நீளமான முடி இருப்பவர்களுக்கு விதவிதமான ஹேர் ஸ்டைல் செய்யலாம் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆனால் நிறையப்பேருக்கு முடி வறண்டு இருப்பதுடன், சிறிதாகவும், வேவி அல்லது சுருளாகவும் இருக்கும். அவர்கள் மற்ற நாட்களைவிட தங்களுடைய திருமணத்திற்கு என்ன ஹேர் ஸ்டைல் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். வறண்ட, நீளம் மற்றும் அடர்த்தி குறைவான, அதேசமயம் சுருள் முடியில்கூட சூப்பரான ஹேர்ஸ்டைல் செய்யலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா. மணப்பெண்ணுக்கு எக்ஸ்டன்ஷன் வைத்து வெஸ்டர்ன் ஹேர் ஸ்டைல் எப்படி செய்யலாம் என செய்துகாட்டுகிறார்.
பிரைடல் ஹேர் ஸ்டைல்
வறண்ட மற்றும் சுருள்முடிகொண்டவர்களுக்கு அயர்னிங் மற்றும் க்ரிம்பிங் செய்து ஹேர்ஸ்டைல் செய்தால் பார்க்க நன்றாக இருக்கும். அதேபோல் தலைமுடி அடர்த்தி இல்லாவிட்டால் எக்ஸ்டன்ஷன் வைத்துக்கொள்ளலாம். முன்பகுதியில் பஃப் வைத்துவிட்டு, கீழே இருக்கும் முடியை எக்ஸ்டன்ஷனுக்கு ஏற்றவாறு கர்ளிங் செய்துகொள்ளலாம்.
மேற்பகுதி முடியை அயர்ன் செய்து பஃப் வைத்தல்
ஹேர் ஸ்டைலை தொடங்குவதற்கு முன்பு, போட்டிருக்கும் உடைக்கு ஏற்றவாறு நெற்றிசுட்டி வைக்கவேண்டும். மணப்பெண் விருப்பப்பட்டால் முன்பகுதியில் சிறிது முடியை விட்டுக்கொள்ளலாம்.
ஒரே சீராக பஃப் வைக்கவேண்டும், அதேசமயம் அது நீண்டநேரம் கலையக்கூடாது என்றால் பேக் கோம்ப் பயன்படுத்தி சீவி வைக்கவேண்டும். மேற்பகுதியில் ஒருபக்க காதின் பக்கவாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள்நோக்கி முடியை எடுத்து பேக் கோம்ப் செய்துகொண்டே வரவேண்டும். ஒவ்வொரு முறை சீவியபிறகும் ஸ்ப்ரே அடிக்கவேண்டும். இப்படி இரண்டு பக்கமும் செய்யவேண்டும்.
பஃப் வைத்த முடியின் கீழ்பகுதியை கர்ள் செய்தல்
பேக் கோம்ப் செய்தபிறகு மேல்பகுதியில் அழுத்தி சீவாமல் மென்மையாக சீவி ஸ்ப்ரே அடித்து பஃப் வைத்து, டெய்ல் கோம்பால், வேண்டிய அளவிற்கு இழுத்துவிட்டு பின் செய்யவேண்டும்.
ஏற்கனவே வைத்திருக்கும் பஃப் முடி மேற்பகுதியில் இருக்கும்படி கீழே எக்ஸ்டன்ஷன் வைக்கவேண்டும். எக்ஸ்டஷன் கர்ளியாக இருப்பதால் மற்ற முடியையும் கர்ள் செய்ய, முதலில் மூஸ் (hair mousse) தடவவேண்டும். சாதாரணமாக கர்ள் செய்தால் சரியாக நிற்காது என்பதால் இதுபோல் மூஸ் தடவி செய்தால் நன்றாக நிற்கும். மூஸை ஹேர் ஸ்டைலிங் ஜெல் என்று சொல்கின்றனர்.
கர்ள் செய்த முடியானது அடர்த்தியாக தெரியும்வகையில் பிரித்துவிடுதல்
பெரிய கர்ள் அல்லது சிறிய கர்ள் என எது வேண்டுமோ அதற்கேற்றாற்போல் கர்ளிங் மெஷினை பயன்படுத்தி கர்ள் செய்யவேண்டும். அப்படி கர்ள் செய்யும்போது மேலே குத்தியிருக்கும் ஹேர் பின் கழன்றுவிடாமல் கவனமாக செய்யவேண்டும். சிலருக்கு முடியின் அடர்த்தி குறைவாக இருக்குமென்பதால் அந்த கர்ளை லேயர்களாக பிரித்தும் விட்டுக்கொள்ளலாம். மூஸ் தடவியிருப்பதால் கர்ளிங் மெஷினில் அதிக டெம்ப்ரேச்சர் வைக்க தேவையில்லை. கர்ள் செய்தால் முடி சேதமடையும் என நினைப்பவர்கள் முன்பகுதியில் மட்டும் பஃப் வைத்துக்கொண்டு கீழே செயற்கை எக்ஸ்டன்ஷனை வைத்து மேட்ச் செய்துகொள்ளலாம்.
செயற்கை பூக்களை வைத்து அலங்கரித்தல்
மொத்த முடியையும் கர்ள் செய்துமுடித்தபிறகு செயற்கை பூக்களை வைத்து பின் செய்து கடைசியாக செட்டிங் ஸ்ப்ரே அடித்தால் வெஸ்டர்ன் ஹேர்ஸ்டைல் வித் எக்ஸ்டன்ஷன் ரெடி! இந்த ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் செய்வதற்கு நேரம் தேவைப்படும் என்பதால் குறைந்தது ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பிருந்தே மேக்கப்பை தொடங்கவேண்டும்.
