சிக்கிய அலிகான் துக்ளக்

விசாரணையில் அலிகான் துக்ளக், முகமது ரியாஸ் அலி, சேது ஷாயி மற்றும் பைசல் அகமது ஆகிய 4 பேர் மெத்தம்பெட்டமைன் மற்றும் மேஜிக் காளானை பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்படை அமைக்கப்பட்டு இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் ஆன்லைனில் கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்ததோடு, அதை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் துக்ளக் கஞ்சா பயன்படுத்தியிருப்பது உறுதியானது. இதனால் அம்பத்தூர் கோர்ட்டில் இவர் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு துக்ளக் உள்ளிட்ட 7 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது மகன் கைது குறித்து மன்சூர் அலிகான்

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தனது மகனை பார்க்கச்சென்ற மன்சூர் அலிகான், கஞ்சா அடித்தால் அரசாங்கம் கைது செய்வார்கள் என்று தெரியாதா? என்றும், தைரியமாக இருக்கவேண்டும் என்றும், புத்தகங்கள் படிக்கச்சொல்லியும் தனது மகனுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு போவதாக நினைத்துக்கொள்ளும்படி கூறி தனது மகனுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? என கேள்வி எழுப்பினார். மேலும் இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடியே ஆகவேண்டும், டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து தனது மகன் குறித்து பேசிய அவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் தனது மகனுடைய நம்பர் இருந்ததால் அதை வைத்து கைது செய்துவிட்டார்கள் என்று கூறினார்.


தனது மகன் கைது குறித்து மன்சூர் அலிகான் கருத்து

போதைப்பொருளை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ‘சரக்கு’ என்ற பெயரில் படம் எடுத்ததாகவும், ஆனால் அந்த படத்தை வெளியிட தியேட்டரோ அல்லது ஓடிடியிலோ அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறினார். மேலும் அரசே சரக்கு விற்றால் வழக்கு இல்லை, ஆனால் கஞ்சா அடித்தால் வழக்குப்போடுகிறார்கள் என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். சமீபகாலமாகவே போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவருகிற நிலையில், அதனை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருட்களை விற்பவர்களையும், வாங்குபவர்களையும் கைதுசெய்து அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுத்துவருகிறது. குறிப்பாக, வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு போதைப்பொருட்களை கடத்திவருபவர்களை கைது செய்வதில் இங்குள்ள போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர். அப்படி சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மன்சூர் அலிகானின் மகனும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Updated On 17 Dec 2024 12:04 AM IST
ராணி

ராணி

Next Story