இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பள்ளி மாணவர்களிடையே குற்றச்செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஜென்-Z கிட்ஸ்களின் மனநிலையும், அவர்களின் நடத்தையும் பெற்றோருக்கு அச்சத்தையும், பதைபதைப்பையும் ஏற்படுத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் மாணவர்களிடையே போதை பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு, முறையற்ற செல்ஃபோன் பயன்பாடு, காதல் விவகாரங்கள், அடிதடி போன்றவை கணிசமாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குழந்தை திருமணத்தை தடுக்க அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், காதல் என்ற பெயரில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொள்வதும், couple goals என சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் மிகவும் அதிகரித்திருக்கிறது. இதுபோன்ற பழக்கவழக்கங்கள் அந்தந்த குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் மிகப்பெரிய தீங்கு விளைவிக்கிறது. இதற்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு பள்ளி மாணவர்களிடையே அதிகரித்திருப்பதும், பிரபலமாகவேண்டுமென்ற எண்ணம் மேலோங்குவதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இப்படி சமீபகாலமாக அடிக்கடி பேசுபொருளாகிவருகிறது சிறுவர், சிறுமிகளின் காதல் விவகாரங்கள். அப்படியொரு சம்பவம்தான் சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்திருக்கிறது. 9ஆம் வகுப்பு மாணவியை காதல் என்ற பெயரில் கர்ப்பமாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். இந்த சம்பவத்தின் முழு விவரத்தையும் இக்கட்டுரையில் காணலாம்.

குழந்தை பெற்றெடுத்த மாணவி!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக வயிறு வீங்கியிருந்திருக்கிறது. ஆனால் அதை பெற்றோர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே தனது பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். பயந்துபோன பெற்றோர் சிறுமியை தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்று விசாரித்திருக்கின்றனர். விசாரணையில் 9ஆம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுமி, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனை காதலித்து வருவதாகவும் அந்த சிறுவனுடைய குழந்தையைத்தான் தான் சுமப்பதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை மருத்துவமனையில் சேர்க்க, அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வல்லம் காவல்நிலைய அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அங்கு வந்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மாணவனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்திருக்கின்றனர். 13 வயது சிறுமியை 15 வயது சிறுவன் காதலித்து கர்ப்பமாக்கிய சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தஞ்சாவூரில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன் கைது

தஞ்சாவூரில் இதுபோன்றதொரு சம்பவத்தால் சிறுவன் போக்சோவில் கைதுசெய்யப்பட்ட அதே வேளையில், திருவண்ணாமலையில் ஏற்கனவே போக்சோவில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2022ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தின் கணியம்பாடி பகுதியில் செயல்பட்டுவரும் செங்கல் சூளை ஒன்றில் வேலைசெய்துவந்த 26 வயது இளைஞன் தமிழ்ச்செல்வன் 14 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதுடன், அச்சிறுமியை கர்ப்பமாக்கி இருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். அப்போதே போக்சோவின் கீழ் அந்த நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தஞ்சாவூர் சம்பவம் நடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தமிழ்ச்செல்வனுக்கு ரூ.2 லட்சம் அபராதத்துடன்கூடிய 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தமிழ்ச்செல்வன் மேஜர் என்பதால் இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தஞ்சாவூர் சம்பவத்தில் சிறுவனுக்கு 15 வயதே ஆகும் நிலையில், என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம்

போக்சோ சட்டம் எதற்காக?

பொதுவாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். Protection of Children from Sexual Offences Act என்பதைத்தான் போக்சோ சட்டம் என்று சொல்கின்றனர். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதாகும். 2012ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்தின்மூலம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். போக்சோ சட்டத்தின்கீழ் குற்றம் நிரூபணமாகும்பட்சத்தில் தண்டனையிலிருந்து யாராலும் தப்பமுடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முன்பு மரண தண்டனைதான் என இச்சட்டம் கடுமையாக கையாளப்பட்ட நிலையில், அதன்பிறகு அதில் ஆயுள் தண்டனையும் சேர்க்கப்பட்டது. பொதுவாகவே போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவோருக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறைதண்டனை முதல் ஆயுள் தண்டனைவரை விதிக்கப்படலாம். இதுபோக, இச்சட்டத்தின்கீழ் லட்சக்கணக்கில் அபராதமும் செலுத்தவேண்டி இருக்கும்.


போக்சோவின் கீழ் முன்பு இருந்த மரண தண்டனையுடன் சேர்க்கப்பட்ட ஆயுள் தண்டனை

குழந்தைகளை பாதுகாக்க இச்சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஏற்ப சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அதன்படி, குழந்தைகளை அநாகரீகமான புகைப்படம் எடுத்தோ அல்லது அவர்களிடம் ஆசை வார்த்தைகூறி கேட்டுவாங்கியோ பிறரிடம் பகிர்வோருக்குக்கூட இந்த சட்டத்தின்கீழ் தண்டனை உண்டு. அதேபோல் குழந்தைகளை ஆபாசப்படங்களுக்கு பயன்படுத்துவோருக்கு 5 முதல் 7 ஆண்டுகள் அபராதத்துடன்கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும். அதுவே 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை அபராதத்துடன் விதிக்கப்படலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டு, அந்த குழந்தை இறக்கும்பட்சத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கப்படுவது உறுதி. போக்சோ சட்டத்தில் தண்டனை கடுமையாக இருப்பதால் இந்த வழக்குகளில் கைதுசெய்யப்படுவோரிடம் நடத்தப்படும் விசாரணைக்கும் பல்வேறு வரையறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.


குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு பாதுகாப்பளிக்கும் போக்சோ

குற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர் முறையாக புகாரளித்தல், சாட்சியங்களை பதிவுசெய்தல், சம்பந்தப்பட்ட நபர்களிடமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் முறையான விசாரணை நடத்துதல் போன்றவை இச்சட்டத்தின்கீழ் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இச்சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் விசாரணையானது பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலையை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதுதான். எனவேதான் குழந்தையிடம் விசாரணை நடத்தும்போது இன்ஸ்பெக்டர் நிலையில் இல்லாத சாதாரண ஒரு பெண் காவலர் குழந்தையின் வீட்டிற்கு சென்றோ அல்லது அவர் குறிப்பிடும் இடத்திற்கு சென்றோ சாட்சியங்களை பெற்றுவர வேண்டும். அந்த வாக்குமூலங்களை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அப்படியே நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டும். ஏனென்றால் எந்தவொரு சூழ்நிலையிலும் விசாரணை என்ற பெயரில் குழந்தையை காவல் நிலையத்தில் வைக்க இச்சட்டத்தின்கீழ் அனுமதியில்லை. பொதுவாகவே வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், விசாரணை என்ற பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகளை இரவு நேரத்தில் காவல்நிலையங்களில் வைத்திருக்க நமது சட்டத்தில் அனுமதியில்லை. அதேபோல் விசாரணையின்போது பாதிக்கப்பட்ட குழந்தையை மிரட்டவோ, தாக்கவோ காவலருக்கு அனுமதி கிடையாது. போக்சோ வழக்குகளில் தீர்ப்புகள் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்பதால் இந்த வழக்குகள் பெரும்பாலும் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக இந்த வழக்குகளின் தீர்ப்பு ஓராண்டுக்குள் வழங்கப்பட வேண்டும். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநலனை கருத்தில்கொண்டு அவர்களுக்கு சிறார் நீதிமன்ற ஆணையமும் குழந்தைகள் நலக்குழுவும் இணைந்து சிகிச்சைகள் அளிக்கின்றன. குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளை பாலியல் சீண்டல்கள், பாலியல் தாக்குதல்கள் மற்றும் சுரண்டல்களிலிருந்து காப்பாற்ற உருவாக்கப்பட்ட சட்டம் என்பதால்தான் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவோருக்கு எந்தவித சமரசமுமின்றி தண்டனைகள் உடனடியாக வழங்கப்படுகின்றன.

Updated On 9 Dec 2024 9:29 PM IST
ராணி

ராணி

Next Story