இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளும், பிரபலங்களும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். அரசாங்கமே விடுமுறைகளை அறிவித்தது. நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் அயோத்திக்கு செல்ல பல்வேறு ஏற்பாடுகளும் செய்துதரப்பட்டுள்ளன. இதுதான் நாட்டில் தற்போதைய ஹாட் டாப்பிக்கும்கூட. பாரம்பரியங்கள் மற்றும் கலாசாரங்கள் நிறைந்த நமது நாட்டில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் உள்ள போதிலும் இந்த ராமர் கோயில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? கோயில் நிறுவப்படுவதற்கு முன் என்னென்ன பிரச்சினைகள் உருவாகின? என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

அயோத்தி பிரச்சினை

அயோத்தியில் முகலாய மன்னர்கள், நவாப்கள், பிரிட்டிஷ் அரசாங்கம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாபர் மசூதி தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த இடத்தில்தான் ராமர் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த மசூதி இடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்த இடம் தொடர்பான உள்ளூர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைதான்.

முகலாய சக்கரவர்த்தி பாபர் ஆட்சிக்காலத்தில் அவருடைய சேனைத் தலைவர் மீர் பாகி என்பவரால் 1528 - 1530க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அயோத்தியிலுள்ள ராம் கோட் மொகல்லாவில், மசூதி ஒன்று கட்டப்பட்டது. பாபர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதால் இதனை பாபர் மசூதி என்றே அழைத்தனர். அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்த வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆனால் அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டு அதே இடத்தில் மசூதி கட்டியிருப்பதாக அப்போதிருந்தே இந்துக்கள் வாதத்தில் ஈடுபட்டு வந்ததை பிரிட்டிஷ் வரலாற்றாளர்களின் குறிப்புகளிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்பதால் அங்கு ஆண்டாண்டு காலமாக இந்துக்கள் பூஜைகளும், வழிபாடுகளும் செய்துவந்தனர் என்பதையும் அதனாலேயே அங்கு இந்து - முஸ்லீம்களிடையே அவ்வபோது சண்டைகளும் மோதல்களும் நடந்துள்ளன என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து மசூதியை ஒட்டி இந்துக்கள் பீடம் அமைத்து மசூதி சுவரில் ‘ராம் ராம்’ என எழுதி வழிபாடு நடத்தியிருக்கின்றனர். அங்கிருந்து இந்துக்களும் முஸ்லீம்களும் மாறி மாறி அந்த இடத்தை தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என ஒவ்வொரு மன்னர்கள் மற்றும் அரசாங்கத்திடமும் முறையிட்டு வந்துள்ளனர்.


பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த பாபர் மசூதி

இப்படி ஆண்டாண்டு காலமாக நடந்துவந்த போட்டியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது 1949ஆம் ஆண்டு மசூதிக்குள் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள். சிலைகள் கண்டெடுக்கப்பட்டதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு சாதுக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் ராமாயண உரைகளை நிகழ்த்தினர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்து பதட்டம் நிலவிய நிலையில் அரசாங்கம் காவலர்களை பாதுகாப்பிற்காக நிறுத்தியது. ஆனால் அப்போதைய ஆட்சியரின் ரகசிய உதவியால்தான் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழும்பின. இதற்கு வருத்தம் தெரிவித்து முதல்வர் ஜி.பி பந்துக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தந்தி அனுப்பினார். அதில், அயோத்தியில் நடந்த சம்பவங்களால் தனக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்துமாறும் முதல்வரிடம் கோரியிருந்தார்.

இருப்பினும் அங்கிருந்துதான் 70 ஆண்டுகால ஒரு நீண்ட நெடிய வழக்கு தொடங்கியது. ஆனால் அந்த சிலைகளை உள்ளே வைக்க, மசூதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நபர் உதவியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இதுகுறித்து மாறி மாறி பேசிவந்த நிலையில், அந்த இடமே சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. மேலும் அங்கு வழிபாடு நடத்த தங்களுக்குத்தான் உரிமை அளிக்கவேண்டும் எனக் கோரி இந்து அமைப்புகள் 1959ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு முற்றிய நிலையில் கோயில் பிரச்சினை தேர்தல் பிரச்சினையாக மாறியது. ஒருவழியாக 1986ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் அவருடைய சகாக்களுக்கும் நெருக்குதல்கள் ஏற்பட்ட நிலையில் அங்கு இந்துக்கள் வழிபட அனுமதி அளித்தார்.

இதற்கிடையே 1985-86க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கக்கோரி போராட்டங்கள் நடத்த விஷ்வ இந்து பரிஷத் கட்சியானது ஒரு புதிய இயக்கத்தையே தொடங்கியது. மசூதிக்கு வெளியே உள்ள காலியான இடத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக்கொள்ளுமாறும் மசூதியை விட்டுவிட வேண்டும் எனவும் முஸ்லீம்கள் ஆலோசனை கூறியபோதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அதனை நிராகரித்துவிட்டது.


பாபர் மசூதியை இடிக்கக்கோரி இந்துக்கள் நடத்திய போராட்டங்கள்

1989ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்த வழக்கில் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது எனவும், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி ராமர் பிறந்த இடத்தை இந்துக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரி பாஜக கட்சி தீர்மானம் எடுத்தது. இதனால் அயோத்தி பிரச்சினையானது தேசிய பிரச்சினையாக உருவெடுத்தது. இந்நிலையில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்க அரசாங்கத்தை வற்புறுத்தி 1990ஆம் ஆண்டு ரத யாத்திரை மேற்கொண்டார் எல்.கே அத்வானி. அவரை பீகாரில் வைத்து கைது செய்தது அப்போதைய அரசாங்கம்.

பாபர் மசூதி இடிப்பு

தொடர்ந்து போராட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டவேண்டுமென இடிக்கப்படுவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே ராம ஜென்மபூமி இயக்கம் தொடங்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்ட நாளன்று விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ், பாஜக, சிவசேனா கட்சிகள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து அங்கு லட்சக்கணக்கானோர் கூடினர். இந்த அமைப்புகள் உள்ளூர் மக்களை தூண்டி சதி செய்ததாலேயே மசூதி இடிக்கப்பட்டதாக சமூக குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 48 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 1993 முதல் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் அவர்கள் அனைவரையும் 2020ஆம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். ஆனால் அப்போது 32 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர். மசூதி முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இடிக்கப்படவில்லை எனவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நிகழ்த்திய உரைகள் குறித்த காணொளி மற்றும் படங்கள் எதுவும் தெளிவாக இல்லை எனவும் கூறியது நீதிமன்றம்.


பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில்

மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக, பிரச்சினையுடன் தொடர்பு இல்லாத பிற அமைப்புகளும் சேர்ந்துகொண்டன. இந்து மற்றும் முஸ்லீம்கள் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என ஒருபுறம் போராடி வந்த நிலையில் அரசாங்கம் அதனை இந்துக்களுக்கு சாதகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் விளைவாக மசூதியின் கீழ் கோயில் இருந்ததாக 1999ஆம் ஆண்டு தொல்லியில் துறை அறிக்கை சமர்ப்பித்தது. இதுகுறித்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா அமைப்புகளுக்கு பிரித்து கொடுக்குமாறு 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் இடத்தை பங்குபோட விருப்பமில்லாத இந்து அமைப்புகள் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அங்கு 2011 - 2019 வரை இந்த வழக்கு நடைபெற்ற நிலையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என 2019ஆம் ஆண்டு இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் இந்த மசூதி இடிக்கப்பட்டதை சுற்றியுள்ள 72 ஏக்கர் நிலமானது தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில்

இந்த தீர்ப்பு பாஜக அரசாங்கத்தின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் 4 ஆண்டுகளாக 2.7 ஏக்கரில் மூன்று மாடிகள் கொண்டதாக பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளது ராமர் கோயில். இந்த கோயிலின் நீளம் 380 அடி, அகலம் 250 அடி மற்றும் உயரம் 161 அடி ஆகும். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. இந்த கோயிலில் மொத்தம் 392 தூண்களும், 44 கதவுகளும் உள்ளன. நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என 5 மண்டபங்கள் இங்கு உள்ளன. கோயிலின் பிரதான கருவறையில் குழந்தை ராமர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா கோயில்களைப் போன்றே இந்த கோயிலும் முழுக்க முழுக்க வட இந்திய கட்டட பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. விஷ்வ இந்து பரிஷத்தின் வழிகாட்டுதலின்பேரில் இந்த கோயிலின் மாதிரி வடிவமைக்கப்பட்டு, அதன்படியே சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோயிலில் சிமெண்ட் மற்றும் இரும்பு போன்றவை பயன்படுத்தப்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு. வெறும் கற்களைக் கொண்டே நிறுவப்பட்டிருக்கிறது ராமர் கோயில்.


ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி மற்றும் பிரபலங்கள்

இன்னும் கோயில் பணி முழுமையடையவில்லை. இந்நிலையில் ராமர் கோயிலின் குடமுழுக்கு விழா ஜனவரி 22ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் கட்டுமானம் முடிவதற்கு முன்பே கோயில் திறப்பு நடைபெற்றது குறித்து விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால் கோயில் தொடர்பான காரியங்கள் அனைத்தும் வாஸ்து மற்றும் சாஸ்திரங்களின்படிதான் நடந்து வருவதாகவும், ஜோதிட, ஆகம சாஸ்திரங்களின்படி ஜனவரி 22ஆம் தேதி 12.22 முதல் 12.40 மணி வரை நல்ல நேரம் என தீர்மானிக்கப்பட்டுதான் பூஜை நடத்தப்பட்டதாகவும் சாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்

கோலாகலமாக நடந்து முடிந்த ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப்பட பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் போன்றோருக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. பாலிவுட் நடிகர்கள், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷால், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குர்ரான், கங்கனா ரனாவத், டோலிவுட்டிலிருந்து சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் போன்றோரும் விஐபிக்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிசைகளில் இடம்பெற்றிருந்தனர்.

அடுத்த ஓரிரு நாட்களிலேயே பொதுமக்கள் தரிசனத்திற்காக கோயில் திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ராமர் கோயில் அறக்கட்டளையின் தரவுப்படி, ஜனவரி 23ஆம் தேதியன்று 5 லட்சம் பக்தர்கள் வந்ததாகவும், 3 கோடியே 17 லட்சம் நன்கொடை பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதுமிருந்து அயோத்திக்கு செல்ல சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இதனால் திருப்பதி கோயிலுக்கே அயோத்தி கோயில் டஃப் கொடுப்பதாக இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

Updated On 6 Feb 2024 12:25 AM IST
ராணி

ராணி

Next Story