மணப்பெண் அலங்காரத்திற்கு எவ்வளவு நேரம் தேவையோ அதே அளவிற்கு ஹேர்ஸ்டைலுக்கும் நேரம் தேவைப்படும். அதனாலேயே முகூர்த்த நேரங்களில் கொஞ்சம் சிம்பிளான ஹேர்ஸ்டைல் போட்டு பூ அலங்காரம் செய்தாலே போதும் என்று மணப்பெண் வீட்டார் சொல்லிவிடுவார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, போடுவதற்கு எளிதாகவும், அதேசமயம் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் இருக்கக்கூடிய புது புது ஹேர்ஸ்டைல்களை அழகுக்கலை நிபுணர்கள் செய்ய தொடங்கிவிட்டார்கள். அப்படி வெறும் 20 நிமிடங்களுக்குள் செய்யக்கூடிய இப்போது டிரெண்டிங்கில் உள்ள முகூர்த்தம் ஹேர்ஸ்டைலை செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா. இதில் சிறப்பு என்னவென்றால் சாதாரண பின்னல் போன்று இல்லாமல் 6 கற்றைகள் கொண்ட வித்தியாசமான ஹேர்ஸ்டைலாகவும் இது இருக்கும் என்பதுதான்.
எந்தவொரு ஹேர்ஸ்டைலை செய்வதற்கு முன்பும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு க்ரிம்பிங், கர்ளிங் அல்லது ஸ்ட்ரெய்டனிங் செய்து ஹேர்ஸ்டைலை தொடங்கலாம். முன்பகுதியில் நடு வாகு எடுத்து மேல்பகுதி முடியை மட்டும் இரண்டாக பிரித்துவைக்கவும். பின்பகுதியிலிருக்கும் முடியை சீவி பின் செய்யவும். டெயில் கோம்பால் பஃப் இழுத்துவிடவும்.
முன்பக்க பக்கவாட்டில் போடப்படும் டிவிஸ்ட் அல்லது பின்னல் ஸ்டைல்
கீழ்ப்பகுதியில் இருக்கும் முடியை எடுத்து பின்னல் போட்டுக்கொள்ளலாம். அதற்கு சவுரி முடியை எடுத்து, பின் செய்த முடிக்கு கீழ்ப்பகுதியில் வைத்து பிடித்துக்கொண்டே மேலுள்ள முடியில் கொஞ்சம் எடுத்து அதனுடன் சேர்த்து வைத்து பின்னல் போட்டு பின் செய்யவும். அடுத்து மற்றொரு சவுரி முடியை எடுத்து அதை இரண்டாக பிரித்து பிடித்து மேலே விட்ட முடியுடன் சேர்த்து பின்னல் போட்டு பின் செய்யவும்.
சவுரி முடிகள் இரண்டும் வெளியே தெரியும் என்பதால், முன்பகுதியில் எடுத்துவிட்டிருந்த இரண்டுபக்க முடியையும் பின்பக்கமாக கொண்டுசென்று, சவுரி வெளியே தெரியாதவாறு பின் செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்பு முன்பக்கத்திலும் கொஞ்சம் ஸ்டைல் வேண்டுமென்பதால் அந்த முடியை ட்விஸ்ட் செய்தோ அல்லது சிறுசிறு பின்னல் போட்டோ பின்பக்கம் கொண்டுசெல்லலாம். ஏற்கனவே சொன்னதுபோன்று சவுரி இரண்டும் வெளியே தெரியாதவாறு மேல்முடியை பெரிய ஹேர்பின்கள் கொண்டு பின் செய்துகொள்ள வேண்டும்.
சவுரிமுடிகளை தலைமுடியுடன் சேர்த்து பின்னுதல்
பின் செய்த முடியை அப்படியே விட்டுவிட்டு கீழுள்ள முடியை சாதாரண பின்னல் போடுவதைப்போன்றே இரண்டு ஜடைகளை சேர்த்து போடவேண்டும். அதற்கு ஒரு ஜடையின் ஒரு பின்னல் முழுவதும் முடிந்ததும், பக்கவாட்டிலுள்ள கற்றையை அடுத்த ஜடையுடன் சேர்த்து பின்னல் போடவேண்டும். இப்படி போடுவதால் இரண்டு ஜடைகள் ஒட்டியவாறே சேர்ந்தவண்ணம் வரும்.
மேலிருந்து கீழ்வரை பின்னல்போட்டபிறகு கீழுள்ள முடியை ஒரே ஜடையாக சேர்த்து பின்னி குஞ்சம் வைத்து பின்னல் போட்டு நூலால் இறுக்கி கட்டவேண்டும்.
இப்போது மேல்பகுதியில் சவுரியை மறைக்க ஹேர்பின் குத்தியதுபோக, வெளியே இருக்கும் முடியை சேர்த்து ரப்பர் பேண்டு போட்டு, டோனட் வைத்து அதை முடியை கொண்டே மறைத்து ரப்பர் பேண்டு போட்டு மீதமுள்ள முடியை டோனட்டின் கீழே சுற்றி பின்செய்துவிடவேண்டும். டோனட் செட்டாகாவிட்டால் அந்த முடியை மட்டும் அப்படியே சுற்றி பின்செய்து அதன்மீது பூவைத்து மறைத்துக்கொள்ளலாம்.
பூக்கள் மற்றும் ஸ்டோன்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட 6 கற்றை ஹேர்ஸ்டைல்
பொதுவாக 3 கற்றைகள் எடுத்துதான் ஜடை போடுவார்கள். ஆனால் இந்த ஹேர்ஸ்டைலில் 2 சவுரிகள் வைத்து 6 கற்றைகள் கொண்ட ஜடை போடுவதால் பார்க்க அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும். பின்னலில் சற்று இடைவெளி விட்டு கீழுள்ள முடியை ஸ்டோன்கள் வைத்து அலங்கரிக்கலாம். பக்கவாட்டில் உள்ள முடிகளில் கலர் நூல் அல்லது கலர் டேப் சுற்றியும் ஸ்டைல் செய்யலாம். இல்லாவிட்டால் பெர்ல் அல்லது சிறிய ஸ்டோன்களும் வைக்கலாம். பெர்ல் வைக்கும்போது அதிலுள்ள ஊசி முதுகில் குத்த வாய்ப்புகள் இருப்பதால் கீழாக திருப்பி குத்தவேண்டும்.
இந்த ஜடையில் ஜுவெல் வைப்பதற்கு பதிலாக பூக்கள் கொண்டும் அலங்கரித்துக்கொள்ளலாம். அதேபோல் மேலே மல்லிகைப்பூவிற்கு பதிலாக செயற்கைப்பூக்களை கொண்டும் அலங்கரிக்கலாம். வேண்டுமானால் நெற்றிச்சுட்டி வைத்துக்கொள்ளலாம்.
