இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நிறையப்பேருக்கு வித்தியாசமான ஹேர்ஸ்டைல் போடும்போது ஸ்ட்ரெய்ட்னிங், க்ரிம்பிங், கர்ளிங் செய்துகொள்ள பிடிக்கும் என்றாலும், ஒருசிலர் தங்களுடைய முடியை எதுவும் செய்யக்கூடாது என்று நினைப்பார்கள். இருக்கும் முடியில் என்ன ஹேர்ஸ்டைல் செய்யமுடியுமோ அதை செய்தால் போதும் என்பவர்களுக்கான ஹேர்ஸ்டைல் இது. குறிப்பாக, நீண்ட நேரம் தலைமுடிக்கு செலவழிக்க விரும்பாதவர்கள் வேகமாக இந்த ஹேர்ஸ்டைல் செய்துகொள்ளலாம். இது திருமணங்கள் முதல் சாதாரண விசேஷங்களுக்குக்கூட எளிதில் செய்துகொள்ளக்கூடிய ஹேர்ஸ்டைல் என்றாலும்,தனக்குத்தானே செய்துகொள்ள முடியாதது. ஒருவரின் உதவியுடன்தான் செய்யமுடியும். இந்த சிம்பிளான, அதேசமயம் வித்தியாசமாகவும், அழகாகவும் தெரியக்கூடிய மெஸ்ஸி பிரைடட் ஹேர்ஸ்டைலை செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா.

செய்யக்கூடிய ஹேர்ஸ்டைல் கலையாமல் இருக்க முதலில் மூஸ் சீரம் தடவவேண்டும். முன்பகுதியில் சிறிது முடியைவிட்டு வேவி அல்லது கர்ளிங் செய்துகொள்ள விருப்பப்படுபவர்கள் அப்படி செய்துகொள்ளலாம். சாதாரண ஹேர்ஸ்டைல் போடுவதுபோன்று மேற்பக்க முடியை சீவி ரப்பர் பேண்டு பயன்படுத்தி சிறிய போனிடெய்ல் போடவேண்டும். அந்த போனியில் கொஞ்சமாக முடியை மேல்பகுதியில் இழுத்துவிட வேண்டும். அதன்மீது செட்டிங் ஸ்ப்ரே அடித்துக்கொள்ள வேண்டும். இதனால் மேற்பகுதியில் வரிவரியாக தெரியும்.


முதலில் போட்ட போனிடெய்லை உள்ளே விட்டு ஓரங்களிலுள்ள முடியை போனிடெய்ல் போடுதல்

அடுத்து இரண்டுபக்க காதுகளின் ஓரத்திலும் உள்ள முடியை சீவி இரண்டு கற்றைகளாக எடுத்து ஸ்ப்ரே அடித்து இரண்டையும் சேர்த்து அடுத்த போனிடெய்ல் போடவேண்டும். அந்த முடியையும் சிறிது இழுத்துவிட்டு ஸ்ப்ரே அடிக்கவேண்டும்.

இப்போது முதலில் போட்ட போனியை வெளியே எடுத்துவிடவேண்டும். அதை இரண்டாக பிரித்து அதன்நடுவே இரண்டாவது போட்ட போனியை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் முதல் போனியின் அடிப்பக்கத்தில் ரப்பர் பேண்டு போடவேண்டும். இந்த முடியையும் கொஞ்சம் வெளியே இழுத்துவிட்டு ஸ்ப்ரே அடிக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துவிட தெரியாதவர்கள் விரல்களை முடியின் உள்ளே விட்டு அப்படியே ஸ்ப்ரே அடித்தாலும் வரிவரியான தோற்றம் கிடைக்கும்.


அடர்த்தியாக தெரிய முடியை லேசாக இழுத்துவிட்டு ஸ்ப்ரே அடித்தல்

அடுத்து இரண்டு பக்கங்களிலும் லேயர்களாக முடியை எடுத்து நன்றாக சீவி, ரப்பர் பேண்டு போட்டு கீழுள்ள போனியை வெளியே எடுத்துவிட வேண்டும். முன்பு செய்ததுபோன்றே போனியை இரண்டாக பிரித்து கீழுள்ள போனியை அதன் நடுவே எடுத்து மற்றொரு ரப்பர்பேண்டு கீழே போடவேண்டும். ஒவ்வொரு முறையும் ஸ்ப்ரே அடிக்க மறக்கவேண்டாம்.

இப்படி இரண்டு அல்லது மூன்று லேயர் செய்தபிறகு கீழுள்ள முடிக்கு மூஸ் தடவவேண்டும். கீழே செல்ல செல்ல முடியின் அடர்த்தி குறைந்துகொண்டே போகுமென்பதால் இழுத்துவிடாமல் லூஸாக்க வேண்டும். ஆனால் சிலருக்கு மேலிருந்து கீழ்வரை ஒரே மாதிரியாக தெரியவேண்டுமென ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் ஹேர் எக்ஸ்டன்ஷன் வைத்துக்கொள்ளலாம். அப்படி எக்ஸ்டன்ஷன் வைத்து இந்த ஹேர்ஸ்டைல் செய்தால் ஒவ்வொரு லேயரையுமே வேண்டிய அளவிற்கு இழுத்துவிட்டுக்கொள்ளலாம். இதனால் ஒவ்வொன்றுமே தனித்தனியாகத் தெரியும்.


பேபி பட்ஸ் பூக்கள்கொண்டு அலங்கரித்தல்

இந்த ஹேர்ஸ்டைல் போட்டபிறகு எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் பின்னல் போட்டதுபோன்று தெரியும். இதில் ஒவ்வொரு ரப்பர்பேண்டின்மீதும் செயற்கைப்பூக்கள், முத்துக்கள் என எதை வேண்டுமானாலும் வைத்து அலங்கரிக்கலாம். பேபி பட்ஸ் பூக்களை வைத்தால் பார்க்க சிம்பிளாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

இந்த ஹேர்ஸ்டைலில் முடி அடர்த்தியாக தெரியவேண்டுமென ஆசைப்படுபவர்கள் ஹேர் எக்ஸ்டன்ஷன் பயன்படுத்தலாம் அல்லது கிரிம்பிங் செய்து, பிறகு ஹேர்ஸ்டைல் செய்யலாம்.

Updated On 25 March 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story