ஒவ்வொரு பண்டிகை மற்றும் விசேஷ நாட்களுக்கு ஏற்றாற்போல் ட்ரெஸ் போட்டுக்கொள்வது அனைவருக்குமே பிடிக்கும். சிலருக்கு ட்ரெஸுக்கு மேட்சிங்காக நகைகள் போட்டுக்கொள்ள, நெயில் பாலிஷ் வைத்துக்கொள்ள பிடிக்கும். அதுபோல சிலருக்கு விதவிதமான ஹேர்ஸ்டைல் செய்துகொள்ளவும் பிடிக்கும். ஆனால் தனக்குத்தானே ஹேர்ஸ்டைல் செய்வது நிறையப்பேருக்கு மிகவும் கடினமான ஒன்று. அப்படிப்பட்டவர்கள் அழகாக, அதேசமயம் சுலபமாக செய்துகொள்ளக்கூடிய ஒரு கலர்ஃபுல் ஹேர்ஸ்டைலை நமக்கு செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா. நீளமான மற்றும் ஷார்ட்டான என எந்த முடியாக இருந்தாலும் இந்த ஹேர்ஸ்டைலை செய்யலாம்.
தலைமுடியை நன்றாக சீவி, மேல்பகுதியில் வி வடிவில் பார்டீஷியன் எடுக்கவேண்டும். இதில் மூன்று அல்லது நான்கு என எத்தனை பின்னல்களை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
ஆனால் அதற்கு முன்பு, வி பார்டீஷியன் எடுத்த பகுதியை தனியாக மேலே தூக்கி க்ள்ப் செய்துகொள்ள வேண்டும். முதலில் கீழே இருக்கும் முடியை போனிடெய்ல் போட வேண்டும். இதனை சாதாரணமாக போடாமல், சிறிய ரப்பர்பேண்டின் இரண்டு பக்கமும் ஹேர்பின்களை மாட்டிக்கொள்ள வேண்டும். அதில் ஒரு ஹேர்பின்னை போனிடெய்லுக்கு பிடித்திருக்கும் முடியின் மேற்பகுதியில் குத்தவேண்டும். அடுத்து பிடித்திருக்கும் முடியை சுற்றி ரப்பர்பேண்டைக் கொண்டுவந்து மற்றொரு ஹேர்பின்னை ஏற்கனவே குத்தியிருக்கும் ஹேர்பின் மீது குத்தினால் போனிடெய்ல் இறுக்கமாக இருக்கும். இப்படிச் செய்வது சுலபமாக இருக்கும். அதேசமயம் ரப்பர்பேண்டில் முடியை சுற்றும்போது முடி உடைய வாய்ப்பு அதிகம் என்பதால் இப்படி செய்யலாம்.
மேலே பார்டீஷியன் செய்த முடியின் ஒரு பகுதியை கலர் நூலால் கட்டுதல்
அடுத்து மேலே எடுத்து வைத்திருக்கும் முடியில் பின்னல்கள் போடவேண்டும். அந்த பின்னல்களுடன் கலர் கலர் நூல்களை சேர்த்து பின்னவேண்டும். அதற்கு அந்த முடியை மூன்று பகுதிகளாக பிரித்து, ஒரு பகுதியை நூலால் கட்டி அதை பின்னல் போடவேண்டும். பின்னலின் ஒவ்வொரு பிடியிலும் நூல் இருக்கவேண்டும். இந்த பின்னல் போடும்போது முடியில் சிக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு பின்னலிலும் நூல் வெளியே தெரியவேண்டும்.
கலர் நூலால் முடியை முடிச்சுப்போட்டதிலிருந்து போனிடெய்ல்வரை இப்படி பின்னவேண்டும். பிறகு கலர் நூலை கீழே தொங்கவிட்டு, மீதமுள்ள முடியை போனிடெய்ல்மீது சுற்றி பின் செய்யவேண்டும்.
கலர் நூலை தவிர்த்து முடியை போனிடெய்லின்மீது சுற்றுதல்
அடுத்த பகுதி முடிக்கு வேறு கலர் நூல் பயன்படுத்தலாம். முதல் பகுதிக்கு செய்ததுபோன்றே இதற்கும் செய்யவேண்டும். நடுப்பகுதி பின்னலுடன் இருக்கும் நூலை கொஞ்சம் முடியுடன் சேர்த்தே சுற்றிக்கொள்ளலாம்.
அடுத்த பகுதியையும் இதேபோல் செய்து முதல் பகுதி பின்னலைப்போன்றே முடியுடன் சுற்றவேண்டும். கடைசியாக கொஞ்சம் செட்டிங் ஸ்ப்ரே அடித்து செட் செய்யவேண்டும்.
போனிடெய்லின்மீது முடியை சுற்றி பின் செய்த ஃபினிஷிங் ஹேர்ஸ்டைல்
மேற்பகுதி பின்னலின்மேல் முடிந்திருக்கும் நூல் தெரியவேண்டாம் என்று நினைப்பவர்கள், யு-பின் கொண்டு அதை மறைத்து குத்திக்கொள்ளலாம். சிலருக்கு இறுக்கமான ஹேர்ஸ்டைல் பிடிக்காது. அவர்கள் மேலே உள்ள முடியை கொஞ்சம் இழுத்துவிட்டுக்கொள்ளலாம். இப்படிச் செய்வதால் முன்பகுதியில் முடி அழகான லேயர்களாக தெரியும்.
நிறைய சிறுபிள்ளைகள் மற்றும் குழந்தைகள் விசேஷ நாட்களில் கலர்ஃபுல் ஹேர்ஸ்டைல் செய்துகொள்ள ஆசைப்படுவார்கள். அவர்கள் இந்த ஹேர்ஸ்டைலை செய்து அசத்தலாம்.