இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கிறிஸ்தவ திருமணங்கள்தவிர மற்ற மத திருமணங்களில் மணப்பெண்களுக்கு பாரம்பரிய ஹேர்ஸ்டைல் செய்வதே வழக்கம் என்றாலும் ரிசப்ஷன் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகள் எந்த மதமாக இருந்தாலும் பெரும்பாலும் வெஸ்டர்ன் முறைகளில்தான் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, மணப்பெண், மணமகன் இருவருமே ஸ்டைலான அதேசமயம் சிம்பிளான லுக்கில் இருக்கவே ஆசைப்படுகின்றனர். அப்படி செய்யப்படும் மணப்பெண் அலங்காரங்களில் ஹேர் ஸ்டைல் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தப்படுவை டியாரா என்று சொல்லக்கூடிய ஒருவகை மலர்கள். அவை வெவ்வேறு கலர்களில் வெவ்வேறு வடிவங்களில் கிடைப்பதால் எந்தவகையான சிம்பிள் ஹேர்ஸ்டைலாக இருந்தாலும் இவற்றை பொருத்தி மேலும் அழகாக்கலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் பிரியா. மேலும் வீட்டிலிருக்கும் பெண்கள் டியாரா செய்வதையே எப்படி பிசினஸாக்கலாம் என சொல்லிக்கொடுக்கிறார் அவர்.

ஆன்லைன் மற்றும் கடைகளில் ஒரு டியாராவின் விலை ரூ. 500 முதல் ரூ.700 என விற்கப்படுகிறது. ஆனால் இதை செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களை வாங்க ஆகும் செலவானது ரூ.100 முதல் ரூ.200க்குள்தான் இருக்கும்.

டியாரா செய்ய பயன்படுத்தும் பூக்களின்பெயர் பேபி பட்ஸ் ஃப்ளவர். இவை பெரும்பாலான பூக்கடைகளில் கிடைக்கும். இதிலும் செயற்கை மற்றும் இயற்கை பூக்கள் இருக்கின்றன. இந்த பூக்களை அப்படியே வெள்ளை நிறத்திலேயோ அல்லது விருப்பமான கலர்களை அடித்தோ டியாரா செய்யலாம் அல்லது டியாரா செய்தபிறகும் கலர் செய்துகொள்ளலாம்.


பாக்ஸை சுற்றிக் கட்டிய நூலின் நடுவே பேபி பட்ஸ் பூக்களை அடுக்கி முடிச்சுப்போடுதல்

டியாரா(மலர் கிரீடம்) செய்முறை

டியாரா செய்ய ஒரு நீளமான பாக்ஸ் அல்லது எக்ஸாம் பேடை எடுத்துக்கொள்ளவும். அதன்மீது நீளவாக்கில் இரண்டு லேயர்களாக நூலை சுற்றி, ஆரம்பித்த நுனியுடன் வெட்டாமல் அப்படியே முடிச்சுப்போடவும். முடிச்சு போட்ட நூலினை பாக்ஸை சற்று நீளம்விட்டு வெட்டவும்.

இரண்டு லேயர்களாக சுற்றிய நூலின் நடுவில் பூக்களை தேவையான அளவு கட் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வைத்து, நீளமாக விடப்பட்டுள்ள நூலால் முடிச்சுபோட்டு கட்டவேண்டும்.

அதாவது கொஞ்சம் பேபி பட்ஸை கொத்தாக எடுத்து இரண்டு நூல்களுக்கு நடுவில் வைக்கவும். நீளமாக விட்டுள்ள நூலை எடுத்து, பூக்கள் வைத்திருக்கும் இரண்டு நூல்களை சேர்த்தவாறு சுற்றினால் தானாக முடிச்சு விழுந்துவிடும்.


பூக்களின்மீது பிடித்த கலர்களை ஸ்ப்ரே செய்தல்

இப்படி தேவையான நீளத்திற்கு பூக்களை வைத்து கட்டி, கடைசியாக பூக்கள் உடையாதவாறு இறுக்கி முடிச்சு போட்டு கட்டவேண்டும். மீதமுள்ள நூலை வெட்டிவிட வேண்டும். தானாகவே கொஞ்சம் வளைந்து வில் வடிவில் இது வந்துவிடும். பூக்களின் காம்பானது மேலும் கீழும் இல்லாமல் சரிசமமாக இருக்கும்படி வெட்டிக்கொள்ள வேண்டும்.

போட்டிருக்கும் உடைக்கு ஏற்ற கலரை இந்த பூக்களுக்கு கொடுத்துக்கொள்ளலாம். கலர் ஸ்ப்ரே வேண்டுமானாலும் அடிக்கலாம்.

பேபி பட்ஸ் மட்டுமல்லாமல் மல்லிகைப்பூ மற்றும் ரோஜா இதழ்களைக் கொண்டும் இதை செய்யலாம். இதற்கு நடுவே பிளாஸ்டிக் பூக்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.


பிடித்த கலரில் உருவாக்கப்பட்ட டியாரா

டியாராவை கொண்டை மீதோ அல்லது கர்ள் செய்த முடியிலோ வைத்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

டியாரா செய்வதற்கு குறைந்த செலவே ஆகுமென்பதால் வீட்டிலிருந்தபடியே இதை பிசினஸாக செய்யும்போது நல்ல லாபம் பார்க்கலாம். பேபி பட்ஸ் பூக்களானது சீக்கிரத்தில் காயாது என்பதால் ஒரு பாக்ஸ் வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து நிறையப் பேருக்கு செய்துகொடுக்கலாம்.

Updated On 28 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story