மக்களை மகிழ்வித்த ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2025’ - கிராமிய கலைஞர்களை கவுரவித்த அரசு!
அழிந்துவரும் நாட்டுப்புற கலைகளை அனைத்து மக்களிடமும் கொண்டுசேர்க்கவும், நலிந்துபோன நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற நிகழ்ச்சியானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சென்னையில் பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக நடத்தப்பட்ட இந்த விழாவில் தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த கிராமிய கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் தங்களின் அடையாளம் என்று கூறும் அவர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய தொகையை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர்.
ஊதியத் தொகை உயர்வு - முதலமைச்சர் அறிக்கை!
கடந்த 3 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை நாட்களில் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறும் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா இந்த ஆண்டும் 18 இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும்விதமாக அவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்குவதுடன், பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்துபோக ஆகும் போக்குவரத்து செலவு, தங்குமிடம் மற்றும் உணவு போன்ற அனைத்தையுமே தமிழ்நாடு அரசே கவனித்துக்கொள்ளும். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த சங்கமம் விழாவில் பங்கேற்ற கலைஞர்களின் ஒருநாள் ஊதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியிருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ் பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னையிலுள்ள 18 இடங்களில் 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒருநாள் ஊதியம் ரூ. 5000 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கிராமிய கலைஞர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிராமிய கலைஞர்களின் பொய்க்கால் குதிரையாட்டம்
என்னென்ன நிகழ்ச்சிகள் எங்கெங்கு நடைபெற்றன?
நான்காவது ஆண்டாக சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை கடந்த 13ஆம் தேதியன்று கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியானது இங்கு தவிர, அம்பத்தூர் எஸ்.வி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சித் திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கே.கே.நகர் சிவன் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம், நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், தி.நகர் நடேசன் பூங்கா, சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கிண்டி கத்திப்பாரா வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவான்மியூர் கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகிய 18 இடங்களில் நடைபெற்றது. 13ஆம் தேதிமுதல் 17ஆம் தேதிவரை 4 நாட்களும் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெற்ற இந்த விழாவில் 1500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் 75 கலைகுழுக்களாக பிரிந்து பல்வேறு கலை வடிவங்களை மேடையேற்றி காண்போரை மகிழ்வித்தனர்.
அண்ணாநகர் கோபுர பூங்காவில் நடைபெற்ற விழாவில் காவடியாட்டம் ஆடிய கலைஞர்
இந்த விழாவில் தப்பாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம், கரகாட்டம், புரவியாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், ஜிக்காட்டம், சேவையாட்டம், ஜிம்பளா மேளம், நையாண்டி மேளம், பழங்குடியினர் நடனம், மல்லர் கம்பம் போன்ற நடனங்களும், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல்கள், கர்நாடக இசை போன்ற பாடல் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் கிராமிய கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டன. அதுபோக, தெருக்கூத்து, பாவைக்கூத்து, கணியன் கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம் போன்றவையும் இடம்பெற்றன. சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் இந்த விழாக்களில் பங்கேற்றனர். தமிழ்நாடு தவிர கேரளாவின் தெய்யம் நடனம், ராஜஸ்தானின் கூமர் நடனம், மேற்கு வங்கத்தின் கனுச்சி நடனம், உத்தரகாண்டின் சபேலி நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், கோவாவின் விளக்கு நடனம் போன்ற பிற மாநிலங்களில் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’விற்கு கிடைத்துவரும் வரவேற்பால், கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்விதமாகவும், கலைகளை ஊக்குவிக்கும்விதமாகவும், வேலூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களிலும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகள் தவிர, இதுபோன்ற சங்கமம் விழாக்களுடன், உணவு திருவிழாவையும் இணைத்து நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.