மற்ற திருமணங்களுடன் ஒப்பிடும்போது இந்து மத திருமணங்களில் சடங்கு சம்பிரதாயங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். முன்பெல்லாம் மணப்பெண் என்றால் மஞ்சள் பூசி, பூ, பொட்டு வைத்து, கைநிறைய வளையல், காலில் கொலுசு என மங்களகரமாக வந்து நிற்பார்கள். ஆனால் காலம் மாறமாற, திருமணம் என்றாலே மேக்கப் இல்லாமலா என்ற நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக, சாதாரணமாக வெளியே செல்லும்போதே கொஞ்சமாவது மேக்கப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படும் பலர், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது இன்னும் கூடுதலாகவே மேக்கப் மற்றும் அலங்காரங்களை செய்துகொள்வார்கள். அதிலும் மணப்பெண் என்றால் சொல்லவே தேவையில்லை. இப்போது திருமண பட்ஜெட்டில் மேக்கப்பிற்கு என்றே தனியாக பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. தான் தனித்துவமாக தெரிவோம் என்ற ஆசையில்தான் அந்த அளவிற்கு சிரத்தை எடுத்து மேக்கப் போடுகின்றனர். அந்த மேக்கப் அழகாகவும், நீண்ட நேரம் கலையாமலும் இருக்க என்னென்ன டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என்பதை இந்து பாரம்பரிய மணப்பெண் அலங்காரம் செய்து விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா.
ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்
எல்லாருமே தினசரி செய்யவேண்டிய க்ளென்சர், டோனர் மற்றும் மாய்ச்சுரைஸர் மூன்றையும் எந்தவொரு மேக்கப் போடுவதற்கு முன்பும் செய்யவேண்டும். மணப்பெண்ணின் முகத்தை க்ளென்ஸ் செய்தபிறகு டோனரை முகத்தில் ஸ்ப்ரே செய்து, காட்டனால் செட் செய்யவேண்டும். பிறகு மாய்ச்சுரைஸர் அப்ளை செய்யவேண்டும். அடுத்து ப்ரைமரை கொஞ்சம் எடுத்து விரலால் முகம் முழுக்க தடவவேண்டும்.
புருவங்கள் அடர்த்தியாக தெரிய ஃபில்லிங் செய்தல்
புருவங்களை வரைவது முகத்தின் வடிவத்தையே மாற்றிக்காட்டும். அதற்கு முதலில் ஐப்ரோ பேஸ் போடவேண்டும். ஏற்கனவே புருவம் கருமையாக இருந்தால் இயற்கையாக தெரிய டார்க் ப்ரவுன் கலரால் ஃபில்லிங் கொடுக்கவேண்டும். அடர்த்தியாக தெரியவேண்டுமென ஆசைப்படுபவர்கள் கருப்பு நிறத்தில் ஃபில்லிங் கொடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து முகத்தில் எங்கெல்லாம் கருமை உள்ளதோ அந்த இடங்களை கன்சீல் செய்யவேண்டும். பொதுவாக கண்களுக்கு கீழும், வாயை சுற்றிலும் கருமை இருக்கும். அந்த இடங்களில் சருமத்தின் நிறத்தைவிட சற்று கூடுதலான டோனில் கன்சீலர் கொண்டு ஃபில் செய்யவேண்டும். கன்சீலர்மீது ஃபவுண்டேஷன் போடும்போது அது கலையாமல் இருக்க, டஸ்டிங் பவுடரை கொஞ்சம் ப்ரஷ்ஷில் எடுத்து பூசவேண்டும்.
தாடை, நெற்றி, மூக்குப் பகுதிகளில் காண்டோர் மற்றும் ஹைலட் செய்தல்
சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷனை சிறிது எடுத்து, அதை ஸ்பாஞ்சால் தொட்டு முகம் முழுக்க ஸ்ப்ரெட் செய்யவேண்டும். சிலருக்கு மூக்கு, தாடை போன்ற பகுதிகள் ஷார்ப்பாக தெரியவேண்டுமென ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு காண்டோர் மற்றும் ஹைலைட் செய்யவேண்டும்.
நெற்றியிலிருந்து தாடை வரை பக்கவாட்டிலும், பிறகு கன்னம் மற்றும் மூக்குப்பகுதிகளில் காண்டோர் மற்றும் ஹைலைட்டரால் கோடுகள் வரைந்து அதை சரிசமமாக ப்ளெண்ட் செய்யவேண்டும். இப்படி செய்யும்போது ஸ்பாஞ்சால் இழுக்காமல் டேப் செய்வது முக்கியம்.
ப்ரஷ்ஷால் லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டில் அவுட்லைன் வரைந்து ஃபில்லிங் கொடுத்தல்
அடுத்து காம்பாக்ட் பவுடரை முகம் மற்றும் கழுத்தில் ப்ரஷ்ஷால் பூசவேண்டும். ப்ரைடல் மேக்கப்பை பொருத்தவரை 4 - 5 மணிநேரத்திற்கு மேக்கப் கலையாமல் இருக்கவேண்டும். எனவே லூஸ் பவுடர்கொண்டு கடைசியாக செட் செய்வது அவசியம்.
கடைசியாக கண்களுக்கு மேக்கப் செய்யவேண்டும். அதற்கு முதலில் கன்சீலர் தடவி, அதன்மீது ஐஷேடோ போடவேண்டும். மாநிற சருமத்திற்கு காப்பர் - ப்ரான்ஸ் கலர் ஐஷேடோ கொடுத்தால் பார்க்க நன்றாக இருக்கும். ஐஷேடோ போடும்போது அவுட்லைன் டார்க்காக கொடுத்து ஃபில்லிங் அதைவிட கொஞ்சம் லைட் கலர் கொடுத்து மெர்ஜ் செய்தால் பார்க்க நன்றாக இருக்கும். ஐஷேடோ நீண்டநேரம் இருக்கவேண்டும் என்பதற்காக ஃபில்லிங் கொடுப்பதற்கு முன்பு அங்கு பேஸ் அப்ளை செய்யவேண்டும். புருவங்களை ஒட்டி கொஞ்சம் லைட் கலரால் ஹைலைட் செய்யவேண்டும்.
இந்து பாரம்பரிய மணப்பெண் அலங்காரம்
காஜலை வாட்டர்லைனில் போடலாம். கண்கள் சிறிதாக இருந்தால் கொஞ்சம் கீழும் போட்டால் கண்கள் பெரிதாக தெரியும். அடுத்து மஸ்காரா போடவேண்டும். அனைத்து ப்ராடக்ட்ஸுமே வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஸ்மட்ஜ் ப்ரூஃபாக இருந்தால் நீண்ட நேரத்திற்கு மேக்கப் கலையாமல் இருக்கும். ஐ-லேஷ் சிறிதாக இருப்பவர்களுக்கு செயற்கை லேஷ்களை பொருத்திக்கொள்ளலாம்.
முகத்திற்கு மேக்கப் முடித்த பிறகு செட்டிங் ஸ்ப்ரே அடித்துவிடலாம். பிறகு உதட்டிற்கு லிப் பாம் தடவி, அதன்மீது லிப்ஸ்டிக் போடவேண்டும். கடைசியாக பொட்டுவைத்து, மீண்டும் மேக்கப் செட்டிங் ஸ்ப்ரே அடித்தால் மணப்பெண் அலங்காரம் முடிந்துவிடும். இந்து திருமணங்களை பொருத்தவரை பட்டு புடவைக்கு ஏற்றாற்போல், தெய்வங்களின் உருவம் பதித்த நகைகளைப் போட்டால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.