இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நடிகர் நடிகைகளின் முகங்கள் மேக்கப் போடாவிட்டாலும் எப்போதும் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கும். அதற்கு பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பராமரிப்புகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, வயதானாலும் இளமையாக தெரிய பல்வேறு அட்வான்ஸ்டு சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. ஆனால் அந்த சிகிச்சைகளால் எந்த அளவிற்கு பலன் கிடைக்குமோ அதே அளவிற்கு அந்த சிகிச்சைகளுக்கு ஆகும் செலவும் மிகமிக அதிகமாக இருப்பதால் எல்லா தரப்பினராலும் அவற்றை செய்யமுடியாது. அதேபோல் தினசரி வேலைக்கு செல்பவர்களுக்கும் அடிக்கடி பார்லர்களுக்குச் சென்று தங்களை பராமரித்துக்கொள்ளவோ, அழகுபடுத்திக்கொள்ளவோ நேரம் இருக்காது. ஆனால் அதிக செலவு செய்யாமல் கிடைக்கும் நேரத்தில் வீட்டிலிருக்கும் பொருட்களை சரியாக பயன்படுத்தினாலே விரும்பிய முகப்பொலிவு மற்றும் அழகான தலைமுடியை எப்படி பெறலாம் என டிப்ஸ் கொடுக்கிறார் அழகுக்கலை நிபுணர் லதா.

முகம் பளபளப்பாக இருக்கவேண்டும், சருமம் வறட்சியாக இருக்கக்கூடாது, சுருக்கங்கள் இருக்கக்கூடாது என்பது பலரின் ஆசை. அப்படிப்பட்ட சருமம் வேண்டுமென ஆசைப்படுபவர்கள் கேரட்டை சீவி, பாதாம் ஆயிலில் சேர்த்து நன்றாக வதக்கி, எண்ணெயை வடிகட்டி தனியாக எடுக்கவும். இதை தினமும் 2 சொட்டு எடுத்து முகத்தில் தடவ வேண்டும். அப்படி தடவும்போது கீழிருந்து மேலாக மசாஜ் செய்யவேண்டும். இதனை தொடர்ந்து செய்துவர முகத்திலிருக்கும் சுருக்கங்கள் மறைந்து சருமம் பளிச்சென மாறுவதை கண்கூடாக பார்க்கலாம். அதேபோல் வறட்சியும் நீங்கிவிடும். இந்த எண்ணெயை பயன்படுத்தும்போது சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷையும் பயன்படுத்தினால் நல்ல ரிலச்ட் கிடைக்கும். குறிப்பாக, இளமையானதைப் போன்று உணர்வீர்கள்.


முக பளபளப்புக்கு சிறந்த கேரட்- பாதாம் ஆயில் எண்ணெய் மசாஜ்

முகப்பரு தொல்லை அதிகம் இருப்பவர்கள் கொழுந்து வேப்பிலையை மிக்ஸியில் மைய அரைத்து, அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து முகப்பருவின்மீது தடவி 15 நிமிடங்கள் வைக்கவேண்டும். அதன்பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்தாலே முகத்திலிருக்கும் பருக்கள் படிப்படியாக குறைவதுடன், அந்த தழும்புகளும் மறையும்.

பார்லருக்கு சென்று ப்ளீச் செய்யமுடியாதவர்களும் விரும்பாதவர்களும் வீட்டிலேயே அந்த பளபளப்பை முகத்தில் வரவைக்கலாம். அதற்கு, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆலம் விழுது பொடியை பயன்படுத்தலாம். வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பை சிறிது எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் கரைத்து வைக்கவேண்டும். கலக்கும்போது பால் நிறத்தில் இருக்கும் நீர் அடுத்த நாள் தெளிந்து சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும். அந்த நீரை மட்டும் 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்து ஆலம் விழுது பொடியுடன் கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து கழுவினால் ப்ளீச் செய்தது போன்ற பொலிவு உடனடியாக கிடைக்கும்.


கருவளையம் நீங்க வெள்ளரிக்காயை அரைத்து கண்களை சுற்றிலும் தடவுதல்

தொடர்ந்து செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் நிறையப்பேருக்கு கருவளையம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு கண்கள் மிகவும் சோர்வடைந்து காணப்படும். அவர்களுக்கு சிறந்த தீர்வளிக்கிறது வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயை கண்களில் வைத்தால் குளிர்ச்சி தரும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அப்படி வைக்காமல், வெள்ளரிக்காயை மிக்ஸியில் அரைத்து கண்களை மூடியவாறு கண்களுக்கு மேலும் சுற்றிலும் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து கழுவ கண்கள் ஃப்ரஷ்ஷாக இருக்கும். கண்கள் சிவந்திருந்தாலும் அதுவும் மாறி புத்துணர்ச்சி பெறும்.

கருவளையம் மிகவும் அதிகமாக இருப்பவர்கள் பீர்க்கங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் மைய அரைத்து கண்களை சுற்றி தடவவேண்டும். இதை 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து கழுவவேண்டும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படி செய்துவர, கருவளையம் மறைவதுடன், கண் வீக்கமும் குறையும்.


தலைமுடி வறட்சியை நீக்க உதவும் தேங்காய்ப்பால்

நிறையப்பேருக்கு தலைமுடி வறட்சியாகவும், பளபளப்பின்றியும் இருக்கும். எந்த ஷாம்பு பயன்படுத்தினாலும் ரிசல்ட் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவார்கள். இவர்கள் பார்லர்களுக்கு சென்றால் தலைமுடியின் தன்மைக்கு ஏற்றவாறு சீரம்களை பயன்படுத்தி ஸ்பா போன்றவை செய்யப்படும். ஆனால் பார்லர்களுக்கு செல்லமுடியாதவர்கள் வீட்டிலேயே எப்படி அந்த ரிசல்ட்டை பெறலாம் என்று பார்க்கலாம். இவர்கள் தலைமுடியை ஷாம்புவால் முதலில் கழுவவேண்டும். அதன்பிறகு முதல் தேங்காய்ப்பாலை எடுத்து முடியில் நன்றாக தடவி, 1 மணிநேரம் வைத்திருந்து குளிர் தண்ணீரில் கழுவ முடி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்துவர ஒரு மாதத்திற்குள் முடி ஷைனிங்காகவும், பொலிவுடனும் இருக்கும்.

Updated On 24 Dec 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story