இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திருமணத்தில் முகத்திற்கு மேக்கப் போட்டுக்கொள்வது, பிடித்த சேலையை கட்டிக்கொள்வது எந்த அளவிற்கு மணப்பெண்களுக்கு பிடித்தமானதோ அதே அளவிற்கு தலைமுடியை அலங்கரித்துக்கொள்வதும் மிகவும் பிடிக்கும். திருமணம், நிச்சயதார்த்தம், சடங்கு என பாரம்பரிய முறைப்படி செய்யும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பூக்களால் சிகை அலங்காரம் செய்துகொள்ளவே பெரிதும் ஆசைப்படுவர். அந்த அலங்காரங்கள் செய்வதற்கு எந்த அளவிற்கு சிரத்தை எடுக்கவேண்டுமோ, அதே அளவிற்கு அதற்கு பயன்படுத்தும் பூக்கள், வேணி, பென்டன்ட் போன்றவற்றை செய்வதற்கும் சிரத்தை எடுக்கவேண்டி இருக்கும். முகூர்த்த நாட்களில் இதுபோன்ற சிகை அலங்காரப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படும் என்பதால் சிலர் அதை வாங்க தயங்குவார்கள். அதுபோன்றோர் வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த பூவை பயன்படுத்தி பிடித்த வடிவங்களில், பிடித்த அளவுகளில் வேணி, மலர் பென்டன்ட் போன்றவற்றை செய்துகொள்ளலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் பிரியா. கடந்த இரண்டு வாரங்களாக டியாரா மற்றும் வேணி எப்படி செய்வது என்று சொல்லிக்கொடுத்த அவர், இந்த வாரம் வேணியுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடிய கிருஷ்ணர் உருவம் பதித்த பென்டன்ட் எப்படி செய்வது என்று செய்துகாட்டுகிறார்.

"ஜடை வில்லை மலர் பென்டன்ட்" செய்முறை

மலர் பென்டன்ட் செய்ய தையிலைகளை பயன்படுத்த வேண்டும். தையிலைகளை கடையில் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் இந்த இலை கிடைக்காதபட்சத்தில் தெர்மாகோல் அல்லது கார்டு போர்டு அட்டையை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை ஹார்ட், வட்டம் என விருப்பமான வடிவங்களில் கட் செய்துகொள்ளவேண்டும். தையிலையை பயன்படுத்தினால் நான்கைந்து இலைகளை ஒன்றாக வைத்து பிடித்த வடிவத்தில் கட் செய்து அதை ஒன்றாக சேர்த்து தைத்துக்கொள்ள வேண்டும்.


தையிலைமீது ரோஜா இதழ்களை சுருட்டி வைத்து தைத்தல்

பெரிய ரோஜாப்பூவை எடுத்து அதன் இதழ்களை தனியாக பிரித்து எடுக்கவேண்டும். ஒவ்வொரு இதழாக எடுத்து அதை கட் செய்து வைத்திருக்கும் தையிலையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக மடித்து வைத்து நைலான் நூல் கோர்த்திருக்கும் பெரிய ஊசியால் துணி தைப்பதைப் போன்று தைக்கவேண்டும். ரோஜா இதழில் முதலில் செய்து பழகினால் இதழ் மென்மையாக இருப்பதால் இதழ் கிழிந்துவிடும். எனவே மல்லிகைப்பூ அல்லது நந்தியாவட்டப்பூவை வைத்து செய்து பழகவேண்டும்.

ரோஜா இதழ்களை மடிக்கும்போது அது வட்டமாக இருப்பதைப்போன்று சுருட்டியவாறு மடித்து அடிப்பகுதி வெளியே இருக்குமாறு, இதழின் மேற்பகுதியை இலையில் சேர்த்து வைத்து தைக்கவேண்டும். அப்படி வைக்கும்போது வெளியே தெரியும் பகுதியானது ஒரே அளவில் இருக்கும்படி சீராக வைத்து தைப்பது அவசியம். இந்த பென்டன்ட்டில் ஒரு பக்கம் மல்லிகை, ஒரு பக்கம் ரோஜா இதழ் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.


ஜடை வில்லை நடுவில் நமக்கு பிடித்த உருவங்களையோ, நகைகளையோ வைத்து நைலான் நூலால் சுற்றி கட்டுதல்

பென்டன்ட்டை சுற்றிலும் ரோஜா இதழ்களை வைத்து தைத்தபிறகு நடுவில் கிருஷ்ணர் பொம்மையை பொருத்தவேண்டும். பொம்மையை நடுவில் வைத்து இலையுடன் சேர்த்து பிடித்து பூ இதழ்களை தைத்தது போன்றே இறுக்கமாக நிற்கும்படி சுற்றிக் கட்டி, பின்பகுதியில் முடிச்சு போடவேண்டும். அந்த நைலன் நூலை வெட்டாமல், வேணி அல்லது கொண்டையுடன் சேர்த்து கட்டும்வகையில் இரண்டாக மடித்து தையிலை மற்றும் முடிச்சுப்போட்ட நூலுடன் சேர்த்தவாறு கொஞ்சம் நீளமாக விட்டுக்கொள்ள வேண்டும்.

ரோஜா இதழ்களைப் போன்றே பேபி பட்ஸ் பூக்களை வைத்து பென்டன்ட் செய்து நடுவே வில்லை வைத்தாலும் பார்க்க அழகாக இருக்கும். மணப்பெண் அணியும் ஜுவல் செட்டுடன் வரும் வில்லையையும் நடுவில் வைத்து மேட்சிங்காக பயன்படுத்தலாம். வேணி செய்பவர்களே அதற்கான பென்டன்ட்டையும் செய்துவிடலாம். இதுவும் லாபம் பெறக்கூடிய தொழில்தான்.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story