திருமணம் என்றாலே மேக்கப் இல்லாத ஒரு மணப்பெண்ணை பார்க்கமுடியாது. எனவே இப்போதெல்லாம் முகூர்த்தம் மற்றும் ரிசப்ஷன் மேக்கப் செலவு. திருமண பட்ஜெட்டில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்பதை நம்மால் மறுக்கமுடியாது. அதற்கேற்றாற்போல் அதே அளவிற்கு மேக்கப் துறையிலும் பல்வேறு ப்ராடக்டஸ் மற்றும் வளர்ச்சிகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சருமத்தின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு தனித்தனியாக பிராடக்ட்ஸ் கிடைக்கின்றன. நமது சருமத்திற்கு ஏற்றவாறு மேக்கப் போடும்போது அது பார்ப்பதற்கு அழகாக தெரிவதோடு நீண்ட நேரம் கலையாமலும் இருக்கும். வறண்ட சருமம் கொண்ட பெண்களுக்கு முகூர்த்தத்திற்கான மேக்கப் லுக்கை செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் நான்ஸி.
வறண்ட சருமம் என்பதால் முதலில் மாய்ச்சுரைசர் போட்டுதான் மேக்கப்பை ஆரம்பிக்க வேண்டும். அடுத்து பிரைமர் போட்டுக்கொள்ளலாம். வறண்ட சருமத்தின்மீது திக்கான கன்சீலர்களை பயன்படுத்தக்கூடாது. எனவே ஒரு லைட்டான கன்சீலர் கொண்டு முகத்தில் கருமை படிந்திருக்கும் இடங்களில் கலர் கரெக்ஷன் செய்யவேண்டும். அடுத்து ஆங்காங்கே இருக்கும் கரும்புள்ளிகளை ஆரஞ்சு கரக்டர் கொண்டு மறைக்கவேண்டும்.
கலர் கரெக்ட்டிங் செய்தபிறகு ஃபவுண்டேஷன் போடுதல்
கன்சீலர் மற்றும் கரெக்டரை பிளெண்டர் பயன்படுத்தி நன்றாக பிளெண்ட் செய்யவேண்டும். எந்த அளவிற்கு நன்றாக பிளெண்ட் செய்கிறோமோ அந்த அளவிற்கு மேக்கப் சூப்பராக இருக்கும். முகத்தில் தடவியிருக்கும் எதுவும் பிளெண்டரில் ஒட்டாத வகையில் பிளெண்ட் செய்யவேண்டும்.
அடுத்து ஃபவுண்டேஷனை பிரஷ்ஷால் தொட்டு தடவவேண்டும். இப்படி ஃபவுண்டேஷன் போடும்போதே அதை பயன்படுத்தியே புருவங்களின் ஓரத்தை வடிவமாக வரைந்துகொள்ளலாம். சிலருக்கு சரும நிறத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷன் இல்லாவிட்டால் அதற்கு முந்தைய மற்றும் அடுத்த ஷேடுகள் இரண்டையும் கலந்து தகுந்த நிறத்தை கொண்டுவரமுடியும். சரியான நிறத்தை கொண்டுவந்த பிறகு பிளெண்டரால் முகத்தில் நன்றாக செட்டாகும்வரை டேப் செய்யவேண்டும். அதற்காக வலிக்கும்படியும் செய்யக்கூடாது. சிலர் தெரியாமல் கீழே இழுத்துவிடுவார்கள். அப்படி செய்தால் ஒரே சீராக முகத்தில் ஒட்டாது.
புருவங்களை வரைந்து ஒரே சீராக இருக்கும்படி சீவி விடுதல்
முகம் முழுவதும் ஃபவுண்டேஷன் போட்டு செட்டான பிறகு நெற்றியின் நடுப்பகுதி மற்றும் கண்களுக்கு கீழ்ப்பகுதிகளில் ஷைனிங்கான கன்சீலரை பிரஷ்ஷால் தொட்டு தடவி பிளெண்ட் செய்யவேண்டும்.
அடுத்து புருவங்களை வரைய வேண்டும். மேக்கப் போட பழகும் பலருக்கு புருவங்களை ஒரே மாதிரி வரைவது அவ்வளவு சுலபமல்ல. சில நேரங்களில் தவறாக போட்டுவிடுவார்கள். அப்படி இரண்டும் சீராக இல்லாவிட்டால் ஃபவுண்டேஷன் கொண்டு கரெக்ட் செய்துகொள்ளலாம். புருவங்களை ஒரே சீராக அடர்த்தியாக வரைந்து, ஐப்ரோ பிரஷ்ஷால் உள்ளிருந்து வெளிநோக்கி சீவி விட வேண்டும்.
ஐலைனர் மற்றும் ஐஷேடோ போட்டபிறகு மஸ்காரா போடுதல்
அடுத்து கண்களின் மேல்பகுதியில் லூஸ் பவுடர் தடவி அதன்மீது ஐஷேடோ போடவேண்டும். போட்டிருக்கும் உடையின் நிறத்திற்கு ஏற்றவாறோ அல்லது நியூடு ஷேடிலோ ஐஷேடோ போட்டால் பார்க்க அழகாக இருக்கும். எப்போது ஐஷேடோ போட்டாலும் பிரஷ்ஷில் எடுத்தவுடன் அப்படியே கண்களின்மீது போடாமல் முதலில் இரண்டு டேப் செய்து துகள்களை தட்டிவிட்ட பிறகுதான் கண்களுக்கு அருகில் கொண்டுசெல்ல வேண்டும்.
அடுத்து ஐலைனர் போடவேண்டும். கண்களுக்கு கீழ்ப்பகுதியிலேயும் மேலே போட்டிருக்கும் ஐஷேடோவை சிறிது போட்டு நன்றாக ஸ்மட்ஜ் செய்துவிட்டால் கண்கள் பார்க்க அழகாகவும் பெரிதாகவும் தெரியும். கடைசியாக மஸ்காரா போட்டுவிட்டால் ஐ மேக்கப் முடிந்துவிடும்.
உதட்டிற்கு அவுட்லைன் வரைந்து உட்புறத்தில் லிப்ஸ்டிக் ஃபில்லிங் கொடுத்தல்
அடுத்ததாக லிப்ஸ்டிக் போடவேண்டும். அதற்கு முதலில் லிப்லைனர் பயன்படுத்தி அவுட்லைன் வரைந்து, அதற்குள் லிப்ஸ்டிக் போட்டு ஃபில் செய்யவேண்டும்.
ஒரு மேக்கப்பிற்கு ஃபினிஷிங் லுக் வேண்டுமானால் ஹைலைட்டர் கண்டிப்பாக பயன்படுத்தவேண்டும். பெரிய தட்டையான பிரஷ்ஷால் ஹைலைட்டரை எடுத்து கீழே தட்டி பிறகு இரண்டு பக்க கன்னங்களிலும், நெற்றியிலும் லைட்டாக போட்டால் மேக்கப் முடிந்துவிடும். கடைசியாக நெற்றிச்சுட்டி வைத்து பொட்டு வைத்தால் முகூர்த்தம் லுக் ரெடி!
