வாரந்தோறும் விதவிதமாக மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல்களை பார்த்துவருகிறோம். அதிலும் குறிப்பாக, மணப்பெண் அலங்காரம் குறித்து நிறையப் பார்த்து வருகிறோம். பாரம்பரிய ஸ்டைல் முதல் இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் வரை விதவிதமாக பார்த்து வருகிறோம். அதில் இந்த வாரம், ஏற்கனவே முகூர்த்தத்திற்கு போட்ட மேக்கப்பிலேயே ரிசப்ஷன் லுக்கையும் எப்படி கொண்டு வரலாம் என்று செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் நான்சி. ஏனென்றால் நிறைய திருமணங்களில் முகூர்த்தம் முடிந்த கையோடு ரிசப்ஷனையும் வைத்துவிடுவார்கள். அந்த நேரத்தில் ஏற்கனவே போட்டிருக்கும் மேக்கப்பை கலைத்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து போடுவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால் ஏற்கனவே போட்டிருக்கும் மேக்கப்பில் என்னென்ன ஹைலைட் செய்தால் ஒரே மேக்கப்பில் இரண்டு லுக்ஸை பெறலாம் என டிப்ஸ் கொடுக்கிறார் அவர்.
சருமத்தின் தன்மையை பொருத்து முதலில் மேக்கப் போடவேண்டும். எப்போதும்போல மாய்ச்சுரைஸர் போட்டு மேக்கப்பை ஆரம்பிக்கலாம். அதன்மீது பிரைமர் போட்டு நன்றாக செட்டாக விடவேண்டும். எண்ணெய் மற்றும் சாதாரண சருமத்தின்மீது வேண்டுமானால் கொஞ்சம் திக்கான கன்சீலர்களை பயன்படுத்தலாம். ஏனென்றால் எண்ணெய் சருமத்தில் எளிதில் மேக்கப் வழிந்துவிடும். அதுவே வறண்ட சருமம் என்றால் லைட்டான கன்சீலர்தான் போடவேண்டும்.
ஏற்கனவே போட்டிருக்கும் ஐஷேடோ மீது மீண்டும் சிறிது ஐஷேடோ போட்டு ஹைலைட் செய்தல்
அதன்பிறகு முகத்தில் எங்கெங்கெல்லாம் கருப்பாக இருக்கிறதோ அங்கெல்லாம் ஆரஞ்சு கரக்டர் அல்லது கலர் கரக்டரைக்கொண்டு மறைக்கவேண்டும். ஒவ்வொரு ஸ்டெப்பிலும் அனைத்தும் சருமத்தில் நன்றாக ப்ளெண்டாகும் வண்ணம் போடவேண்டும். எந்தவொரு மேக்கப்பிலும் இது பேஸ்.
அடுத்து ஃபவுண்டேஷனை சரும நிறத்திற்கு ஏற்றாற்போல் தேர்ந்தெடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி பிளெண்டர் பயன்படுத்தி டேப் செய்து நன்றாக பிளெண்ட் செய்யவேண்டும்.
ஃபவுண்டேஷன் காய்ந்தபிறகு நெற்றி, கண்களுக்கு கீழ்ப்பகுதி போன்ற இடங்களில் ஷைனிங்கான கன்சீலர் தடவி ஹைலைட் செய்யவேண்டும்.
அவுட்லைன் கொடுத்து ஏற்கனவே போட்ட லிப்ஸ்டிக்கை டார்க் செய்தல்
அதன்பிறகு இரண்டு புருவங்களும் ஒரே வடிவத்தில் இருக்கும்படியாக ஐப்ரோ பிரஷ்ஷால் வரைந்து ஃபில்லிங் கொடுக்கவேண்டும்.
முகூர்த்தம் மற்றும் ரிசப்ஷன் இரண்டிலுமே கண்கள் மற்றும் உதடு அழகாக தெரியவேண்டும் என்பதற்காகவும், நீண்டநேரம் மேக்கப் கலையாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவும், லூஸ் பவுடர் போட்டு பிரஷ்ஷால் ஐஷேடோவை எடுத்து அதன்மீது போடவேண்டும். அதன்பிறகு ஐலைனர், மஸ்காரா மற்றும் செயற்கை ஐலாஷ் வேண்டுமானால் வைத்து முகத்திற்கான மேக்கப்பை முடித்துக்கொள்ளலாம்.
இப்போது உதட்டிற்கு அவுட்லைன் வரைந்து அதற்குள் டார்க்கான லிப்ஸ்டிக் ஷேடை ஃபில்லிங் கொடுக்கவேண்டும். முகூர்த்தம், ரிசப்ஷன் என இரண்டுக்குமே இந்த மேக்கப் செட்டாகும்.
ஆனால் ரிசப்ஷனின்போது மணப்பெண் என்றால் கண்கள் மற்றும் உதட்டை ஹைலைட் செய்து காண்பிக்க வேண்டும். எனவே முதலில் முகத்திற்கு மேக்கப் போட்டுவிட்ட பிறகு, தலைமுடியை கர்ளிங் செய்ய 15 நிமிடங்கள்தான் ஆகும். ஹேர்ஸ்டைல் செய்தபிறகு மேலும் முகத்தில் சில பகுதிகளை ஹைலைட் செய்தால் ரிசப்ஷனுக்கு இன்னும் அழகாக இருக்கும்.
முகூர்த்தம் லுக்கிலேயே ஃபினிஷ் செய்த ரிசப்ஷன் லுக்
ஏற்கனவே புருவங்களை வரைந்து, காஜல், ஐலைனர் போட்டு, செயற்கை ஐலாஷ்களையும் வைத்தபிறகு, போட்டிருக்கும் உடைக்கு ஏற்றவாறு ஐஷேடோ போடவேண்டும். அதிலும் ரிசப்ஷனின்போது நல்ல லைட்டிங்கில் பார்ப்பதற்கு பளிச்சென தெரியும்வகையில் ஐஷேடோவை இன்னும் டார்க்காக போடவேண்டும். ஐஷேடோ பிரஷ்ஷால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து நன்றாக ப்ளெண்டாகும்வரை தடவ வேண்டும்.
அடுத்து தட்டையான பிரஷ்ஷால் ஹைலைட்டரை எடுத்து நெற்றி, மூக்கு, கண்களுக்கு மேல் பகுதி, கன்னங்கள் மற்றும் தாடைப்பகுதியில் மேலும் கொஞ்சம் ஹைலைட் செய்யவேண்டும். மீண்டும் ஹைலைட் செய்திருப்பதால் இன்னொரு முறை ஐப்ரோ பிரஷ்ஷால் புருவங்களை சீவிவிட வேண்டும்.
கண்களை ஹைலைட் செய்தபிறகு உதட்டையும் ஹைலைட் செய்தால்தான் நன்றாக இருக்கும். ஏற்கனவே போட்டிருக்கும் லிப்ஸ்டிக்கிற்கு மேல் டார்க்கான லிப்ஸ்டிக்கை பிரஷ்ஷால் தொட்டு போடவேண்டும். குறிப்பாக, டார்க் கலர் டிரெஸ் போட்டிருந்தால் லிப்ஸ்டிக்கும் டார்க்காக இருக்கவேண்டும்.
