இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தேனி மாவட்ட எல்லையில் கேரள மாநிலம் மூணாறு அமைந்துள்ளது. இங்கு தேயிலைத் தோட்டங்களே அதிகம் என்பதால், மாற்று வேலை வாய்ப்பாக சுற்றுலா சார்ந்த தொழில்கள் அபரிமிதமாக வளர்ந்து விட்டன. தேநீர் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஆட்டோ, ஜீப் இயக்கம், கலைப் பொருள் விற்பனை, புகைப்படத் தொழில், வீட்டு தயாரிப்பு சாக்லேட்டுகள், வழிகாட்டிகள் என வெளியூர் பயணிகளை நம்பியே இங்கு பலர் தொழில் செய்கின்றனர். இதில் சுற்றுலாப் பயணிகளை கவர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் களமிறங்கி உள்ளனர். மூணாறு மலைவாசஸ்தலம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரம்மிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இக்கட்டுரையில் மூணாறு சுற்றுலா பயணத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.


மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அழகிய "மூணாறு"

மூணாறு பெயர்க்காரணம்

மூணாறு என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி, குண்டலி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது. கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணாறு மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது. உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குகிறது மூணாறு. ஓய்வையும், இயற்கையின் அரவணைப்பையும் நாடி லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா மட்டுமன்றி தூரதேசங்களிலிருந்தும் மூணாறுக்கு வருகின்றனர்.


3 ஆறுகள் கூடும் வித்தியாசமான புவியியல் அமைப்பில் அமைந்துள்ளதால் "மூணாறு" என பெயர்பெற்றது

மூணாறு தேயிலை தோட்டங்கள்

மேலே நீல வானம், கீழே பச்சை வயல்கள் என்று பார்ப்பதற்கே மூணாறு தேயிலைத் தோட்டங்கள் அழகாக இருக்கும். இந்த தோட்டங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேயிலைக்கு பெயர் பெற்றவை. இருப்பினும், நீங்கள் தோட்டங்களை நேரில் பார்வையிடும் போது, உங்களுக்குள் இயற்கை ஆர்வம் பீரிடும். நீங்கள் தேர்ந்தெடுத்த தேநீர் அல்லது காபியை பருகும்போது சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அழகிய தேயிலை தோட்டங்களின் பார்வையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். மூணாறில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் தேயிலை தோட்டங்கள் முக்கியமான ஒன்றாகும். எனவே உங்கள் பயணத் திட்டத்தில் இதை சேர்க்கவும்.


மங்கலான மேகங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு

புத்துணர்ச்சியூட்டும் எழில் பூமி

காலனிய காலத்திய மற்றும் கடந்த நூற்றாண்டுக்குரிய நவீன வரலாற்று பின்னணியை மூணாறு பிரதேசம் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து பசுமை சமவெளிகளை நினைவூட்டும் இந்த மலைப்பிரதேச அழகு, ஆங்கிலேயர்களுக்கும் வந்த நாளிலேயே பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் விரும்பிய இயற்கையின் தூய்மையும் இனிமையான சூழலும் இங்கு விரவியிருந்தது. எனவே அவர்கள் படிப்படியாக இப்பிரதேசத்தை தென்னிந்தியாவை ஆண்ட (ஆங்கிலேய) அதிகார வர்க்கத்துக்கான ஒரு கோடை விடுமுறை வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டனர். அந்த துவக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று மூணாறு பிரதேசமானது தனது பிரம்மிக்க வைக்கும் எழிற்காட்சிகளுடன் கூடிய ஒரு பிரசித்தமான விடுமுறை சுற்றுலா ஸ்தலமாகவே மாறிவிட்டது. ஒரு இயற்கை ரசிகர் எதிர்பார்க்கும் யாவற்றையுமே தன்னுள் கொண்டிருப்பது இந்த மூணாறு ஸ்தலத்தின் விசேஷமாகும். கொஞ்சமும் இடைவெளியின்றி நீண்டு பரந்து காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களும், பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், பலவகை தாவர உயிரின வகைகளும், காட்டுயிர் சரணாலயங்களும், நறுமணம் நிரம்பிய காற்றும் இனிமையான குளுமையான சூழலும் இங்கு பயணிகளை வரவேற்கின்றன.


கொஞ்சமும் இடைவெளியின்றி நீண்டு பரந்து காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்கள்

மலையேறிகள், சைக்கிள் பயணிகள் மற்றும் பிக்னிக் ரசிகர்களின் சொர்க்கம் இது. மூணாறு மலைவாசஸ்தலத்தின் முக்கிய விசேஷங்களில் ‘இரவிக்குளம் நேஷனல் பார்க்’ எனப்படும் தேசிய இயற்கைப்பூங்காவும் ஒன்றாகும். இங்கு தமிழ்நாட்டின் மாநில விலங்கான ‘வரையாடு’ எனும் அரிய வகை ஆடு காணப்படுகிறது. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி’ இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம். ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் என்பது மற்றொரு முக்கியமான பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும். இங்குள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை அருங்காட்சியகத்தில், இப்பகுதியின் தேயிலைத் தயாரிப்பு மற்றும் வரலாற்று தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொத்தன்மேடு, ஆட்டுக்கல், ராஜமலா, எக்கோ பாயிண்ட், மீனுளி மற்றும் நாடுகாணி போன்ற இடங்களும் மூணாறு பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன. எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் மூணாறு மலைவாசஸ்தலம் வருவதற்கு ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகள் கிடைக்கின்றன. ஹோட்டல்கள், ரெசார்ட் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் தங்களுக்கு பொருத்தமானவற்றை பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

மூணாறு அமைவிட வரைபடம்


Updated On 14 April 2025 6:12 PM IST
ராணி

ராணி

Next Story